spot_img
HomeNewsதேசிய அளவில் மெடல்கள் பெற்ற 20 தமிழ்நாடு குத்துச்சண்டை வீரர்களுடன்  அருண் விஜயின் திடீர் சந்திப்பு

தேசிய அளவில் மெடல்கள் பெற்ற 20 தமிழ்நாடு குத்துச்சண்டை வீரர்களுடன்  அருண் விஜயின் திடீர் சந்திப்பு


அருண் விஜய்க்கு விளையாட்டுகளின் மீதிருக்கும் தணியாத பேரார்வம் அனைவரும் அறிந்ததே. இது வெறும் வாய்வழிச் செய்தி மட்டும் அல்ல. தொடர்ந்து கட்டுக்கோப்பாகத் தமது உடலை அவர் வைத்திருப்பதும், அன்றாடம் திவிரமாக அவர் உடற்பயிற்சி செய்வதும் காரணங்களாகும். அருமையான ஆஜானுபாகுவான தோற்றமும் உடல் வலுவும் கொண்ட இவர், தனக்குள் பெருக்கெடுக்கும் விளையாட்டு ஆர்வத்தைத் தன் மட்டோடு அடக்கிக்கொள்ளவில்லை. தேசிய அளவில் மெடல்களை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 20  குத்துச்சண்டை வீர்களுக்கும் (தங்கம் வென்ற ஆண்கள் 8, பெண்கள் 3, மற்றும் வெள்ளி பெற்றவர்கள் 9) பாராட்டுகளைத் தெரிவிக்கும் விதமாகத் தமது ஆதரவுக் கரத்தையும் நீட்டியிருக்கிறார்.
ஒலிம்பிக்ஸ் கேம்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா சார்பில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான குத்துச்சண்டை சேம்பியன்ஷிப் போட்டிகளில் ரன்னர் சேம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழ்நாடு பயிற்சியாளர் செந்தில்நாதனுக்கும் பாராட்டுக்களை அருண் விஜய் தெரிவித்தார். மேற்படி விளையாட்டு வீரர்கள் பெற்ற வெற்றியைப் பாராட்டும் விதமாக நேரில் அவர்களைச் சந்தித்து வாழ்த்தினார்.
புன்னகையோடு அருண் விஜய், “இந்த வெற்றிக் களிப்பு 20 சாதனையாளர்களுடன் நின்றுவிடாது. நம் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக்குமான வெற்றி இது. என்னைப் பொருத்த வரை இந்த 20 பேரும் உண்மையிலேயே சாகசம் நிகழ்த்தியவர்கள்” என்றார். மேலும் அவர் தன் பேச்சை நியாயப் படுத்தும் வகையில், “ஒரு விளையாட்டு வீரராகவோ, தடகள வீரராகவோ இருப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதிலும் குறிப்பாகக் குத்துச் சண்டை வீரரின் சாகசம் நிச்சயம் எளிதானதல்ல. அவர்கள் பெருமளவில் உடல் மற்றும் மன ரீதியாகத் தயாராகவேண்டியிருக்கும். ஒரு ஜென் துறவியின் மனப் பக்குவம் அவர்களிடம் இருக்க வேண்டும். தங்கள் செயல்பாட்டை திடீரென நிகழ்த்தும் ஆற்றல் அவர்களுக்கு அவசியமாகும். அதே சமயம் ஒவ்வொரு வினாடியையும் துல்லியமாக் கணித்துச் செயலாற்றவும் வேண்டும். தனிப்பட்ட முறையில் வெளியாகவிருக்கும் என்னுடைய, ‘பாக்ஸர்’ திரைப்படத்துக்காக நான் சில பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டியிருந்தது.  அந்தப் பாத்திரத்தில் நடிக்க நான் மணிக்கணக்கில் பயிற்சி செய்தேன். ஆனால் இந்த வீரர்கள் தளராத முயற்சியோடு   இரவு பகலாக, ஆன்மசுத்தியோடு வியர்வை சிந்துவதைப் பார்க்கும்போது உண்மையிலேயே திகைப்பாக இருக்கிறது. அதுவும் சில சமயங்களில் அவர்களுக்கான ஆதரவு என்பது மிகக் குறைவாக இருக்கும்போதும் அவர்களின் கடுமையான பயிற்சி வியப்பை ஏற்படுத்துகிறது.  அவர்களை நேரில் சந்தித்துப் பாராட்டுக்களையும் ஊக்குவிப்பையும் அளிக்க விரும்பினேன்.  ஆனால் உண்மையைச் சொல்லவேண்டுமானால் அவர்கள் தங்களது அனுபவங்களையும், பயணத்தையும் என்னுடன் பகிர்ந்துகொண்டபோது நான் அவற்றால் ஆழமாக ஈர்க்கப்பட்டு உத்வேகம் பெற்றேன்.  அவர்கள் சந்தித்த சவால்களும், அவறை எதிர்த்து அவர்கள் போரிட்டதும் எனக்கு அதிகளவிலான ஊக்கத்தை அளித்தன. அவற்றை நான் என் வாழ்நாள் முழுவதும் சுவாசிக்க விரும்புகிறேன். மேலும் அவர்களின் தொடர்பு என் ஆன்மாவை ஊக்குவிப்பாலும், நேர்மறை எண்ணங்களாலும் மேன்மைப்படுத்தி நிரப்பியது. அவர்களுடன் நிரந்தரமான நட்பைத் தொடர விரும்புகிறேன்”   எனவும் சொன்னார்.
அவர்களுடையை வருங்கால தொழில்முறைச் சாதனைகள் அனைத்துக்கும் தான் உறுதுணையாக இருப்பேன்  எனவும் அருண் விஜய் உறுதியளித்தார்.
நடிப்பைப் பொருத்த வரையில் அருண் விஜய் தற்போது  ‘அக்கினிச் சிறகுகள்’, ‘பாக்ஸர்’, மற்றும் ‘மாஃபியா’ ஆகிய படங்களில் நடித்துவருகிறார். அவை ஒவ்வொன்றும் தயாரிப்பின் வெவ்வேறு நிலைகளில் இருக்கின்றன. ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு கதைக் களங்களும், வெவ்வேறு வகையான பாத்திரங்களும் உள்ளன. ரசிகர்கள் மத்தியில் அவை உச்சகட்ட எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கின்றன. இந்தப் படங்களைப் பற்றிய ஏராளமான செய்திகளும் புதுப் பட அறிவிப்புக்களும்  விரைவில் அணிவகுக்க உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img