துஷ்யந்த் ஜெயபிரகாஷ், கேப்ரில்லா, ராதாரவி, சரண்ராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் வருணன்.
கதைக்களம் ; வட சென்னையில் தண்ணி கேன் வியாபாரம் செய்யும் ராதாரவி மற்றும் சரண்ராஜ் இருவரும் ஒப்பந்தம் இல்லாமல் அவர் அவர் ஏரியாவில் தண்ணீர் கேன் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கீழே வேலை செய்யும் நபர்களுக்குள் நடக்கும் போட்டியே வருணன் படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் மற்றும் நாயகியாக நடித்திருக்கும் கேப்ரில்லா கதாபாத்திரத்திற்கு ஏற்ப கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். மற்றொரு நாயகன், நாயகியாக நடித்திருக்கும் பிரியதர்ஷன் மற்றும் ஹரிபிரியா ஜோடிக்கும் வழக்கமான வேலை தான் என்றாலும் அதை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
தண்ணீர் கேன் நிறுவனம் நடத்தும் அண்ணாச்சியாக ராதாரவி. வழக்கம்போல சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார். தன்னிடம் வேலை பார்ப்பவர்களிடம் கனிவும், கண்டிப்புமாக நடந்து கொள்வது, காவல் அதிகாரியிடம் அதிகாரமாக பேசுவது என இந்தப் படத்திலும் முத்திரை பதித்திருக்கிறார். குடும்பத்தினரின் அயோக்கியத்தனங்களை சமாளிக்க முடியாத திக்குவாய் நபராக சரண்ராஜும் சிறப்பு
வில்லனாக நடித்திருக்கும் சங்கர்நாக் விஜயன் கவனம் ஈர்க்கிறார். ஜீவா ரவி, மகேஸ்வரி, அர்ஜுனா கீர்த்திவாசன், ஹைட் கார்த்தி, கெளசிக், கிரண்மயி ஆகிய அனைவரும் நன்று.
இசையமைப்பாளர் போபோ சசியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்தாலும், சில இடங்களில் கொஞ்சம் ஓவராக பில்டப் கொடுத்திருக்கிறது.
தண்ணீர் கேன் வியாபாரம் தான் படத்தின் கதை என்றாலும் அதற்கு ஏன் வருண பகவான் பெயர் வைத்தார்கள். தண்ணீர் என்பதலா ? நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயம் இந்த பஞ்சபூதங்களில் நீர் என்று எடுத்து கொண்டு எதையோ சொல்ல வந்து எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் படத்தில்.
வருணன்– வறண்ட பூமி