விமல், சூரி கூட்டணியில் ஒரு நகைச்சுவை கதைக்களம் தான் ‘படவா’. ஊரில் வேலை வெட்டி இல்லாமல் திரியும் விமல், சூரி இருவரும் மக்களை ஏமாற்றி அவர்களுக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் செயல்பாடுகளின் தாக்கத்தினால் மக்களின் நிம்மதி பறிபோக, விமலை ஊர் மக்கள் தங்களின் சொந்த பணத்தில் மலேசியா அனுப்பி வைக்கின்றனர்.
மலேசியாவில் வேலை செய்யும் ஆட்குறைப்பு காரணமாக விமல் வேலை பறிபோக, மீண்டும் சொந்த ஊருக்கு வருகிறார். கிராமத்திற்கு வரும் விமலுக்கு ராஜ மரியாதை நடக்க என்னவென்று புரியாமல் இருக்கும் விமலுக்கு மலேசியாவில் இருக்கும் நண்பன், “உனக்கு லாட்டரியில் 10 கோடி ரூபாய் விழுந்திருப்பதாக ஊரில் இருக்கும் நண்பனுக்கு ஒரு பொய்யை கூறி இருக்கிறேன் அதன் விளைவு தான் இது” என்று சொல்ல விமல் அதிர்ச்சி ஆகிறார்.
அடுத்து என்ன செய்வது என்று விமல் புரியாமல் இருக்கும் நேரத்தில் ஊர் மக்கள் அவரை ஊர் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கின்றனர். பிறகு நடக்கும் சம்பவங்களின் நகைச்சுவையே ‘படவா’.
வெட்டியாக ஊர் சுற்றுவது, நாயகியை கண்டதும் காதல் கொள்வது, பிறகு வில்லனை எதிர்ப்பது, என்று ஒரு நடிகராக விமல் தொடர்ந்து செய்து வரும் வேலையை தான் இந்த படத்திலும் செய்திருக்கிறார். அவரது அப்பாவித்தனமான முகமும், வெகுளித்தனமான நடிப்பும் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கிறது.
அதே போல வழக்கமாக நாயகனுடன் சுற்றும் காமெடி கதாபாத்திரம்தான் சூரிக்கு. இக்கதையின் இரண்டாம் நாயனே இவர் தான் என்று சொல்லும் அளவுக்கு பல இடங்களில் சோலோவாகவும் ஸ்கோர் செய்திருக்கிறார் சூரி.
நாயகியாக நடித்திருக்கும் புதுவரவு ஷ்ரிதா ராவ். ஒன்றிரண்டு காட்சிகளில் காதலித்து, ஒரு காட்சியில் கோபித்து, இரண்டு டூயட் பாடுவதோடு சரி
வில்லனாக கே ஜி எஃப் ராம், நடிப்பில் மிரட்டியிருக்கிறார். தனது தொழிலுக்காக எந்த எல்லை வரை செல்வேன் என்பதை கூறும் இடத்தில் வில்லன் கதாபாத்திரத்தை நன்றாகவே தூக்கி பிடித்திருக்கிறார்.
தேவதர்ஷினி,நமோ நாராயணன் ஆகியோரின் வேடங்களும் அவர்களுடைய நடிப்பும் விமலுக்கும் படத்துக்கும் பலமாக அமைந்திருக்கிறது.
ஜான் பீட்டரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் வண்ணமயமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.மையக் கதைக்கேற்ற ஒளியமைப்பு படத்துக்கேற்ப இருக்கிறது.
ஒரு பொறுப்பற்றவன் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பைக் கொடுத்தால்அவனைப் பொறுப்புள்ளவனாகவும் நல்லவனாகவும் மாற்ற முடியும் என்கிற கருத்தை நகைச்சுவை முலாம் பூசப்பட்ட இந்த கதையில் பூடகமாகச் சொல்லி இருக்கிறார் இயக்குநர் கே.வி.நந்தா. சீமைக் கருவேலம் மரங்களை சிலர் தங்களது சுயநலத்திற்காக வளர்ப்பதை பற்றி மேலோட்டமாக பேசியிருந்தாலும், அதை அழிப்பதற்கான பிரச்சாரத்தை அழுத்தமாக பதிவு செய்து பாராட்டு பெறுகிறார்.