spot_img
HomeCinema Reviewபீனிக்ஸ் (வீழான்) – விமர்சனம்

பீனிக்ஸ் (வீழான்) – விமர்சனம்

 

அண்ணனை கொலை செய்த எம்.எல்.ஏ-வை நாயகன் சூர்யா சேதுபதி, பொதுமக்கள் முன்னிலையில் பட்டப்பகலில் வெட்டி கொலை செய்கிறார். அவரை கைது செய்யும் போலீஸ் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் (அரசு கூர்நோக்கு இல்லம்) அடைக்கிறது.. கணவரை கொலை செய்த சூர்யாவை, கொலை செய்ய துடிக்கும் எம்.எல்.ஏ-வின் மனைவி வரலட்சுமி சரத்குமார், சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் வைத்து அவரை கொலை செய்ய திட்டமிட, அவரது திட்டத்தை தகர்த்தெரிகிறார் சூர்யா சேதுபதி..

சிறுவன் என்று சாதாரணமாக நினைத்த சூர்யாவின் அதிரடியை பார்த்து மிரண்டு போகும் வில்லன் கோஷ்டி அவரை கொலை செய்ய அடுத்தடுத்த திட்டத்தை அரங்கேற்றுகிறது, அவற்றில் இருந்து சூர்யா சேதுபதி எப்படி தப்பித்து தன்னை  வீழானாக நிரூபிக்கிறார் என்பதே ‘பீனிக்ஸ்’..

நாயகனாக நடித்திருக்கும் சூர்யா சேதுபதி, முதல் படத்திலேயே பலம் வாய்ந்த கதாபாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்டிருக்கிறார்..அவரது வயதுக்கு ஏற்ற துடிப்பு மற்றும் துணிவுடன் நடித்திருப்பவர், அண்ணனின் கொலைக்கு பழி தீர்ப்பதற்காக காட்டும் அதிரடி மற்றும் அதைச்சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளும் காட்சிகளில் மிரட்டுகிறார்.. ஆயுதத்துடன் வரும் ஐந்து பேரை ஒரே ஆளாக அடித்து துவம்சம் செய்யும் காட்சியில் ஆக்‌ஷன் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்தியிருக்கும் சூர்யா சேதுபதி, அதிகம் பேசாமல், அளவாக நடித்து பார்வையாளர்களின் கவனம் ஈர்த்திருக்கிறார்.

கதைக்களத்திற்கு ஏற்ற உருவம், ஆக்‌ஷன் காட்சிகளில் கச்சிதமாக பொருந்தும் செயல்பாடு என சூர்யா சேதுபதியின் கடுமையான உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது.. ஆக்‌ஷன் காட்சிகள் என்றாலும், அதில் அவர் கொடுக்கும் ரியாக்‌ஷன் மற்றும் உடல்மொழி மூலம் முதல் படத்திலேயே மாஸான காட்சிகளை மிக சாதாரணமாக கடந்து கைதட்டல் பெறுகிறார்.

வில்லனாக எம்.எல்.ஏ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சம்பத் ராஜ், எம்.எல்.ஏ மனைவியாக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார், நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் தேவதர்ஷினி, நாயகனின் அண்ணனாக நடித்திருக்கும் ‘காக்கா முட்டை’ விக்னேஷ், அபி நட்சத்திரா, வர்ஷா, முத்துக்குமார், திலீபன், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன், மூணாறு ரவி, நவீன், காயத்ரி, அட்டி ரிஷி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஆர்.வேல்ராஜின் கேமரா, ஆக்‌ஷன் காட்சிகளை அதிரடியாக மட்டும் இன்றி கதை சொல்லும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறது. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியின் ஒரு அறை, நீதிமன்றம், தற்காப்புக் கலை போட்டி என படம் முழுவதும் சண்டைக்காட்சிகள் நிரம்பியிருந்தாலும் அவற்றுடன் பார்வையாளர்களை பயணிக்க வைக்கும் வகையில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.வேல்ராஜ்.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ், தமிழ் சினிமாவில் மீண்டும் தனது பெயரை அழுத்தமாக பதிய வைக்கும் வகையில் பணியாற்றியிருக்கிறார்.. பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டையுமே படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் கொடுத்திருப்பவர், பீஜிஎம் மூலம் ஹீரோவின் மாஸை அதிகரிக்கச் செய்திருக்கிறார்.

கூர்மையான படத்தொகுப்பு மூலம் படத்தை ஜெட் வேகத்தில் பயணிக்க வைத்திருக்கும் படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல், ஆக்‌ஷன் காட்சிகளை ரசிக்கும்படியாக தொகுத்து அசத்தியிருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு, வழக்கமான பழிவாங்கும் கதையை முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஜானரில் சொல்லியிருந்தாலும், காட்சிக்கு காட்சி ரசிக்கும் வகையில் படத்தை கையாண்டிருக்கிறார்.. படம் முழுவதும் சண்டையும், கொலையும் இருந்தாலும், தான் சொல்ல வந்ததை மிக சுருக்கமாகவும், வேகமாகவும் சொல்லி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறார்.

வன்முறை காட்சிகள் சற்று தூக்கலாக இருப்பது ஒரு சில பார்வையாளர்களை சற்று உறுத்தினாலும், கதைக்களம் மற்றும் கதை மாந்தர்களின் போராட்டங்கள் அவற்றை மறக்கடித்து விடுகிறது.

எளியவர்களின் வலிமிகுந்த வாழ்க்கையையும், அதில் இருந்து மீள்வதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களையும் கதைக்களமாக வைத்துக்கொண்டு, ஆக்‌ஷன் படங்களில் வழக்கமாக இருக்கும் அம்சங்களை தவிர்த்துவிட்டு, சண்டைக்காட்சிகள் மூலமாகவே கதை சொல்லி, இயக்குநராக அசத்தியிருக்கிறார் அனல் அரசு..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img