spot_img
HomeNewsதிரைநட்சத்திரங்கள் பாராட்டிய குறும்படம்: 'எது தேவையோ அதுவே தர்மம்

திரைநட்சத்திரங்கள் பாராட்டிய குறும்படம்: ‘எது தேவையோ அதுவே தர்மம்

20 விருதுகளைக் குவித்த குறும்படம்..!!
திரைநட்சத்திரங்கள் பாராட்டிய குறும்படம்: ‘எது தேவையோ அதுவே தர்மம்’
நடிகர் விஷால் , இயக்குநர்கள் பா. ரஞ்சித்,
லோகேஷ் கனகராஜ்,சீனு ராமசாமி ,
கார்த்திக் சுப்புராஜ் , ராஜுமுருகன், விஜய்மில்டன் ,அருண்ராஜா காமராஜ், மூடர் கூடம் நவீன் , நடிகை சுனேனா, ரியோ, மைம் கோபி ஆகியோர் ‘ எது தேவையோ அதுவே தர்மம்’ குறும்படத்தைப் பார்த்துப் பாராட்டியுள்ளனர்.
“ஒரு நல்ல குறும்படத்தைப் பார்த்த திருப்தி எங்களுக்குக்கிடைத்தது “என்று  அவர்கள் மனதார படக்குழுவினரை பாராட்டியுள்ளனர்.
அறம், தர்மம், நீதி, நியாயம், மனசாட்சி என்பது பற்றியெல்லாம் ஆளுக்கொரு ஒரு விளக்கம் கூறுவார்கள். ஆனால் ”எது தேவையோ அதுவே தர்மம்” என்பது தான் நடைமுறையில் அனைவராலும் ஒப்புக் கொள்ளக்கூடிய ஓர் உண்மையாக இருக்கும். அதுபோல் சமகால மக்களின் வாழ்வியல் பிரச்சினையில் உள்ள நியாய தர்மத்தின் அடிப்படையை மையமாக வைத்து உருவாகும் படங்கள் மக்களின் ஏகோபித்த வரவேற்பை கண்டிப்பாக பெரும். அந்த வகையில் சமகால கடைநிலை மக்களின் வாழ்வியலை அதன் தன்மை மாறாமல் அப்படியே நம் கண்முன் கொண்டுவந்துள்ளது ”எது தேவையோ அதுவே தர்மம்” என்ற குறும்படம்.
விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பையும், 20க்கும் மேற்பட்ட பல்வேறு விருதுகளையும் வென்று சாதனை படைத்து வரும் இப்படத்தை து.ப.சரவணன் இயக்கியுள்ளார். “எது தேவையோ அதுவே தர்மம்” என்கிற இந்த வசனம் ‘ஆரண்ய காண்டம் ‘ படத்தில் முதலில் இடம்பெறும் வசனமாகும். அது பிடித்துப் போய் அதையே தலைப்பாக்கி இருக்கும் இயக்குநர் து.ப.சரவணன் இக்குறும் பட அனுபவம் பற்றி கூறும்போது….
“நான் திரையுலகில் எட்டு ஆண்டுகளாக இருக்கிறேன். பாலாஜி இயக்கிய ‘குள்ளநரிக்கூட்டம்’, கணேஷ் விநாயக் இயக்கிய ‘தகராறு’, ‘வீரசிவாஜி’ மற்றும் நிசப்தம் போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். பிறகு சினிமா கனவோடு இருந்த நான், என்னை நிரூபிக்க முதலில் குறும்படம் ஒன்றை எடுப்பது என்று முடிவு செய்து, இதற்கான கதையை தயார் செய்தேன். அப்போது உருவானதுதான் இந்த “எது தேவையோ அதுவே தர்மம்” என்ற குறும்படத்தின் கதை.
இப்படத்தைத்  தயாரிக்க மூன்று லட்ச ரூபாய் வரை தேவைப்பட்டது. பண உதவி தேவைப்பட்டதால் வெளிநாட்டிலிருந்த என் தங்கை கணவர் சந்திரசேகரிடம் கதையை அனுப்பி, பிடித்திருந்தால் உதவி செய்யுங்கள் என்று உதவி கேட்டேன். அவரும் கதையைப் படித்து விட்டு உடனே ஐம்பதாயிரம் ரூபாய் எனக்கு அனுப்பி, படப்பிடிப்பை தொடங்கச் சொன்னார். அப்படி தொடங்கப்பட்டதுதான் இந்தப் படம்.
இப்படத்தின் நாயகன் ஸ்ரீநி ‘தோழர்’, ‘பொம்ம
வெச்ச பென்சில்’, ‘நானும் இந்த உலகத்துல தான் இருக்கேன்’ போன்ற குறும் படங்களிலும், ‘சூப்பர் டூப்பர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தவர். இவர் தற்போது ‘வெல்வெட் நகரம்’ என்கிற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவர் மூலம்தான் ஒளிப்பதிவாளர் வினோத் ராஜேந்திரன், கதாநாயகி ஷீலா ராஜ்குமார் ஆகியோர் அறிமுகமானார்கள். உலக அரங்கில் திரையிடப்பட்டு தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளைக் குவித்த ‘டு லெட்’ படத்தின் கதாநாயகியாக நடித்தவர்தான் இந்த ஷீலா. அதுமட்டுமல்ல அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘திரௌபதி’ படத்திலும் நாயகியாக நடித்தவர்.
படப்பிடிப்பின்போது கதாநாயகன் ஸ்ரீநி மற்றும் கதாநாயகி ஷீலா ராஜ்குமார் ஆகியோர் கொடுத்த ஒத்துழைப்பை மறக்கமுடியாது. இப்படத்தில் நடித்திருக்கும் சிறுவன் கொடுத்த ஒத்துழைப்பும் மறக்க முடியாது. அவனிடம் கதையைக் கொடுத்தபோது மறுநாளே வசனங்களை மனப்பாடம் செய்து காட்டினான். அப்படி ஒரு ஆர்வம் ஈடுபாடு.
ஒளிப்பதிவாளர் வினோத் ராஜேந்திரன் இல்லாவிட்டால் இப்படிப்பட்ட காட்சி அமைப்புகள் படத்தில் வந்திருக்காது. அவரின் ஸ்மார்ட்டான வேலை செய்யும் யுக்தி எங்கள் வேலையைச் சுலபமாக்கியது. அது மட்டுமல்லாமல் இப்படத்தில் ஆர்ட் டைரக்டர் சூர்யாவின் பங்கு அளப்பரியது. இந்த படத்திற்காக நாங்கள் பல வீடுகளை தேடி பார்த்தும் எங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் எந்த வீடும் திருப்திகரமாக அமையவில்லை. அப்போதுதான் எங்கள் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில் ஆர்ட் டைரக்டர் சூர்யா தனது வீட்டையே எங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்றாற்போல் மாற்றி அமைத்து படப்பிடிப்புக்குக் கொடுத்து உதவி செய்தார். அவர் நல்ல திறமைசாலி.
இசையமைப்பாளர் தீசன், கதைக்கான உணர்வை இசையில் கொண்டுவந்து பார்ப்பவரை கண்கலங்க வைத்திருக்கிறார். அதேபோல் காட்சிகளை தொய்வின்றி எடிட் செய்துள்ளார் எடிட்டர் தமிழ்க்குமரன். இந்தக் கூட்டணி இல்லாவிட்டால் இந்தப் படம் இந்த அளவுக்கு வந்திருக்காது” என்கிறார் இயக்குநர் சரவணன்.
இப்படத்திற்கு இதுவரை 20 விருதுகள் கிடைத்துள்ளன. தமிழ் ஸ்டுடியோ வழங்கும் பாலுமகேந்திரா நினைவு விருது, இப்படத்தின் சிறந்த ஒளிப்பதிவுக்குக் கிடைத்தது. அது மட்டுமல்லாமல் அங்கே பார்வையாளர்களிடையே வாக்கெடுப்பு நடத்தி பெஸ்ட் பீப்பிள்ஸ் சாய்ஸ் விருதும், பத்தாயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் இப்படத்திற்கு கிடைத்தது. குஜராத் அகமதாபாத்தில் நடந்த 3வது சித்ரபாரதி திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதுடன், ரூ.50 ஆயிரம் ரூபாய் பரிசும் நாயகன் ஸ்ரீநிக்கு கிடைத்தது. அதேபோல் இண்டோ ரஷ்யன் ஃபிலிம் பெஸ்டிவல், காஸ்மோ ஃபிலிம் பெஸ்டிவல் ஆகியவற்றிலும் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. இப்படி சுயாதீன பட விழா சென்னை 2020, பபாஸியின் புத்தக கண்காட்சி குறும்பட விழா என்று  இதுவரை 20 விருதுகள் இந்த குறும்படத்திற்கு கிடைத்துள்ளன. இக்குறும்படத்தில் ஸ்ரீநி, ஷீலா ராஜ்குமார் ஆகியோருடன் இணைந்து லிங்கேஷ், தாஸ், நாகராஜன், ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சுமார் அரை மணி நேரம் ஓடும் இக்குறும்படத்தை செகண்ட் காட் புரொடக்ஷன்ஸ் சார்பாக இயக்குநர் து.ப சரவணன், ப்ளாட்பார்ம் புரொடக்ஷன்ஸ் சார்பாக நாயகன் ஸ்ரீநி, க்ளிக் அண்ட் ரஷ் புரொடக்ஷன்ஸ் சார்பாக ஒளிப்பதிவாளர் வினோத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
படம் பார்த்த திரையுலகினர் மற்றும் பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்த இந்த “எது தேவையோ அதுவே தர்மம்” குறும்படம் இன்று உலக மின்னணுத் திரைகளில் ஒளிரும்.

Must Read

spot_img