spot_img
HomeNewsமஹாவீர்யர் (மலையாளம்) ; விமர்சனம்

மஹாவீர்யர் (மலையாளம்) ; விமர்சனம்

மஹாவீர்யர் (மலையாளம்) ; விமர்சனம்
தயாரிப்பு ; பாலி ஜூனியர் பிக்சர்ஸ் & இந்தியன் மூவி மேக்கர்ஸ்
இயக்கம் ; அப்ரிட் ஷைன்
இசை ; இஷான் சப்ரா
நடிகர்கள் ; நிவின்பாலி, ஆசிப் அலி, லால், ஷான்வி ஸ்ரீவாத்சவ், சித்திக், லாலு அலெக்ஸ், மல்லிகா சுகுமாரன் மற்றும் பலர்
வெளியான தேதி ; 21.07.2022
நேரம் ; 2 மணி 20 நிமிடம்
ரேட்டிங் ; 2 / 5
1983, ஆக்சன் ஹீரோ பைஜூ என அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அப்ரிட் ஷைன் – நிவின்பாலி கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது படம் இது. ஹாட்ரிக் வெற்றிக்கு வாய்ப்பிருக்கிறதா ? பார்க்கலாம்.
மன்னர் காலத்தையும் நவீன காலத்தையும் ஒன்றாக இணைத்து கதை பண்ணியிருக்கிறார்கள்.
ராஜா லாலுவுக்கு ஒருநாள் இரவில் திடீரென தொடர் விக்கல் ஏற்படுகிறது. என்ன வைத்தியம் பார்த்தும் அது குணமாகவில்லை. இந்நிலையில் மந்திரி ஆசிப் அலியை அழைத்து, வைத்தியமெல்லாம் இனி வேண்டாம், இந்த நாட்டிலேயே அழகான பெண் ஒருத்தியை அழைத்து வா.. அவளுடன் சில காலம் சந்தோஷமாக வாழவேண்டும் என உத்தரவிடுகிறார்.. இளம்பெண்ணை தேடி கிளம்புகிறார் மந்திரி ஆசிப் அலி.
இது ஒருபக்கம் இருக்க, கிராமம் ஒன்றுக்கு வருகை தரும் சாமியார் நிவின்பாலி மீது சாமி சிலையை திருட முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார். அவருக்கு எதிராக சிலர் சாட்சி சொல்ல, தனக்காக தானே வாதாடி அவர்களது சாட்சியங்களை உடைக்கிறார் நிவின்பாலி.
இந்த நேரத்தில் தான் ராஜா லாலுவின் மீது கிராமத்து ஏழைப்பெண் கொடுத்துள்ள புகார் அதே நீதிமன்றத்துக்கு வர, ராஜாவும் நீதிமன்றத்தில் ஆஜராகிறார். ராஜாவுக்காக இளம்பெண்ணை தேடிப்போன மந்திரி ஆசிப் ஆலி, கிராமத்தை சேர்ந்த அழகிய பெண்ணான தான்வியை வலுக்காட்டாயமாக இழுத்து வந்து ராஜாவிடம் ஒப்படைக்கிறார். ராஜா தன்னை துன்புறுத்தியதாக தந்தை மூலமாக நீதிமன்றத்தில் புகார் அளிக்கிறார் தான்வி,.
நிவின்பாலியின் வழக்கு சற்று நேரம் தள்ளிவைக்கப்பட்டு ராஜாவின் வழக்கு விசாரிக்கப்படுகிறது,. ராஜா எதற்காக அந்த இளம்பெண்ணை அழைத்து வரச்சொன்னேன் என்கிற உண்மையை வெளிப்படுத்துகிறார். நீதிமன்றம் அவர் சொன்ன காரணத்தை கேட்டு, அவருக்கு உதவி செய்வதற்காக அந்த இளம்பெண்ணை சித்தரவதை செய்கிறது.. நம்புங்கள்.. நீதிபதியே அப்படி செய்ய உத்தரவிடுகிறார். இதை காண பொறுக்காத சாமியார் நிவின்பாலி, இதற்கு தான் சமூகமாக தீர்வு காண்பதாக கூறுகிறார்.
இளம்பெண் மூலமாக ராஜாவின் பிரச்சனைக்கு அப்படி என்ன தீர்வு கிடைக்க இருக்கிறது..? அதை அந்த இளம்பெண்ணால் வழங்க முடியாமல் போனது ஏன் ? நிவின்பாலி இந்த பிரச்சனைய எப்படி கையாண்டார் என்பது க்ளைமாக்ஸ்.
ஆரம்ப காட்சிகளை பார்த்தபோது ஏதோ சுவாரஸ்யமாக சொல்லப்போகிறார்கள் என்கிற எண்ணம் ஏற்படுவது உண்மைதான்… ஆனால் இதெல்லாம் ஒரு கதையா, அதுவும் மலையாள திரையுலகில் இருந்து என்கிற அதிர்ச்சியும் ஆச்சரியமும் இடைவேளைக்குப்பின் நம்மை தொற்றி கொள்கிறது.
சாமியராக வரும் நிவின்பாலி ஏதோ பெரிதாக செய்யப்போகிறார் என எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார். கோர்ட்டில் அவர் வாதாடுவதும் கூட நன்றாகவே இருக்கிறது.. ஆனால் இடைவேளைக்கு பிறகு மீதி படம் முழுக்க நீதிமன்ற பார்வையாளர்களில் ஒருவராக இவரும் கையை கட்டிக்கொண்டு நிற்பதை நம்மால் ஜீரணிக்க முடியவில்லை.
ராஜாவாக வரும் நடிகர் லால் விக்கல் பிரச்சனையால் சிரமப்படுவதையும், ராஜா என்கிற அகங்காரத்தை வெளிப்படுத்துவதையும் நன்றாகவே செய்திருக்கிறார். விசுவாசமான மந்திரியாக இளம் நடிகர் ஆசிப் அலி, நிவின்பாலியை விட ஸ்கோர் செய்கிறார் என்பதே உண்மை. நாயகியாக நடித்துள்ள ஷான்வி ஸ்ரீவாத்சவ், அப்பாவி பெண்ணாக அழகில் அசத்துகிறார். அதேசமயம் நீதிமன்றத்தின் இறுதி காட்சிகளில், குறிப்பாக சில நிமிடங்கள் வரை அரை நிர்வாணமாக நடித்து நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கிறார். நிச்சயம் இவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு..
பாதிப்படத்திற்கு மேல் நீதிமன்ற அறையிலேயே கதை நகர்கிறது. நீதிபதியாக வரும் சித்திக், வழக்கறிஞராக வரும் லாலு அலெக்ஸ், நீதிமன்றத்தில் மற்ற வழக்கிற்காக வந்த விவாகரத்து தம்பதி, அந்த போலீஸ் கான்ஸ்டபிள் என பலரும் ரசிக்கும்படியான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள். சாட்சி சொல்ல வரும் மல்லிகா சுகுமாரனின் வாக்குமூலம் அன்னைக்கு காலைல ஆறுமணி இருக்கும் என்கிற ரோபோ சங்கரின் காமெடியை நினைவூட்டி சிரிப்பையும் வரவழைக்கிறது. விதி பட ஜெய்சங்கர் பாணியில் தான்வியை வழக்கறிஞர் விசாரிப்பது அபத்தம் என்றால், நீதிபதியே பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் இருந்து கண்ணீரை வரவழைப்பதற்காக அவரை சித்தரவதை செய்யும்படி காவலரிடம் கூறுவது பேரபத்தம்.
ரசிகர்களுக்கு பிடித்த இளம் ஹீரோவான நிவின்பாலி, ரிச்சி, மூத்தோன் என அவ்வப்போது தனக்கு மட்டுமே பிடித்த மாதிரி (புரிகிற மாதிரி) கதைகளில் நடிக்கும்போது ரசிகர்களை மறந்து விடுகிறார். இந்த மஹாவீர்யர் படமும் அந்த லிஸ்ட் தான்.

Must Read

spot_img