அண்ணன் சேரன் அவர்கள் இயக்குனர் நடிகர் என்பதையும் தாண்டி, தங்கள் குடும்பத்தில் ஒருவராக தமிழக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.
ஆட்டோகிராபில் வேற்று மாநிலத்தவர்களால் அவமானப்படுத்தப்பட்ட போதும், சொல்ல மறந்த கதையில் தன் மாமனாரால் அவமானப்படுத்தப்பட்ட போதும், அது திரைப்படத்திற்காக கற்பனையாக எழுதப்பட்ட கதை, அதற்காக எடுக்கப்பட்ட காட்சி என்பதையும் தாண்டி மக்கள் அவருக்காக பரிதாபப் பட்டார்கள். கோபப்பட்டார்கள். அந்தப் படங்களின் வெற்றியே அதற்கு சாட்சி.
ஒரு படத்தில் அவர் சிகரெட் பிடிப்பது போல் ஒரு காட்சி. திரையரங்கில் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணி” அய்யய்யோ சேரன் சிகரெட் எல்லாம் குடிக்க மாட்டாரே..” என்று புலம்பிய போது ஒரு நடிகரை நம் மக்கள் எப்படி உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டேன்.
அவர் குடும்பத்தில் ஒரு சிக்கல் ஏற்பட்டபோது ஒட்டுமொத்த தமிழகமே தன் வீட்டுப் பிரச்சினை போல் எண்ணி அவருக்காக மனம் உருகியதும், அவர் பத்திரிக்கையாளர்கள் காலில் விழுந்து வணங்கியதைக் கண்டு மக்கள் கண்கலங்கியதும் யாரும் மறந்து விடவில்லை.
எனது வெங்காயம் திரைப்படம் வெளியாகி சரியாக கவனிக்கப்படாத பொழுது, எந்த சம்பந்தமும் இல்லாமல் ஒரு சாதாரண பார்வையாளனாக படத்தைப் பார்த்த அவர், ஒரு நல்ல படம் மக்களை சென்றடையாமல் போய்விடக்கூடாது என்று அவருக்குத் தெரிந்த அத்தனை தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என்று எந்த கவுரவமும் பார்க்காமல் ஒவ்வொருவரிடமும் சென்று அந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க கெஞ்சியதை என் கண்ணால் பார்த்திருக்கிறேன்.
அவர் பணம் சம்பாதிக்க திரைத்துறைக்கு வந்தவர் என்றால் யாரோ ஒருவரின் படத்தை தூக்கிக்கொண்டு இப்படி எல்லோரிடமும் கெஞ்சி இருக்க வேண்டியதில்லை. தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்க வேண்டும், நல்ல திரைப்படங்கள் வரவேண்டுமென்பதில் அவரைப்போல அக்கறை கொண்டவர் வேறு யாருமில்லை.
சினிமாவில் சம்பாதித்த பணத்தை நிறுவனங்களிலும் ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்து தன் குடும்பத்தை வளப்படுத்திக் கொள்ளும் சிலருக்கு மத்தியில், C2H என்ற நிறுவனத்தை தொடங்கி சினிமாவை மாற்று வழியில் மக்களுக்கு கொண்டு செல்ல முயற்சி செய்து அதனால் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளானவர்.
இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று அங்கு நடக்கும் சம்பவங்களை நாடே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோ என்று சொல்லப்படுகிறது. அது உண்மையா பொய்யா என்பதை பற்றி நமக்கு கவலை இல்லை. ஆனால் பார்க்கின்ற மக்கள் அதை உண்மை என்றே நம்புகிறார்கள்.
ஒரு பெண் அவர் தவறான எண்ணத்துடன் தன்னை தொட்டதாக சொல்கிறார். ஒரு நடிகர் அவரை வாடா போடா என்று ஒருமையில் பேசுகிறார். ஒரு சராசரி மனிதனுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடந்தாலே அதை மிகப்பெரிய அவமானமா கருத வேண்டி இருக்கும் பொழுது, மக்களால் கொண்டாடப்படும் ஒரு கலைஞன் கூனிக் குறுகி நிற்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
விஜய் சேதுபதி சொன்னதற்காக தான் அங்கே போனேன் என்று சொல்கிறார். அவருக்கு ஏற்பட்ட அவமானங்கள் தனக்கு ஏற்பட்டதாக எண்ணி மரியாதைக்குரிய விஜய் சேதுபதி அவர்கள் சேரன் அண்ணனை இதற்கு மேலும் அவமானப்பட வைக்காமல் வெளியே அழைத்து வந்து விட வேண்டும்.
இல்லாவிட்டால் என்னைப் போல் அவரால் பயனடைந்தவர்கள் மற்றும் அவர் மீது மரியாதை கொண்ட பலரையும் ஒருங்கிணைத்து பிக்பாஸ் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை வெளியே அழைத்து வருவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை.
சங்ககிரி ராஜ்குமார் இயக்குனர்
03-08-19.