நகைச்சுவை நாயகன் கவுண்டமணியின் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் ஒத்த ஓட்டு முத்தையா. நகைச்சுவையை மட்டுமே நாங்கள் தரப் போகிறோம் என்ற முடிவில் நகைச்சுவையும் தந்து நம்மை பாடா படுத்தியும் இருக்கும் படம் ஒத்த ஓட்டு முத்தையா. படம் என்ன சொல்ல வருகிறது ? பார்க்கலாம்.
பழுத்த அனுபவம் மிக்க அரசியல்வாதியான முத்தையா தேர்தலில் போட்டியிட்டு ஒரே ஒரு ஓட்டினை பெற்று தோல்வி அடைகிறார். அதன் பிறகு அந்தக் கட்சியை விட்டு வெளியேறி, சுயேசையாகப் போட்டியிடுகிறார். இதில் அவர் வெற்றி பெறுகிறாரா? இல்லையா? என்பது ஒரு புறமும் மறுபுறத்தில் அவருடைய திருமணமாகாத மூன்று தங்கைகளுக்கும் மாமியார் தொல்லைகள் இல்லாத வகையில் ஒரே குடும்பத்தில் சகோதரராக இருக்கும் மூவரை திருமணம் செய்து வைக்க தீர்மானிக்கிறார். ஆனால் அவருடைய தங்கைகள் மூவரும் தங்களின் மனதை கவர்ந்த வெவ்வேறு ஆண்களை காதலிக்கிறார்கள். இவர்களின் திருமணம் அண்ணனின் விருப்பப்படி நடைபெற்றதா? அல்லது தங்கைகளின் விருப்பப்படி நடைபெற்றதா? என்பதும் இணைத்து சொல்லப்படுவது தான் இந்த ‘ஒத்த ஒட்டு முத்தையா’ படத்தின் கதை.
கவுண்டமணியின் முகத்தில் முதுமை தெரிந்தாலும் அவரால் சுறுசுறுப்பாக இயங்க முடியவில்லை என்றாலும் அவர் பேசும் வசனங்கள் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது. அதிலும் அரசியல் வசனங்களை நையாண்டித்தனத்துடன் பேசி ரசிகர்களை வசப்படுத்துகிறார். படம் முழுவதிலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கவுண்டமணி பாணியிலான நகைச்சுவைகள் கொட்டி கிடக்கிறது. இருந்தாலும் உருவ கேலி தொடர்பான நகைச்சுவை மிகையாக இடம் பிடித்திருக்கிறது. இதை தவிர்த்து இருக்கலாம்.
படத்தின் கதையை மட்டுமல்ல படத்தையும் கவுண்டமணி தான் தாங்கி பிடித்திருக்கிறார். அவர் மட்டுமே நட்சத்திர முகமாக இருப்பதால் அவர் இல்லாத காட்சிகளில் ரசிகர்களுக்கு சில தருணங்களில் சோர்வு ஏற்படுகிறது. பொதுவாக இது போன்ற கொமடி திரைப்படங்களில் ‘நோ லாஜிக் ஒன்லி மேஜிக் ‘ என்ற மந்திரம் தான் மையச் சரடு. அதனை இயக்குநர் சரிவர செய்திருக்கிறார். ஆனால் இந்த காலத்து இளைய தலைமுறையினருக்கு இது மட்டும் போதாது. அதனால் ரசிகர்களை படமாளிகையில் இந்தப் படம் அவர்களின் பொழுதுபோக்கு அம்சத்திற்கு போதுமானதாக இல்லை.
கவுண்டமணியை தவிர்த்து வேறு அனைத்து நடிகர்களும் இயக்குநர் சொன்னதை மட்டும் தான் செய்திருக்கிறார்கள்.
பாடல்கள்,பின்னணி இசை,ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ,கலை இயக்கம் , என அனைத்து விடயங்களும் குறைந்தபட்சத்தரத்திலேயே இருக்கின்றது
கடந்த கால அரசியல் நிகழ்கால அரசியல் காதல் என நகைச்சுவைக்கு என்ன செய்ய முடியுமோ அந்த அளவுக்கு இயக்குனர் சாய் ராஜகோபால் படத்தை இயக்கியிருக்கிறார். உடன் யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், சித்ரா லட்சுமண் இன்னும் நட்சத்திர பட்டாளங்களை துணைக்கு வைத்து தன் நகைச்சுவை களத்தை மெருகேற்ற வைத்து படத்தை நகர்த்திருக்கிறார்.
80 வயதை தாண்டிய கவுண்டமணி தன் நக்கல் நையாண்டியை இன்னும் வைத்துக் கொண்டிருக்கிறார் குரலில் பிசிறு தட்டினாலும் அதை பொருட்படுத்தாமல் அவரின் உழைப்பை பாராட்ட வேண்டும்
ஒத்த ஓட்டு முத்தையா – ஒரே ஓட்டு முத்தையா