கதையின் நாயகனாக காளி வெங்கட் களமிஇறங்க வெளிவந்திருக்கும் படம் மெட்ராஸ் மேட்னி. என்ன சொல்ல வருகிறது படம் ?
சத்யராஜ் ஒரு கதாசிரியராக இருந்து கொண்டு அவரின் பார்வையில் எழுதப்படும் கதை தான் மெட்ராஸ் மேட்னி. காளி வெங்கட் ஆட்டோ ஓட்டி தன் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். ஒரே சீராக வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. அவரின் பெண் படித்து பெங்களூரில் வேலை செய்கிறார். மகன் கல்லூரிக்கு செல்ல ஆயத்தம் ஆகிறார். இந்த நிலையில் மகளுக்கு கல்யாணம் நிச்சயம் செய்ய காளி வெங்கட் ஆசைப்பட அதில் ஏற்படும் பிரச்சனைகள் விளைவுகளின் உணர்ச்சி போராட்டமே மெட்ராஸ் மேட்னி.
கண்ணன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காளி வெங்கட் அந்த கதாபாத்திரத்தை அவருக்கே உரிய இயல்புடன் அனாயசமாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்.
உடல் மொழி, உச்சரிப்பு ஆகியவற்றில் வட்டார மொழியை பாவிக்கவில்லை என்றாலும்… தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி கவனிக்க வைக்கிறார்.
குறிப்பாக கார் ஓட்டுவதற்காக பயிற்சி மேற்கொள்ளும் இடம்… தன் மகளுடன் தொலைபேசியில் உரையாடும் காட்சிகளில் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார் காளி வெங்கட்.
சத்யராஜ் எழுத்தாளர் கதாபாத்திரத்தில் இயக்குநர் சொன்னதை மட்டும் செய்திருக்கிறார்.
காளி வெங்கட்டின் மகளான தீபிகா வேடத்தில் நடித்திருக்கும் ரோஷினி ஹரிப்பிரியன் – தன் திருமணத்திற்காக மாப்பிள்ளை வீட்டாரை சந்தித்து பேசும் காட்சியில் அவரின் தனித்துவமான நடிப்பு வெளிப்படுகிறது.
ஆனந்த் ஜி கே வின் ஒளிப்பதிவும், கே. சி. பால சாரங்கனின் பின்னணி இசையும் படத்திற்கு வலிமை சேர்த்திருக்கிறது..
கதாபாத்திரங்களில் குழந்தை பருவ காட்சிகள் – கதாபாத்திர அறிமுகங்கள்- என நீளும் முதல் பாதி…. ரசிகர்களின் பொறுமையை எல்லை மீறி சோதிக்கிறது. ஆனால் இரண்டாம் பாதி- ரசிகர்களுக்கு அற்புதமான ஃபீல் குட் படைப்பாக அமைந்திருக்கிறது.