திரைப்பட இயக்குநர் ஸ்ரீநாத்தின் ‘அன்புள்ள கில்லி’ படம் தொடங்கப்பட்ட நாளிலிருந்தே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, ஆர்வத்தை அதிகப்படுத்தி வருகிறது. காரணம் நாயை மையப்பாத்திரமாகக் கொண்டு வழக்கமாக உருவாக்கப்பட்ட படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட முறையில் இது அமைந்திருப்பதுதான்.
கில்லி என்ற பெயர் கொண்ட லாபர்டார் வகை நாயின் பார்வையிலிருந்து இந்தக் கதை சொல்லப்படுவது மிகவும் புதுமையான அம்சமாகப் பார்க்கப்படுகிறது. படம் வளர்ந்து முழுமையடைந்ததிருப்பது குறித்து ஒட்டுமொத்த படக்குழுவும் முழு திருப்தியடைந்திருக்கும் நிலையில் இப்போது மற்றும் ஒரு கொண்டாட்டமான மனநிலைக்கு வந்திருக்கிறது படக்குழு. ஆம். இந்தப் படத்துக்காக அரோல் கரோலி இசையமைப்பில் யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலை பாடியிருப்பதுதான் படக்குழுவினரை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்திருக்கிறது.
இது குறித்து இயக்குநர் ஸ்ரீநாத் கூறியதாவது…
யுவன் சாரின் இசையும், அவரது தனித்துவம் மிக்க குரலும் காந்தம் போல் கேட்பவரைக் கட்டிப்போடும். அவர் இந்தப் படத்திற்குள் வந்தது ஒரு மேஜிக் மாதிரிதான் இருந்தது. இந்தப் பாடலுக்கான கம்போஸிங் முடிந்ததும், இசையமைப்பாளர் அரோல் கரோலியும் நானும் யுவன் சார் பாடினால் பிரமாதமாக அமைவதுடன் படத்துக்கும் பலம் சேர்க்கும் என்று நம்பி ட்யூனை அவருக்கு அனுப்பி வைத்தோம். ஆச்சரியமான முறையில், தனது ஒலிப்பதிவுக் கூடத்திலேயே பாடலை பதிவு செய்து கொள்ளும்படி உடனடியாக அவரிடமிருந்து அழைப்பு வந்தது.
ஆண் லாபர்டார் நாய் ஒன்றுக்காக குரல் கொடுத்து யுவன் சார் பாடியிருப்பது இதுவே முதல் முறை. இது ஒரு காதல் பாட்டு. ஆண் நாய் பெண் நாய் தோன்றும் இந்தக் காதல் பாடலில் இடம் பெறும் மெலிதான நகைச்சுவைக் காட்சிகளும் ரசிக்கும்படி அமைந்திருக்கும். நாங்கள் ரசித்து அனுபவித்த இந்தப் பாடலை ரசிகர்களும் கேட்டு ரசிக்க விரைவில் வெளியிட இருக்கிறோம். காதால் கேட்டதும் இதயத்துக்குள் இடம் பெயரும் அழகான எளிமையான வார்த்தைகளால் பாடலை எழுதியிருக்கும் லவ் குருவுக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்லக கடமைப்பட்டிருக்கிறேன்.
லாபர்டார் நாய் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் அன்புள்ள கில்லி படத்தில் மைத்ரேயா, துஷாரா, வி.ஜே. ஆஷிக், சாந்தினி, மைம் கோபி, நாஞ்சில் விஜயன், மெளனராகம் புகழ் கிருத்திகா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். தற்போது விஷுவல் எஃபக்ட்ஸ் காட்சிகளை உருவாக்குவதில் படக்குழு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. படத்தின் வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அதிகார பூர்வமாக அறிவிப்பு வெளியாகும்.