spot_img
HomeCinema Review‘கஜானா’ திரைப்பட விமர்சனம்

‘கஜானா’ திரைப்பட விமர்சனம்

 

நாகமலை என்ற பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைத்த பொக்கிஷம் இருப்பதாகவும், அதனை டைனோசர் காலங்களில் வாழ்ந்த யாளி விலங்கு பாதுகாத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.. அந்த பொக்கிஷத்தை எடுக்க பலர் முயற்சித்து பலியாகி கொண்டிருந்தாலும், பேராசை பிடித்த மனிதர்கள் பலர் அந்த பொக்கிஷத்தை அடைவதற்கு தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். அவர்களில் ஒருவராக நாயகன் இனிகோ பிரபாகர் தனது குழுவினருடன் நாகமலைக்கு செல்கிறார். மறுபக்கம், அதே பொக்கிஷத்தை கைப்பற்றுவதற்கான முயற்சியில் பிரபல அகழ்வாராய்ச்சியாளரான வேதிகாவும் ஈடுபடுகிறார். இவரகளுடன் யோகி பாபு மற்றும் நான் கடவுள் ராஜேந்திரனும் அந்த காட்டுக்குள் பயணப்படுகிறார்கள்.

இதற்கிடையே, பொக்கிஷம் இருப்பதாக நம்பப்படும் அந்த இடத்தில், நாக இனத்திற்கு சொந்தமான பஞ்ச பூதங்களையும் கட்டுப்படுத்தும் நவரத்தின கற்கள் இருக்கும், உண்மை தெரிய வருவதோடு, அதனை கைப்பற்றுவதற்காக பல வருடங்களாக போராடி வரும் கருட இனத்தின் தலைவி சாந்தினி, இனிகோ பிரபாகர் அந்த இடத்தை நெருங்கும்போது, அவரிடம் இருந்து அதனை கைப்பற்ற திட்டமிடுகிறார்.

நவரத்தின கற்களை கைப்பற்ற முயற்சிக்கும் இவர்களின் நிலை என்ன ஆனது ?, அதனை பாதுகாக்கும் யாளி உண்மையா ?, நாகமலையை சுற்றியிருக்கும் மாய உலகத்தின் பின்னணி என்ன ? போன்ற கேள்விகளுக்கு பிரமாண்டமான வி.எப்.எக்ஸ் காட்சிகள் மூலமும், சுவாரஸ்யமான ஃபேண்டஸி கற்பனை கதை மூலமும் பதில் அளிப்பது தான் ‘கஜானா’.

தமிழ் சினிமாவின் அட்வெஞ்சர் படங்கள் வருவது என்பதே மிக அரிதானது, அதில் அட்வெஞ்சர் உடன் ஃபேண்டஸி மற்றும் பிரமாண்டமான வி.எப்.எக்ஸ் காட்சிகளுடன் வெளியாகியிருக்கும் ‘கஜானா’ சிறுவர்களுக்கு மட்டும் இன்றி பெரியவர்களுக்கும் புதிய அனுபவத்தை கொடுக்கிறது.

படத்தின் ஆரம்பத்திலேயே திடுக்கிடும் காட்சிகள் மூலம் சீட் நுனியில் உட்கார வைக்கும் இயக்குநர் அடுத்தடுத்த காட்சிகளில் யானை, புலி, குரங்குகளுடனான சண்டைக்காட்சி, பாம்பு என பலவித விலங்குகளை வி.எப்.எக்ஸ் மூலம் மிரட்டலாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, இறுதியில் யாளி விலங்கை திரையில் தோன்ற வைத்து வியக்க வைத்திருக்கிறார். அந்த விலங்கின் உருவாக்கம் மற்றும் செயல்பாடுகளை மிக நேர்த்தியாக கையாண்டிருக்கும் வி.எப்.எக்ஸ் நிபுனர்களை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.

நாயகனாக நடித்திருக்கும் இனிகோ பிரபாகர், அட்வெஞ்சர் காட்சிகளில் அசத்தியிருப்பதோடு, ஆப்ஜெக்ட்டே இல்லாமல் அனிமேஷன் காட்சிகளுக்கு ஏற்ப கச்சிதமாக நடித்திருப்பதும், அதற்காக அதிகம் மெனக்கெட்டிருப்பதும் திரையில் தெரிகிறது.

அபாயங்கள் நிறைந்த வனப்பகுதியில் அசால்டாக வலம் வரும் யோகி பாபு மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன் கூட்டணி செய்யும் காமெடிகள் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது. இவர்களது காமெடி கதையோடு ஒட்டவில்லை என்றாலும், ரசிகர்களிடம் எளிதில் ஒட்டிக்கொண்டிருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.

பொக்கிஷத்தை தேடும் முயற்சியில் ஈடுபடும் வேதிகா மூலமாக கதை விரிவடைந்தாலும், அவருக்கு இதில் அட்வெஞ்சர் காட்சிகள் இல்லை. இருந்தாலும், இரண்டாம் பாகம் முழுவதிலும் அவர் தான் அதிரடி காட்டப்போகிறார், என்பதை படத்தின் முடிவு தெளிவுப்படுத்துகிறது.

இதுவரை நடித்திராத வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் சாந்தினி வில்லத்தனத்தையும் அழகாக வெளிக்காட்டி அசத்தியிருக்கிறார். கருட இனத்தைச் சார்ந்த அவரது கதாபாத்திரம் மற்றும் அதன் அனிமேஷன் காட்சிகள் நிச்சயம் சிறுவர்களை கவரும்.

பிரதாப் போத்தன், வேலு பிரபாகரன் ஆகியோரது அனுபவமான நடிப்பு படத்திற்கு அடையாளம் கொடுத்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர்கள் கோபி துரைசாமி மற்றும் வினோத்.ஜே.பி அடர்ந்த வனப்பகுதியின் அபாயத்தை ரசிகர்களிடம் கடத்துவதோடு, கிராபிக்ஸ் காட்சிகளுக்கு ஏற்ப நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் அச்சு ராஜாமணியின் இசையில், “போலாம் போலாம் ரைட்…” பாடல் முனுமுனுக்க வைக்கிறது. சிவன் பாடல் கதைக்களத்தை விவரிப்பதோடு, திரைக்கதையின் விறுவிறுப்பை அதிகரிக்கச் செய்கிறது. பின்னணி இசை மூலம் சண்டைக்காட்சிகளுக்கு கூடுதல் பிரமாண்டம் சேர்த்திருக்கும் அச்சு ராஜாமணி, படத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் விலங்குகளை நிஜ விலங்குகளாக ரசிகர்களை கொண்டாட வைக்கிறார்.

படத்தொகுப்பாளர் கே.எம்.ரியாஷ், படத்தில் பல கிளைக்கதைகள் இருந்தாலும், அனைத்தையும் தெளிவாக புரியும்படி காட்சிகளை தொகுத்திருப்பதோடு, தயாரிப்பாளரின் அத்தனை செலவுகளையும் திரையில் தெரியும்படி காட்சிகளை பயன்படுத்தியிருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் பிரபதீஸ் சாம்ஸ், ஃபேண்டஸி உலகத்தை தனது கற்பனை மூலம் உருவாக்கினாலும், அதற்கு வி.எப்.எக்ஸ் பணி மூலம் உயிரூட்டியிருக்கிறார். படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை பலவிதமான விலங்குகள் மற்றும் அவற்றிடம் இருந்து தப்பிக்கும் காட்சிகளை அட்வெஞ்சராக காட்டி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துபவர், யாளி என்ற மாபெரும் விலங்கு மற்றும் அதனுடனான சண்டைக்காட்சி மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் சீட் நுணியில் உட்கார வைத்துவிடுகிறார்.

கற்பனை கதைக்கு சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்திருப்பதோடு, ஃபேண்டஸி, அட்வெஞ்சர், அனிமேஷன் ஆகியவற்றின் மூலம் இந்த ‘கஜானா’-வை பிரமாண்ட படைப்பாக கொடுத்திருக்கும் இயக்குநர் பிரபதீஸ் சாம்ஸ், தனது முயற்சியில் சாதித்து விட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img