spot_img
HomeNewsசங்ககிரி ராஜ்குமார் 'பயாஸ்கோப்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

சங்ககிரி ராஜ்குமார் ‘பயாஸ்கோப்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான சத்யராஜ்- சேரன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் ‘பயாஸ்கோப்’ திரைப்படம் ஜனவரி 3 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகு இந்த திரைப்படம் ‘ஆஹா ஃபைண்ட்’ டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.

சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பயாஸ்கோப்’ திரைப்படத்தில் சத்யராஜ், சேரன், சங்ககிரி ராஜ்குமார், சங்ககிரி மாணிக்கம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மேலும் இந்த உண்மை கதையில் அசலான கதை மாந்தர்களே அவரவர் வேடங்களில் நடித்திருக்கிறார்கள். முரளி கணேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு தாஜ்நூர் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் வெளியீட்டில் புரொடியூசர் பஜார் நிறுவனத்துடன் சங்ககிரி ராஜ்குமாரும் இணைந்திருக்கிறார்.

‘பயாஸ்கோப்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பும், ‘ஆஹா ஃபைண்ட்’ டிஜிட்டல் தளத்தின் தொடக்க விழாவும் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆஹா டிஜிட்டல் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரவிகாந்த், ஆஹா தமிழ் உள்ளடக்கம் மற்றும் வியூகங்கள் பிரிவின் மூத்த துணை தலைவர் கவிதா ஜௌபின், புரொடியூசர் பஜார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி.கே. திருநாவுக்கரசு, இணை நிறுவனர்  விக்ரம், தொழிலதிபர் அதியமான், இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் , இசையமைப்பாளர் தாஜ்நூர் ஆகியோருடன் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே. பாக்யராஜ் கலந்து கொண்டார்.

ஆஹா தமிழ் பிரிவின் உள்ளடக்கம் மற்றும் வியூகங்கள் பிரிவின் மூத்த துணை தலைவர் கவிதா ஜௌபின் பேசுகையில், ”ஆஹா தமிழ் அதன் தொடக்க தினத்திலிருந்து புதிய முயற்சிகளுக்கும், வித்தியாசமான கதைகளுக்கும் வாய்ப்பு வழங்கி வருகிறது. ஜல்லிக்கட்டை பின்னணியாகக் கொண்ட ‘பேட்டை காளி’ இணைய தொடர் ஆஹா தமிழில் வெளியானது.  இதனை இயக்கியவரும் அறிமுக இயக்குநர் தான். இதனைத் தொடர்ந்து ‘ரத்த சாட்சி’, ‘உடன் பால்’ என வித்தியாசமான படைப்புகள் ஆஹா தமிழ் டிஜிட்டல் தளத்தில் வெளியாகின. அந்த வரிசையில் தற்போது ஆஹா ஃபைண்ட் எனும் புதிய முயற்சியை தொடங்கி இருக்கிறோம்.

நாம் தற்போது வாழ்க்கையில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். எதையும் பார்ப்பதற்கு நமக்கு நேரமில்லை. நம்மில் பலரும் நிறைய முறை ரயிலில் பயணித்திருப்போம். ஆனால் எத்தனை பேர் ரயில் தண்டவாளங்களுக்கு இடையே முளைக்கும் சிறிய பூக்களை கண்டு ரசித்திருப்போம்? அந்த தண்டவாளங்களுக்கு இடையே நிறைய சுவாரசியமான விஷயங்கள் இருக்கின்றன. மஞ்சள் வண்ணத்திலும், ஊதா வண்ணத்திலும் பூக்கள் பூத்திருக்கும். அதேபோல் தமிழ் திரையுலகில் நிறைய நல்ல தரமான திரைப்படங்கள் நாள்தோறும் வருகை தந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அவற்றை எப்படி சந்தைப்படுத்த வேண்டும் என்ற வழிமுறையை தெரியாதிருக்கிறார்கள்.‌ இதனால் நல்ல திரைப்படங்கள் பார்வையாளர்களின் கண்ணில் படாமல் மறைந்து விடுகின்றன. இந்த நிலை இனி ஏற்படக் கூடாது என்ற காரணத்திற்காக தொடங்கப்படுவது தான் ஆஹா ஃபைண்ட்.

இந்த டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் முதல் திரைப்படம் ‘பயாஸ்கோப்’. இதனை புரொடியூசர் பஜார் நிறுவனத்தினர் தான் எங்களிடம் அறிமுகப்படுத்தினார்கள். அவர்கள் எங்களுக்காக இந்த படத்தை திரையிட்டபோது இதன் திரைக்கதை உருவாக்கம், புது சிந்தனை ஆகியவற்றைக் கடந்து இந்த திரைப்படம் ஒரு குடும்பமாக எடுக்கப்பட்ட விதம் கவர்ந்தது. பொதுவாக பேரன்களுக்கு தாத்தா பாட்டிகள் கதை சொல்வார்கள். ஆனால் இந்த பயோஸ்கோப் படத்தில் பேரன் சொன்ன கதையை தாத்தா பாட்டி கேட்டதுடன் நில்லாமல் கடினமாக உழைத்து படத்தில் நடித்து தயாரித்திருக்கிறார்கள். அதனால் இந்தத் திரைப்படத்தை எங்களுடைய ஆஹா ஃபைண்ட் தளத்தில் முதல் திரைப்படமாக வெளியிடுவதில் பெருமிதம் அடைகிறோம்.

இந்த திரைப்படத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்திய புரொடியூசர் பஜார் நிறுவனத்தினர் இப்படத்தை நிறைய மக்களிடம் சேர்க்க வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை தெரிவித்தனர். அதற்காக அவர்களும் தங்களால் இயன்ற முழுமையான ஒத்துழைப்பை தற்போது வரை வழங்கி வருகிறார்கள். இதற்காக அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்விற்கு ‘பைபிள் ஆஃப் ஸ்க்ரீன் ப்ளே’ கே. பாக்யராஜ் வருகை தந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருடைய கை வண்ணத்தில் உருவான ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தை போல் தற்போது தமிழ் திரையுலகில் சித்திரத்தை வரையும் புது முகங்களுக்கு சுவராக ஆஹா ஃபைண்ட் இருக்கும். சத்யராஜ், சேரன், மிஷ்கின் ஆகியோர் வழங்கிய ஆதரவின் நீட்சியாகத்தான் ஆஹா ஃபைண்ட் இருக்கிறது.  ஆஹா ஃபைண்ட் தளத்தில் தொடர்ந்து இது போன்ற புதிய முயற்சிகளுக்கும், புதிய திறமைசாலிகளுக்கும் வாய்ப்புகள் உண்டு. இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.

ஆஹா சிஇஓ ரவிகாந்த் பேசுகையில், ”ஆஹா தமிழ் 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை ஆஹா தமிழ் ‘பேட்டை காளி’, ‘ரத்த சாட்சி’, ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’, ‘வேற மாதிரி ஆபீஸ்’ உள்ளிட்ட வெற்றி பெற்ற படைப்புகளை வழங்கி இருக்கிறது. ஆஹா தமிழ் பொழுதுபோக்கு தளம் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த படைப்புகளை வழங்கி வருகிறது. இதனுடைய அடுத்த கட்ட முயற்சியாக ஆஹா ஃபைண்ட் எனும் தளத்தை தொடங்கி இருக்கிறோம். ஆஹா தமிழ் டிஜிட்டல் தளம் புதிய திறமைசாலிகளுக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. மேலும் அவர்களுடைய படைப்புகளை உலக அளவிலான ரசிகர்களுக்கு கொண்டு சேர்க்கிறது. ஆஹா ஃபைண்ட் தளத்தில் முதல் முயற்சியாக முதல் திரைப்படமாக சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் உருவான ‘பயாஸ்கோப்’  வெளியிடப்படுகிறது. இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய புரொடியூசர் பஜார் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களை கவரும்,” என்றார்.

இசையமைப்பாளர் தாஜ்நூர் பேசுகையில், ”ஆஹா‌ ஃபைண்ட் தளத்தில் பயாஸ்கோப் படம் வெளியாவது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதனை இணைந்து வழங்கும் புரொடியூசர் பஜார் நிறுவனத்திற்கும் நன்றி.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பது என்பது சவாலானதாக இருந்தது. இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் எப்போது சந்தித்து பேசினாலும் புதிய விஷயங்களை நிறைய சொல்லிக் கொண்டே இருப்பார். அது இந்தப் படத்திற்கு எனக்கு இசையமைக்க உதவியாக இருந்தது.

இந்த படத்தினை பார்க்கும் போது என்னையும் அறியாமல் சில இடங்களில் கண்ணீர் சிந்தியிருக்கிறேன். சில இடங்களில் புன்னகை பூத்திருக்கிறேன். இந்தப் படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார் .

புரொடியூசர் பஜார் சிஇஓ ஜி கே திருநாவுக்கரசு பேசுகையில், ”எங்கள் நிறுவனம் திரைப்படங்களை சந்தைப்படுத்தும் நிறுவனம். குறிப்பாக ஒரு திரைப்படத்தின் டிஜிட்டல் தள உரிமைகளை விற்பனை செய்து தரும் நிறுவனம்.‌ இதனை நாங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக செய்து வருகிறோம். இயக்குநர் குழந்தை வேலப்பன் மூலமாக ‘பயாஸ்கோப்’ படத்தின் இயக்குநரான சங்ககிரி ராஜ்குமார் அறிமுகமானார். அதன் பிறகு பயோஸ்கோப் படத்தை பார்த்தோம். அந்த திரைப்படம் என்னை மிகவும் பாதித்தது.  நானும் திரைப்படத்தை தயாரிப்பதிலும், சந்தைப்படுத்துவதிலும் வெற்றியையும், தோல்வியையும் கண்டதால் அந்தப் படத்துடன் நான் என்னை உணர்வுபூர்வமாக இணைத்துக் கொண்டேன். இந்த படத்தை என்னுடைய படமாக நினைத்து ஆதரவை தொடர்ந்து வழங்கினேன். அதன் பிறகு ஒரு முறை ஆஹா நிறுவனத்தை சேர்ந்த கவிதாவை சந்தித்தேன்.

அதன் பிறகு அவர்களுக்கு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து இப்படத்தை பார்க்க வைத்தேன். அவர்கள் பார்த்தவுடன் படத்தை ஆஹாவில் வெளியிடுவதற்கு சம்மதம் தெரிவித்தார்கள். அதுமட்டுமில்லாமல் ஆஹா ஃபைண்ட் எனும் புதிய பிரிவை தொடங்கலாம் என்று தெரிவித்ததுடன் இல்லாமல் அதனை தொடங்கி, முதல் படமாக பயாஸ்கோப் படத்தை  வெளியிடுகிறார்கள். இதற்காக அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பயாஸ்கோப் படத்தின் பார்ட் 2 உருவாக்க வேண்டாம் என இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.  மற்றவர்கள் குறிப்பிடுவது போல் நீங்கள் வெவ்வேறு களங்களில், வெவ்வேறு தளங்களில் பயணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்தத் திரைப்படத்தை நாங்கள் முதலில் பத்து திரையரங்குகளில் திரையிடலாம் என திட்டமிட்டிருந்தோம். ஆனால் இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியான பிறகு 75 திரையரங்குகளில் வெளியிடுவதற்கான ஆதரவு கிடைத்திருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படத்திற்கு கூடுதல் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த திரைப்படம் ஜனவரி மூன்றாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஆகா ஃபைண்ட் டிஜிட்டல் தளத்தை தொடங்கி வைத்ததற்காக இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆஹா ஃபைண்ட் – இந்தியாவில் இதுவரை யாரும் மேற்கொள்ளாத புதிய முயற்சி இது என நான் உறுதியாக சொல்வேன். ஏனெனில் நாங்கள் இதுவரை உலகம் முழுவதும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட டிஜிட்டல் தள நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். அனைத்து முன்னணி டிஜிட்டல் தள நிறுவனங்களும் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படங்களை தான் தேர்ந்தெடுப்பார்கள்.

ஆஹா ஃபைண்ட்- க்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த டிஜிட்டல் தளத்துடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்களும் பெருமை கொள்கிறோம். தொடர்ந்து புதிய திறமைசாலிகளை கண்டறிந்து ஆஹா ஃபைண்ட் மூலம் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறோம்,” என்றார்.

இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேசுகையில், ”இது உணர்வுப்பூர்வமான தருணம். நான் உருவாக்கிய திரைப்படத்தால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்ட போது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

சுயாதீன திரைப்படங்கள் தான் மக்களின் பிரச்சனையை பேசும் என்பதனை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். சிறிய முதலீட்டு திரைப்படங்கள் தான் மக்களின் வாழ்வியலையும், மக்களின் துக்கங்களையும் பேசுகின்றன. சிறிய முதலீட்டு திரைப்படங்களை உருவாக்கும் போது தான் படைப்பாளிகளுக்கு மனநிறைவு கிடைக்கும் என நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறேன். உலகம் முழுவதும் சுயாதீன திரைப்படங்களுக்கு பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. உங்களிடம் நல்லதொரு கதை இருக்கிறதா, அதனை படமாக படைப்பாக உருவாக்குங்கள் என்றுதான் நான் புதுமுக இயக்குநர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இதற்கான சந்தைப்படுத்துதல் என்பது கடினமாக இருந்தது. அதனை தற்போது புரொடியூசர் பஜார் மற்றும் ஆஹா ஃபைண்ட் சந்தைப்படுத்தும். அதனால் கவலைப்பட வேண்டாம். உற்சாகமாக பணியாற்றுங்கள். இவர்கள் என்னை எப்படி காப்பாற்றினார்களோ, அதே போல் அனைத்து புதுமுக படைப்பாளிகளையும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

வெங்காயம் படத்தினை வெளியிடுவதற்கு என்ன தடைகள்  இருந்ததோ அதே தடைகள் பயாஸ்கோப் படத்திற்கும் இருந்தது.‌ இந்தத் தருணத்தில் புரொடியூசர் பஜார் நிறுவனம் எங்களுக்கும், எங்களைப் போன்ற படைப்பாளிகளுக்கும் ஆஹா போன்ற டிஜிட்டல் தளங்களுக்கும் இடையே பாலமாக செயல்பட்டார்கள். இதனால் புரொடியூசர் பஜார் நிறுவனத்திற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படத்தின் உருவாக்கத்திற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படத்தின் இசையமைப்பாளர் தாஜ்நூரிடம் இருக்கும் நேர்மையும், அறமும் தான் அவருடைய இசையாக வெளிப்படுகிறது. முதலில் அவர் சிறந்த மனிதர். அதன் பிறகு சிறந்த இசையமைப்பாளர். அடுத்த ஆண்டு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது பட்டியலில் அவருடைய பெயரும் இடம் பெறும் என உத்தரவாதம் அளிக்கிறேன்.

இப்படத்தின் உருவாக்குவதில் உடன் இருந்து பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் திரையில் தோன்றிய உறவினர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆஹா ஃபைண்ட் தளத்தை புதிய இயக்குநர்களுக்காக உருவாக்கியதற்கு இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ரவிகாந்த் அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பயாஸ்கோப் படத்தை தொடர்ந்து என்னுடைய இயக்கத்தில் உருவான இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து விரைவில் வெளியாக உள்ளன, தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ”அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த புத்தாண்டில் தமிழ் திரையுலகத்திற்கு ஆஹா ஃபைண்ட் எனும் புதிய நல்ல செய்தி ஒன்று கிடைத்திருக்கிறது. 2025ம் ஆண்டு புதிய படைப்பாளிகளுக்கு சிறப்பான எதிர்காலம் ஒன்று கிடைத்திருக்கிறது என்றால் அது ஆஹா ஃபைண்ட் தான். இதன் மூலம் சினிமாவை நோக்கி வரும் இளம் தலைமுறையினர் சார்பில், ஆஹா ஃபைண்ட் – க்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படத்தில் நடித்திருந்த பாட்டிமார்கள் அனைவரும் மிக இயல்பாக நடித்திருந்தனர். பல இடங்களில் வசனங்கள் அவர்களாகவே இயல்பாக பேசியது போல் இருந்தது.

இசையமைப்பாளர் தாஜ்நூர் தான் இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அவரும் இப்படத்திற்காக சிறப்பாக உழைத்திருக்கிறார்.

இப்படத்திற்காக இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் அவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை காட்சிகளாக உருவாக்கியிருக்கிறார். இதில் அவர் பாட்டிமார்களை நடிக்க வைத்தது பெரிய விசயம். ஏனெனில் நான் ‘சின்ன வீடு’ படம் எடுத்த பிறகு என்னுடைய பாட்டி என்னை கடுமையாக திட்டினார்கள்.

நான் திரையுலகில் அறிமுகமாகும்  போது தயாரிப்பாளர்களிடம், ‘நான் யாரிடமும் கதை சொல்ல மாட்டேன். என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பினை வழங்குங்கள்’ என்று தான் கேட்டுக் கொண்டேன். எங்களுடைய இயக்குநர் தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை வழங்கியதால் தான் எனக்கு இந்த நம்பிக்கை கிடைத்தது. ஆனால் அதுபோன்ற வாய்ப்பு சங்ககிரி ராஜ்குமாருக்கு கிடைத்திருக்காது. இருந்தாலும் தரமான படங்களை உருவாக்கியதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆஹா ஃபைண்ட் புதிய தளத்தில் முதல் முயற்சியாக பயாஸ்கோப் திரைப்படம் வெளியாவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இயக்குநர் ராஜ்குமார் பயாஸ்கோப் படத்தை தரமான படைப்பாகவே உருவாக்கி இருக்கிறார்.

படத்தில் குழந்தைகள் பேசும் உரையாடல்கள் இயல்பாகவும், கவனம் ஈர்க்கும் வகையிலும் இருந்தன. இந்தப் படத்திற்கு நிச்சயம் மக்கள் ஆதரவு தருவார்கள்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img