சுந்தர்.சி, வடிவேலு, கேத்தரின் தெரசா, வாணி போஜன், மைம் கோபி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் கேங்கர்ஸ்.
ஊரின் பெரிய மனிதராகவும் பள்ளிக்கூடத்தில் தாளாளராகவும் மைம் கோபி இருக்கிறார். அந்தப் பள்ளியில் மிக புத்திசாலியான பெண் காணாமல் போக அவளை கண்டுபிடிக்கும் பொறுப்பில் ஒரு போலீஸ்காரர் அந்த பள்ளிக்கூடத்தில் வாத்தியாராக வேலை செய்ய ரகசியமாக நியமிக்கப்படுகிறார். அங்கு பிடி மாஸ்டராக வரும் சுந்தர் சி பள்ளியில் நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்க இந்த சமயத்தில் காணாமல் போன மாணவியின் வாட்ச் கேத்தரின் தெரசாவிடம் இடம் கிடை க்கிறது.
அது பற்றி விசாரிக்க பள்ளி தாளாளரின் அண்ணன் மகனுடன் கேத்தரின் தெரசா செல்ல சென்ற இடத்தில், அந்த மாணவியை இங்கே தான் எரித்தோம் என்று அவன் சொல்ல உன்னையும் இங்கேதான் எரிக்கப் போகிறோம் என்று கூறி அவரை கொலை செய்ய முயற்சிக்க சுந்தர் சி வந்து காப்பாற்றுகிறார். அப்போது அவர் கூறும் கதை கேட்டு அனைவரும் பரிதாபப்பட்டு அவருக்கு உதவி செய்வதாக கூற, சுந்தர்.சி தன் திட்டத்தை துவங்குகிறார். சுந்தர் சி கூறியது என்ன ? அவருக்கு இவர்கள் உதவுவதாக சொன்னது என்ன ? சுந்தர்.சியின் திட்டம் என்ன ? தெரிந்து கொள்ள பாருங்கள் ‘கேங்கர்ஸ்’
நீங்கள் மிகுந்த பொருட்சளவில் ஒரு நகைச்சுவை படம் எடுக்க வேண்டும் என்ற தயாரிப்பாளர் ஏசி சண்முகத்தின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார் சுந்தர் சி. இயக்கமும் நாயகனும் சுந்தர் சி என்பதால் தனக்கேற்றார்போல் கதையையும் திரைக்கதையையும் சிறப்பாக வடிவமைத்திருக்கிறார். தனக்கு துணையாக வடிவேலுவை வைத்துக்கொண்டு அவர் செய்யும் அலப்பறை மிக அருமை.
சினிமா தியேட்டரில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க வடிவேலுவுடன் இவர் போடும் திட்டம் பக்கா. இறுதிக்காட்சியில் பணத்தை கொள்ளை அடித்து அதை எப்படி எடுத்து சென்றார் என்று தெரிய வரும்போது ஒரு இயக்குனராக சுந்தர்.சி ஜெயித்து இருக்கிறார்.
வடிவேலு.. இவரின் நக்கல் நையாண்டி அலப்பறை படத்தின் பக்க பலம். கேத்தரின் தெரசாவை ஒருதலையாக காதலித்துக் கொண்டு இவர் செய்யும் அலப்பறை தியேட்டரில் விசில் போட வைக்கிறது. தான் ஒரு பெரிய ரவுடி என்று கேத்தரின் தெரசாவிடம் நிரூபிப்பதற்காக சுந்தர்.சி அடித்து காயப்படுத்திய மயங்கி கிடந்த மைம் கோபியுடன் செல்பி எடுத்து அதை கேத்தரின் தெரசாவுக்கு மட்டுமல்லாமல் ஊரெல்லாம் அனுப்ப அதனால் நடக்கும் காமெடி கலாட்டா தியேட்டரில் கைதட்டல். சிங்கம் சிறுத்தாலும் சினம் போகாது என்பார்கள். வயதானாலும் வடிவேலு காமெடி டைமிங் மென்மேலும் மெருகேறி இருக்கிறது.
ஸ்கூல் டீச்சர் ஆக கேத்தரின் தெரசா. அழகு பதுமை. ஓரக்கண்ணால் சுந்தர்.சியை சைட் அடிக்கும் வாலிப வயது, தப்பை தட்டி கேட்கும் தைரிய மனது என தன் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.
முனிஸ்காந்த் எப்போதும் போல் இவர் பங்களிப்பு சிறப்பு. மற்ற நடிகர்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக வழங்கியிருக்கின்றனர். அது என்னவோ தெரியவில்லை சுந்தர் சி படம் என்றால் இறுதி காட்சியில் கோயில் சாமி, சிலை திருவிழா என எப்போதும் போல் களை கட்டுகிறது.
‘கேங்கர்ஸ்’ – இது ஒரு கோடை நகைச்சுவை திருவிழா