பார்த்த காதல், பார்க்காத காதல், சேர்ந்த காதல், சேராத காதல், சகோதர காதல், பெற்றோர் காதல், பிள்ளைகள் காதல், இப்படி ஏகப்பட்ட காதலை நாம் பார்த்து இருப்போம் ஆண், பெண் காதலை பார்த்து, அதற்கு ஆதரவு தெரிவித்து, எதிர்ப்பு தெரிவித்து, இப்படி காதலு.க்குள் ஏகப்பட்ட காதல். ஆனால் இந்த படத்தில் ஒரு பெண்ணும் பெண்ணும் காதலித்து திருமணம் செய்ய முற்படும்போது ஏற்படும் பிரச்சனைகளின் விளைவே காதல் என்பது பொதுவுடமை.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் லிஜோமோல் ஜோஸ், சவாலான கதாபாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்டிருக்கிறார். ஆணுக்கு பெண் மீது வருவது போல் தான் தனது காதலும், என்று தனது பெற்றோரிடம் வாதிடுவதும், சிறிது நேர இடைவெளி கிடைத்தாலும், தனது காதல் துணையை அரவணைத்து அன்பு செலுத்துவதும், என்று கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
பாசமுள்ள தாயாக வாழ்ந்துள்ளார் ரோகிணி. கணவனை பிரிந்து தன்னுடைய லட்சியத்தை நோக்கி பயணிக்கும் பெண்ணியவாதியாக இருந்தாலும், மகளின் காதலை அறிந்து கொள்ளும் போது அதை நம்பமுடியாமல் தவிக்கும் தவிப்பு, தாயின் மனநிலையில் அவர் செய்யும் செயல்கள் அனைத்தும் தத்ரூபமாக உணர்ச்சிகளின் குவியலாக அனுபவ நடிப்பால் மெய் சிலிர்க்க வைக்கிறார்.
நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் வினித், இன்றைய பெற்றோர்களின் மனநிலையை பிரதிபலித்திருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் பிரகாசமாக தெரிகிறார் நடிகர் வினித். கதாபாத்திரத்தை நன்றாக உணர்ந்து கொண்டு வசனங்களை கடத்திய விதம் அருமை.
கண்ணன் நாராயணின் இசை, ஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவு, டேனி சார்லஸின் படத்தொகுப்பு, ஆறுசாமியின் கலை, உமாதேவியின் பாடல் வரிகள் அனைத்தும் கதைக்களத்தில் இருந்து சிறிதளவும் விளாகமல் பயணித்திருக்கிறது.
தமிழ் சினிமாவுக்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் இது ஒரு புதுசு ஆனால் வித்தியாசமான திரைக்கதை நம்மை ஈர்க்க வைக்கிறது. அதோடு நம்மை சிந்திக்கவும் வைக்கிறது. எழுதி இயக்கியிருக்கும் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், தன் பாலினச் சேர்க்கை என்பது உடல் தேவை அல்ல உணரவேண்டிய மனிதர்களின் உணர்ச்சி, என்பதை அழுத்தமாக பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார்.
.