ஜே எஸ் கே பிலிம்ஸ் தயாரிப்பில் ஜே எஸ் கே இயக்கத்தில் ஜே எஸ் கே நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ஃபயர். ஒரு பிசியோதெரபிஸ்ட் திடீரென காணாமல் போகிறார். அவரின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. அந்தத் தேடுதல் வேட்டையில் அந்த பிசியோதெரபிஸ்ட் பல மன்மத லீலைகளை அரங்கேற்றி அதை தன் லேப்டாப்பில் வீடியோவாக பாதுகாத்து உள்ளார்.
இது போலீசில் கையில் சிக்குகிறது. காணாமல் போன கேஸ் இப்போது பாலியல் கேசாக மாறுகிறது. காணாமல் போன பிசியோதெரபிஸ்ட் எங்கே சென்றார் என்று தேடுவதற்குள் அவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் வருகிறது. கொலை செய்தது ஒரு வயோதிக வாட்ச்மேன் என்று தெரிய வர அவரை விசாரிக்கும் போது பல திடுக்கிடும் சம்பவங்கள் நம்மை தாக்குகின்றன. அது என்ன என்பதற்கு ஃபயர் படத்தை பாருங்கள்
இதுவரை தயாரிப்புத் துறையில் இருந்த ஜே எஸ் கே முதன் முறையாக இயக்குனராகவும் நாயகனாகவும் அவதாரம் எடுத்துள்ளார். படம் ஆரம்பிப்பது அவர் நினைவுகளில் இருந்து தான். பல படங்களை தயாரித்து அனுபவத்தின் காரணமாக இயக்கத்தில் ஒரு தெளிவு தென்படுகிறது. எந்த ஒரு இடத்திலும் தொய்வில்லாமல் காட்சிகள் நகருகின்றன.
நடிகனாக ஜே எஸ் கே மிகவும் எதார்த்த மனிதனாக தன் பங்களிப்பை சிறப்பாக வழங்கி இருக்கிறார். அவரின் கதாபாத்திரம் இன்ஸ்பெக்டர் என்பதால் அதற்கு ஹேர் கட் செய்ய வேண்டும். அதை செய்யாத காரணத்தினால் தொப்பியை கையில் வைத்துக் கொண்டு தன் பங்களிப்பை வழங்குகிறார். மற்றும் சாந்தினி தமிழரசன், துர்கா, சாக்ஷி அகர்வால், மகாலட்சுமி, மீனாட்சி இவர்களின் கவர்ச்சி, படம் பார்ப்பவர்களின் எழுச்சி.. படம் முழுவதும் கவர்ச்சி கடல் அலை போல அசைபோட அதை பார்க்கும் மக்களும் உச் கொட்டுகின்றனர்.
படுக்கையறை காட்சிகளும் குளியல் அறை காட்சிகளும் குளுகுளுவென்று ரசிகனை சூடு ஏத்துகின்றன. படம் பார்க்கும் மக்களுக்கு இப்படியும் நடக்குமா, இப்படியும் நடக்கலாம் என்று திரைக்கதை வடிவமைப்பு சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. கணவனை இழந்த விதவை, வெளிநாட்டில் இருக்கும் கணவன், கணவனால் பிரயோஜனம் இல்லாத பெண் இப்படிப்பட்டவர்களின் இச்சைகளை இளைப்பாறி கனிகளை சுவைக்கும் பிசியோதெரபிஸ்ட் ஒரு காமுகன் என்று நினைத்தால் அதற்கும் ஒரு படி மேல் போய் ஒரு நயவஞ்சக கயவனாக மாறுகிறான். முடிவு மரணம்.. மரணத்தை ஏற்படுத்தியவன் யார் ? அதுதான் படத்தில் இறுதிக்காட்சியில் தெரிய வருகிறது.
படம் முழுக்க கவர்ச்சி கரைபுரண்டாலும் இறுதிக்காட்சியில் சொல்லப்படும் விஷயங்கள் நாம் அனைவரும் கவனிக்க வேண்டியவை. ஒரு சிறந்த சோசியல் மெசேஜை ஃபயர் படத்தின் மூலம் தெரிவித்து இருக்கிறார் இயக்குனர் ஜே எஸ் கே ஒரு நடிகராகவும் ஒரு இயக்குனராகவும் ஒரு தயாரிப்பாளராகவும் ஜே எஸ் கே ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளார்.
ஃபயர் – எரிவது நெருப்பாக இருப்பினும் அணைப்பது நாமக இருக்க வேண்டும்