உதவி இயக்குநரான நாயகன் ருத்ரா, நடிகராகவே நடித்திருக்கும் விஷ்ணு விஷாலிடம் கதை சொல்ல செல்கிறார். அவர் சொல்லும் இரண்டு கதைகளில் ஈர்க்கப்படாத விஷ்ணு விஷால், காதல் கதையை எதிர்பார்க்கிறார். இதனால், தனது சொந்த காதல் கதையை அவரிடம் ருத்ரா விவரிக்கிறார். அந்த கதை விஷ்ணு விஷாலுக்கு பிடித்துப் போக, இரண்டாம் பாதியை சொல்லும்படி கேட்கிறார்.
காதலில் ஏற்பட்ட பிரச்சனையால் காதலியை பிரிந்த ருத்ரா, தன் காதல் கதைக்கு முடிவு இல்லாமல் தடுமாறுகிறார். பிரிந்த காதலர்கள் சேர்ந்தார்களா? இல்லையா? என்பது தெரிந்தால் மட்டுமே படம் பண்ணுவேன், என்று சொல்லும் விஷ்ணு விஷால், அதற்காக காதலியை மீண்டும் சந்திக்கும்படி ருத்ராவிடம் சொல்கிறார்.
பிரிந்துச் சென்ற காதலியை பல வருடங்களாக சந்திக்காத ருத்ரா, தன் பட வாய்ப்புக்காக மீண்டும் சந்தித்தாரா?, உடைந்த அவரது காதல் மீண்டும் ஒன்று சேர்ந்ததா?, அவரது காதல் பிரிவின் காரணம் என்ன? ஆகிய கேள்விகளுக்கான விடையை இளமை துள்ளளோடும், தற்போதைய தலைமுறையின் காதல், நட்பு, உறவுகள் பற்றிய அலசலோடும் சொல்வது தான் ‘ஓஹோ எந்தன் பேபி’.
நாயகன் ,நாயகி, நாயகனின் நண்பர் என அனைவரும் புது முகங்கள் சில காட்சிகள் புதிது இதனால் படத்தின் முதல் பாதி கலகலப்பாகவும், ஏதேனும் விடயம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் கடந்து செல்கிறது.
அதிலும் அஸ்வின் கதை சொல்லும் போது முதல் அத்தியாயம் மூன்றாவது அத்தியாயம் அதன் பிறகு இரண்டாவது அத்தியாயம் என கதையைச் சொல்வதெல்லாம் சிரிப்பு + கவர்ச்சி அதிகம் என்பதால் ரசிக்கிறார்கள். நாயகனை விட நாயகியின் தோற்றம் சற்று முதிர்ச்சியாக இருக்கிறது என்பதால் கதாபாத்திரத்தை நாயகனை விட மூன்று வயது அதிகம் என்று இயக்குநர் சொல்லி இருப்பதும் ஓகே.
ஆனால் இரண்டாம் பாதியில் இவர்கள் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் அதை நோக்கியே திரைக்கதை பயணிக்கும் என்று பார்வையாளர்கள் தீர்மானித்து விடுவதால் அதில் எந்த பரபரப்பான அல்லது சுவாரசியமான திருப்பங்கள் இல்லாததால் ரசிகர்களிடம் சோர்வு ஏற்படுகிறது. இருந்தாலும் இதனை அஸ்வினாக நடித்திருக்கும் ருத்ராவும் , மீராவாக நடித்திருக்கும் மிதிலா பால்கரும் தங்களின் அற்புதமான வசீகரிக்கும் திரை தோற்றத்தால் ரசிகர்களை ஆறுதலை தருகிறார்கள்.
நடிகராக நடித்திருக்கும் விஷ்ணு விஷால் திரைக்கதைக்கு வலுவூட்டுகிறார். அதே தருணத்தில் மிஷ்கின் இயக்கத்தில் இவர் ஷட்டிலாக நடிப்பது ரசிகர்களிடம் வரவேற்பை பெறுகிறது.
டிஜிட்டல் திரையுலகின் நட்சத்திர முகமான நிர்மல் பிள்ளை – நாயகனின் நண்பராக திரையில் தோன்றும் போது ரசிகர்களிடம் கரவொலி & குரலொலி எழுகிறது.
சுவாரஸ்யம் மிகுந்த திரைக்கதையால் கவனத்தை ஈர்த்து இளமை துள்ளல் கலந்த காதல் கதையை இடையூறில்லா காமெடியுடன் புன்னகை மலரச் செய்து மனதை கவரும் வண்ணம் விறுவிறுப்புடன் வித்தியாசத்துடன் கொடுத்துள்ளார் இயக்குனர் கிருஷ்ணகுமார் ராமகுமார்
இன்றைய இணைய தலைமுறையினரின் காதலைப் பற்றிய எண்ணங்களை அதில் உள்ள சிக்கல்களை விவரிக்கும் இந்தப் படத்தில் ‘ காதலிக்கும் போது இரண்டு தரப்பில் இருந்தும் விட்டுக் கொடுக்கும் தன்மை அவசியம்’ என்பதை வலியுறுத்தி இருப்பதால் காதலர்களின் நிபந்தனையற்ற ஆதரவை இந்த படைப்பு பெறுகிறது.