spot_img
HomeNews'நாய் சேகர்' புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் கலகலப்பான‌ புதிய திரைப்படம்

‘நாய் சேகர்’ புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் கலகலப்பான‌ புதிய திரைப்படம்

திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது.

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் ‍பேனரில் கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாவீர் அசோக் தயாரிக்கும் இப்படத்தை ‘நாய் சேகர்’ திரைப்படத்தை இயக்கியவரும், ‘கோமாளி’, ‘கைதி’, ‘விஐபி 2’, ‘இமைக்கா நொடிகள்’, மற்றும் ‘கீ’ உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், நிறைய குறும்படங்களையும் யூடியூப் வீடியோக்களை உருவாக்கியவருமான கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்குகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்குவதோடு, நாயகனாகவும் நடிக்கிறார். பிரபல மலையாள நடிகையும் ‘கொட்டுக்காளி’ தமிழ் படத்தில் நடித்தவருமான‌ அன்னா பென் நாயகியாக நடிக்க, முன்னணி நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

திரைப்படம் குறித்து பேசிய கிஷோர் ராஜ்குமார், “காதலும் நகைச்சுவையும் நிரம்பிய‌ கதை இது. படம் முழுக்க ஃபீல் குட் உணர்வை ரசிகர்களுக்கு தரும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை உருவாக்க உந்து சக்தியாக இருப்பவர் பாக்யராஜ் சார் தான். அவர் இயக்கிய படங்கள் போல இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்கள் வருவதில்லையே என ரசிகர்களிடையே ஒரு ஏக்கம் உண்டு. அந்த இடைவெளியை நிரப்பும் வகையில் இந்த படம் இருக்கும்,” என்றார்.

மேலும் பேசிய அவர், “ஜோடி பொருத்தம் குறித்து பேசும் இந்த கலகலப்பான படம் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இருக்கும். மிகவும் திறமையான நடிகை என பெயரெடுத்த அன்ன பென் உடன் இணைவதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை எனக்களித்த நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றி,” என்றார்.

இப்படத்தின் ஒளிப்பதிவாளராகவும் இணை எழுத்தாளராகவும் பிரவீன் பாலு பங்காற்ற, படத்தொகுப்பை ராம் பாண்டியன் கவனிக்கிறார். இவர்கள் இருவரும் சதீஷ் நாயகனாக அறிமுகமாகி கிஷோர் ராஜ்குமார் இயக்கிய ‘நாய் சேகர்’ படத்திலும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. ஶ்ரீ சசிகுமார் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்றுள்ளார். ஆடை வடிவமைப்பு – கிருத்திகா சேகர், நிர்வாக தயாரிப்பு – எஸ். என். அஸ்ரப்/நரேஷ் தினகரன்.

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் தயாரிப்பில் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த மேலும் சுவாரசிய தகவல்கள் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img