spot_img
HomeNewsநடிகர் சித்தார்த், இயக்குநர் கார்த்தி ஜி.கிருஷ் இணையும் 'டக்கர்

நடிகர் சித்தார்த், இயக்குநர் கார்த்தி ஜி.கிருஷ் இணையும் ‘டக்கர்

நடிகர் சித்தார்த்தும் ‘கப்பல்’ பட இயக்குநர் கார்த்தி ஜி,கிருஷும் இணைந்து பணியாற்றிய ‘சைத்தான் கா பச்சா’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில், முன் அறிவிப்பின்றி இருவரும் அடுத்த ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கின்றனர். இருவரும் இணைந்து பணியாற்றிய ‘டக்கர்’ என்று பெயரிடப்பட்ட  அடுத்த படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்து விட்டார்கள். அதிரடிக் காட்சிகள் நிரம்பிய இந்த காதல் படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் இப்போது முடியும் தறுவாயில் இருக்கின்றன.


அறிவிப்பு வெளியானதிலிருந்தே பல திரைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். ஆனால் அவற்றிலிருந்து மாறுபட்ட ‘டக்கர்’ திரைப்படம் அமைதியான முறையில்உருவாகியிருக்கிறது. இது குறித்து இயக்குநர் கார்த்தி ஜி. கிருஷிடம் கேட்டபோது, “ஒட்டு மொத்தமாக எங்கள் குழு எடுத்த முடிவு இது. படம் இறுதி வடிவத்துக்கு வரும்வரை எந்தவித செய்திகளையும் கசியவிட வேண்டாம் என்று முடிவு செய்திருந்தோம். கடந்த பிப்ரவரி மாதம் படப்பிடிப்பைத் துவக்கினோம். இப்போது பின் தயாரிப்புப் பணிகள் முடியும் தறுவாயில் இருக்கிறது. எதிர்வரும் ஜனவரி மாதம் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.

இதில் மற்றுமொரு ஆச்சரியத்துக்குரிய செய்தி என்னவென்றால், ஒரு நடிகரும் ஓர் இயக்குநரும் இணைந்து பணியாற்றிய முதல் படம் வெளிவருவதற்கு முன்பே, அவர்கள் இணைந்து பணியாற்றிய அடுத்த படம் வெளியாக இருப்பதுதான். இது குறித்து விளக்கிய இயக்குநர் கார்த்தி ஜி.கிருஷ், ‘சைத்தான் கா பச்சா’ படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது, ஒரு கதைக் கருவை சித்தார்த்திடம் சொன்னேன். உடனே அவர் இந்தக் கதைக் கருவை விரிவாக்கி முழுமையான ஸ்க்ரிப்படாக எழுதும்படி சொன்னார். எனது முதல் படைப்பான கப்பல் படத்தைத் தயாரித்த சுதன் மற்றும் ஜெயராம் இருவரும் இணைந்து இந்தப் படத்தையும் தயாரித்திருக்கிறார்கள். அவர்களுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்” என்றார்.

‘மஜிலி’ தெலுங்குப் படத்தில் நடித்த திவ்யான்ஷா கெளசிக் ‘டக்கர்’ படத்தில் சித்தார்த் ஜோடியாக கதாநாயகி வேடத்தில் நடித்திருக்கிறார். படத்தைப் பற்றி விவரித்த இயக்குநர், அகங்காரமும் கோபமும் கொண்ட  இரண்டு கதாபாத்திரங்கள், ஒருவரையொருவர் எதிர்கொள்ளும்போது அவர்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதைத்தான் இந்தப் படம் விவரிக்கிறது. சித்தார்த் ஆக்ஷன் வகைப்படங்களின் ஹீரோவாக இருந்தாலும் ‘டக்கர்’ படம் அவருக்கு முற்றிலும் வித்தியாசமான படமாக இருக்கும் என்றார். அபிமன்யூ சிங், யோகி பாபு, முனீஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் ‘டக்கர்’ படத்துக்கு, வாஞ்சி நாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்கிறார். கா.கெளதம் படத்தொகுப்பை கவனிக்க, கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார் உதயகுமார். உமாதேவி, கு.கார்த்திக் மற்றும் அறிவரசு ஆகியோர் பாடல்களை எழுத, சண்டைக் காட்சிகளை தினேஷ் காசியும், உடையலங்காரத்தை பிரியங்கா பிருத்விராஜனும் கவனிக்கின்றனர். சதீஷ் மற்றும் ஸ்ரீதர் நடனக் காட்சிகளை அமைக்க, ட்டூனி ஜான் டிசைனராகவும், ஏ.குமார் புரொடக்ஷன் கன்ட்ரோலராகவும் பணியாற்றுகின்றனர். பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் மற்றும் ஜெயராம் இருவரும் இணைந்து ‘டக்கர்’ படத்தை தயாரிக்கின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img