ஆதிமூலம் எனும் அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிக்கும், சாணக்கியர் எனும் அதிகாரத்திற்கு வர விரும்பும் அரசியல்வாதிக்கும் இடையே முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் பனிப்போர் நடைபெறுகிறது. கட்சித் தலைவரான பக்கிரிசாமி இருவரது ஆதரவையும் பெற்று கட்சியை நடத்துகிறார். ஆதி மூலத்திற்கு பல்லவ வர்மன் மற்றும் அலெக்சாண்டர் என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் தந்தை ஒருவர் தான் என்றாலும் தாய் வேறு வேறு. இதனால் இவர்களுக்கு இடையே போட்டி ஏற்படுகிறது. இது இவர்கள் படிக்கும் பாடசாலையில் மாணவ தலைவர் தேர்தலில் தொடங்கி அனைத்து மட்டத்திலும் நீடிக்கிறது. இறுதியில் இவர்களில் யார் எந்த பதவியை கைப்பற்றினர்? என்பதுதான் படத்தின் கதை.
ஆதி மூலத்தின் வாரிசுகளான பல்லவ வர்மனுக்கும், அலெக்சாண்டருக்கும் இடையேயான அரசியல் மோதல் நிகழ்கால அரசியல் நிகழ்வுகளின் பின்னணியில் பகடித்தனத்துடன் விவரிக்கப்படுவதால் சில காட்சிகள் ரசிக்க முடிகிறது. அதிலும் பாடசாலை மாணவ தலைவர் தேர்தலுக்காக பல்லவ வர்மன் விருப்பம் தெரிவிப்பதும், அவரை எதிர்க்க அலெக்ஸாண்டர் பாடசாலையில் நன்றாக படித்து அதிக பெருபேறு பெரும் ரங்கநாயகி எனும் மாணவியை சாணக்கியரின் பெண் வாரிசு உதவியுடன் போட்டியிட வைப்பதும் ருசிகரம். அதனைத் தொடர்ந்து பல்லவ வர்மன் தேர்தலில் இருந்து வாபஸ் பெற்று, மாணவ தலைவராக தெரிவு செய்யப்பட்ட ரங்கநாயகியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதும் சுவராசியமானது.
படத்தில் அரசியல் தொடர்பான உரையாடல்கள் விமர்சனங்களாக இருப்பதால்.. பார்வையாளர்களை எரிச்சலடைய வைக்கிறது. இருப்பினும் பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கு அரசியல் கல்வியை கட்டாயமாக்கப்படவேண்டும் என வலியுறுத்தி இருப்பதை வரவேற்கலாம்.
ஆதி மூலமாக யோகி பாபு அசத்தலான ஒன் லைனருடன் ரசிகர்களை கவர்கிறார். மீதமுள்ள அனைவரும் இயக்குநர் சொன்னதை செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கலை இயக்கம், பாடல்கள், பின்னணி இசை, இவை அனைத்தும் குறைந்தபட்ச தளத்தில் அமைந்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் என்.சங்கர் தயாள், தமிழக போட்டி அரசியல் மற்றும் குடும்ப அரசியலை, சிறுவர்கள் மூலம் நகைச்சுவையாக சொல்ல முயற்சித்திருக்கிறார்.
சிறுவர்களிடம் வேலை வாங்கிய விதம் மற்றும் பள்ளி மாணவர் தலைவர் தேர்தல் மூலம் அவர்களுக்கிடையே ஏற்படும் போட்டி, அதில் நடக்கும் சதி, ஏமாற்றம், அதை தொடர்ந்து இரண்டு சிறுவர்களின் அரசியல் எதிர்காலம் ஆகியவற்றை நகைச்சுவையாக சொல்லி பார்வையாளர்களை சிரிக்க வைத்து விடுகிறார் இயக்குநர் என்.சங்கர் தயாள்.