சசிகுமார், லிஜோ மோல், பாய்ஸ் மணிகண்டன், போஸ் வெங்கட் மற்றும் பலர் நடிப்பில் (ஜூலை-11) வெளிவர இருக்கும் படம் ஃப்ரீடம். படம் என்ன சொல்ல வருகிறது ? 90 95 காலகட்டத்தில் வேலூர் சிறையில் இருந்து தப்பித்த இலங்கை அகதிகளின் வரலாற்று சுவடுகளே படத்தின் மையக்கரு.
இலங்கையில் போர் மூட்டம் நிறைந்த காலகட்டத்தில் அங்கிருந்து அகதிகளாக பலர் ராமேஸ்வரம் வந்து அகதி முகாமில் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். அதே சமயம் முன்னாள் பாரத பிரதமரை மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்த தீவிரவாத இயக்கத்தை கண்டுபிடிக்க அகதிகளாக இருக்கும் நபர்கள் சிலரை விசாரணை என்ற பெயரில் வேலூரில் உள்ள கோட்டையில் அடைத்து அவர்களை மனிதநேயம் இல்லாமல் அடித்து உதைக்கிறது. அரசும் அவர்களை பற்றி கண்டுகொள்ளாமல் இருக்க ஜெயிலில் இருந்து தப்பிப்பது தான் ஒரே வழி என்று முடிவெடுத்து ஜெயிலுக்கு அடியில் சுரங்கம் வெட்டி தப்பிக்கும் போது சிலர் மாட்டிக் கொள்கின்றனர். சில தப்பித்து விடுகின்றனர். இதுவே முழு படத்தின் கதை.
சசிகுமார் இலங்கையில் அநியாயத்தை எதிர்த்து கேட்டு சிறைக்கு செல்ல அவரின் கர்ப்பிணி மனைவி இலங்கையில் இருந்து தப்பித்து தமிழகம் வருகிறார். பின்னர் மனைவியை பார்க்க வரும் தமிழகம் வரும் சசிகுமார் ஒரு வாய் சாப்பிடுவதற்குள் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்ல. பிறந்த குழந்தையை கூட நான்கு வருடங்களாக பார்க்க முடியாமல் தவிக்கும் தந்தையாக ஒரு கனமான கதாபாத்திரத்தை தன் மேல் சுமந்து செல்கிறார்.
தன்னை பார்க்க வரும் குழந்தைக்காக ஜெயிலிலே ஒரு பொம்மை செய்து அதை தன் மகளிடம் கொடுக்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மகளைப் பார்க்க முடியாத தருணம், தன் சோகத்தை எப்படி என்று வெளிப்படுத்த முடியாத நேரத்தில் அவரின் முக பாவங்கள் என சசிகுமார் ஒரு குணச்சித்திர நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொண்துள்ளார்.
ஜெயிலில் இருந்து தப்பிக்க சுரங்க பாதை தோன்டும் அவரை கொலை செய்ய சொல்லும் அவர்களுக்குள்ளே உள்ளவரை ஏவிவிடும் ஜெயில் அதிகாரி அதை முறியடித்து தன் முயற்சியில் வெற்றி கண்டு சிறையை விட்டு வெளியேறும் காட்சி நம்மை பதைபதைக்க வைக்கிறது.
டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றியை சுவைத்த சசிகுமாருக்கு இந்த படம் ஒரு சிறந்த நடிகருக்கான வாய்ப்பை வழங்கி இருக்கிறது. அதை சரியாகவும் பயன்படுத்திருக்கிறார் சசிகுமார்.
நாயகி லிஜோ மோல். இவரைப் பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை. மலையாளத்தில் தன் திறமையால் கேரள மக்களை கட்டி போட்டவர். அகதியாக, கர்ப்பிணியாக, கணவனை காண பரிதவிக்கும் மனைவியாக என பல பரிமாணங்களில் தன் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரின் வரவு தமிழ் சினிமாவுக்கு ஒரு சிறந்த நடிகையை அடையாளம் காட்டுகிறது.
மணிகண்டன்.. பாய்ஸ் படத்தில் நாம் இவரை பார்த்திருப்போம். இந்த படத்தில் ஊமையாக, தற்கொலை செய்து கொள்ளும் ஒரு அகதியாக, தன் பங்களிப்பை சிறப்பாக்கி இருக்கிறார்.
மலையாள நாயராக வரும் ஜெயில் அதிகாரி, இவருக்கு அகதிகள் மேல் வெறுப்பா அல்லது தமிழர்கள் மேல் வெறுப்பா என்று புரியவில்லை. அந்த அளவுக்கு தன் கதாபாத்திரத்தை செம்மையாக்கி நடிப்பில் சிறப்பாக்கி இருக்கிறார். படத்தின் துவக்கத்தில் முன்னாள் பிரதமரை கொலை செய்யும் காட்சியை பார்க்கும் நாம் கதை அதை நோக்கி நகரும் என்று எதிர்பார்த்தால் அதற்கு மாறாக அந்த கொலையால் அதற்கு சம்பந்தமில்லாத இலங்கை அகதிகள் படும் இன்னல்களை திரைக்கதை ஆக்கி இயக்கி இருக்கிறார் இயக்குனர்..
ஒரு ஜெயில்
விசாரணை கைதிகள் பலர்
அவர்கள் தப்பிக்கும் முறை
இதுவே படத்தின் ஒன்லைன்
90களின் காலகட்டத்தை நம் முன் கொண்டு வந்த ஒளிப்பதிவாளரை நாம் பாராட்டியாக வேண்டும்
எங்கே பகலில் காட்சிகள் எடுத்தால் சில விஷயங்களை மாற்ற முடியாமல் போய் விடும் என்ற எண்ணத்தில் பல காட்சிகளை இரவிலேயே எடுத்து இருக்கின்றனர்.
ஒரு தெரிந்த கதை.. ஒரு முடிந்த கதை.. அதற்கு ஒரு முடிவில்லாமல் ஒரு படம் ஃப்ரீடம்
ரேட்டிங் ; 2 / 5