காதல் திருமணம் செய்து கொள்ளும் வனிதா விஜயகுமாரும், ராபர்ட்டும் பாங்காக்கில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். 40 வயதை எட்டும் வனிதா குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார். ஆனால், ராபர்ட் குழந்தை வேண்டாம் என்று சொல்கிறார். இதனால் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டாலும், கர்ப்பமாவதற்கான அனைத்து முயற்சிகளிலும் வனிதா ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி வனிதா கர்ப்பமாகி விட, ராபர்ட்டுகு தெரிந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள தடையாக இருப்பார், என்று நினைத்து அவருக்கு தெரியாமல் பாங்காக்கில் இருந்து இந்தியா வந்துவிடுகிறார். வனிதாவின் பிரிவை தாங்க முடியாமல் தவிக்கும் ராபர்ட், வனிதாவை தேடி இந்தியா வருகிறார்.
வனிதா ஆசைப்பட்டது போல் குழந்தை பெற்றுக் கொண்டாரா?, அவரது கணவர் ராபர்ட் குழந்தை வேண்டாம் என்று சொல்வதற்கான காரணம் என்ன ? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாற்பது வயதை எட்டும் பெண்மணி வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வனிதா விஜயகுமார் தன்னுடைய உடல் மொழிக்கும், தோற்றத்திற்கும் பொருத்தமான கதாபாத்திரத்தை தெரிவு செய்து நடித்திருக்கிறார். ஆனால் இயக்கத்தில் கோட்டை விட்டிருக்கிறார்.
அருண் என்ற கதாபாத்திரத்தில் வித்யாவின் கணவராக – 45 வயது உள்ள கம்பீரமான ஆண்மகனாக றொபட் மாஸ்ரர் நடித்திருக்கிறார். நடனத்தில் வழக்கம் போல் முத்திரையை பதித்திருக்கிறார்.
நாற்பது வயதை கடந்து விட்ட பெண்மணிகளுக்கு பிரசவம் என்பது எளிமையானது இல்லை என்பதை நேரடியாகவும், திருமணமான தம்பதிகள் விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதனை மறைமுகமாகவும் வலியுறுத்தி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒரு பிரிவினர் பாராட்டத்தான் செய்கிறார்கள். ஏனெனில் இந்த திரைப்படம் அடல்ட் கொமடி ஜேனரில் சொல்லப்பட்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் கடந்த தசாப்தங்களில் கவர்ச்சி நடிகைகளாக நடித்த நடிகைகள் ( ஷகீலா – கும்தாஜ் – கிரண்…) நடித்திருக்கிறார்கள். ஆனால் ரசிக்க முடியவில்லை.