‘மர்மர்’ என்பது ஒரு ஃபவுண்ட் ஃபூட்டேஜ் (Found Footage) பாணியில் எடுக்கப்பட்ட திகில் திரைப்படம். இது தமிழ் சினிமாவில் அப்படியான முயற்சிக்கு ஒரு முன்னோடி முயற்சியாக இருக்கிறது.
அமானுஷ்ய விடயங்கள் தொடர்பான தகவல்களை காணொளியாக பதிவிடுவதை தங்களுடைய முத்திரையாக கொண்டிருக்கும் நான்கு யூட்யூப் சேனலை சேர்ந்த இளைஞர்கள் தமிழகத்தில் உள்ள ஜவ்வாது மலையில் அமையப்பெற்றிருக்கும் காத்தூர் என்னும் கிராமத்தில் நடைபெறும் அமானுஷ்ய சம்பவங்களை கேள்வி படுகிறார்கள். அதாவது காத்தூர் என்ற அந்த கிராமத்தில் மங்கை எனும் பெண்ணுடைய ஆவி மக்களை பழி வாங்குகிறது என்ற விடயத்தையும், பௌர்ணமி தினத்தன்று கன்னிமார்கள் இங்குள்ள குளத்தில் நீராடுகிறார்கள் என்ற விடயத்தையும் கேள்விப்பட்டு அதனை பற்றிய உண்மையை காணொளியாக படமாக்கி, தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றுவதற்காக கிராமத்திற்கு செல்கிறார்கள். அங்கே அவர்களுக்கு என்ன நடந்தது? என்பதை விவரிக்கும் படைப்பு தான் ‘மர்மர்’ படத்தின் கதை.
ரிச்சி கபூர், தேவ்ராஜ் ஆறுமுகம், சுகன்யா ஷண்முகம், யுவிகா ராஜேந்திரன், அரியா செல்வராஜ் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். ஒரு காட்டுக்குள் சிக்கிக்கொண்டு பயத்தில் உரைந்து போகும் காட்சிகளில் படம் பார்ப்பவர்களையும் பதற வைக்கும் அளவுக்கு தங்களது பயத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ், இரவு நேரத்தில் மிக குறைந்த வெளிச்சத்தில் காட்சிகளை படமாக்கியிருந்தாலும், காட்சிகளை மிக தரமாக படமாக்கியிருக்கிறார். அதிலும் கேமராவில் பதிவு செய்யப்படும் காட்சிகளை கண்ணுக்கு உறுத்தாத வகையில் காட்சிப்படுத்தி திரைக்குள் இருக்கும் பயத்தை பார்வையாளர்களிடத்திலும் கடத்தியிருக்கிறார்.
படத்தின் முதன்மை பலம்
உண்மைக்கு நெருக்கமான காட்சிகள்: நேரடியாக கேமராவில் பதிவாகும் காட்சிகள், பயத்தை அதிகரிக்கும்.
ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பதிவு: இருள் சூழ்ந்த காட்டுப் பகுதிகளில் மிகக் குறைந்த வெளிச்சத்தில் எடுக்கப்பட்டதால், திரையில் உண்மையான திகில் அனுபவம் கிடைக்கிறது.
நடிப்பு: நடிகர்கள் எல்லோருமே எதார்த்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள், குறிப்பாக பயம் மற்றும் பதட்டம் காட்டும் விதம் பாராட்டத்தக்கது.
பலவீனங்கள்
படத்தின் நீளம் : சில இடங்களில் காட்சிகள் நீளமாக இருப்பதால், சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது.
சுவாரஸ்யம் மந்தமாகும் இடங்கள் : சில இடங்களில் கதையின் ஓட்டம் நின்றுவிடுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
திகில் படம் விரும்புவோருக்கு இது வித்தியாசமான அனுபவம் தரக்கூடிய படமாக இருக்கும். சிறிய திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தால், இது இன்னும் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.