புஷ்பா ஒரு செம்மர கடத்தல்காரன். தன் மனைவிக்கு தன்னை முதல்வருடன் ஒரு புகைப்படம் எடுத்துப் பார்க்க ஆசை. அந்த புகைப்படத்தை எடுக்க புஷ்பா முயற்சிக்க, ஆனால் கடத்தல்காரனுடன் புகைப்படம் எடுக்க முதல்வர் மறுக்கிறார். அந்த கோபத்தில் அவரை முதல்வர் பதவியிலிருந்து இறக்கி சித்தப்பாவை முதல்வராக்க முயற்சிக்கிறான் புஷ்பா.
ஒருபுறம் தன்னுடைய சிவப்பு சந்தனக் கட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அதை கைப்பற்ற நினைக்கிறார் போலீஸ் அதிகாரி பன்வார் சிங். அவரிடமிருந்து சந்தன கட்டைகளை புஷ்பா காப்பாற்றினாரா ? மனைவியின் ஆசையை நிறைவேற்றினாரா ? தன் முதல் எதிரி பகத் பாஸிளிடம் இருந்து இருந்து எப்படி தப்பித்தார் ?
இம்மூன்றையும் ஒன்றிணைத்து முதல் பாகத்தில் கூலியாக இருந்து பிறகு படிப்படியாக வளர்ந்து செம்மர கட்டைகளின் அரசனான புஷ்பா, இந்த இரண்டாம் பாகத்தில் சிண்டிகேட் தலைவரான பிறகு புஷ்பராஜின் சவால்களின் தொடர்ச்சியின் கதையை திரைக்கதையாக மாற்றியமைத்துள்ளார் இயக்குனர் சுகுமார்.
அல்லு அர்ஜூன் ஹீரோயிசத்தைக் ஹாலிவுட் லெவலுக்கு மாற்றி ஒரு ஒரு இன்டர்நேஷனல் நட்சத்திரமாக அல்லு அர்ஜுனை படம் முழுக்க வலம் வர வைத்துள்ளார். தாய்மார்களின் ஆதரவை பெறுவதற்காக இரண்டாம் பாகத்தில் குடும்ப உணர்வுகளுக்கு ஒரு இடம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். புஷ்பா மற்றும் பன்வர் சிங் ஷெகாவத்தின் காம்பினேஷனில் வரும் காட்சிகள் அதிரடியாக மட்டுமல்லாமல், நகைச்சுவையாகவும் நகர்த்தியிருப்பது ரசிக்கும்படியாக உள்ளது.
அல்லு அர்ஜுன் புஷ்பா கதாபாத்திரம் மூலம் நம்மை படம் முழுக்க கட்டிப்போட்டு வைத்து விட்டார். அம்மன் கெட்டப்பில் அல்லு அர்ஜுனின் நடிப்பு அட அட அட அட… அசத்தி விட்டார் மனுஷன். இனிமேல் அவரை இன்டர்நேஷனல் ஸ்டார் என்று அழைக்கலாம்.
ராஷ்மிகா தனது நடிப்பு, நடனம் இரண்டிலும் முதல் மார்க் எடுத்துள்ளார். எந்த அளவுக்கு அல்லு அர்ஜுனை நாம் ரசிக்கிறோமோ அதே அளவுக்கு பகத் பாசிலின் நடிப்பு நம்மை ஈர்க்கிறது.. ராவ் ரமேஷ் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் நடிப்பு படத்தின் பக்க பலம்.
படத்தில் பல கிளைக் கதைகள் பிரிந்தாலும் அவை அனைத்துக்கும் ஒன்று சேர்த்து திரைக்கதை அமைத்து சிறப்பாக இயக்கி இருக்கும் இயக்குனர் சுகுமாருக்கு நமது வாழ்த்துக்கள்.
புஷ்பா 2 ; ஆக்ஷன் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்