இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாக்யராஜ் பேச்சு
சினிமா ப்ளாட்பார்ம் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் V.T ரித்திஷ்குமார் தயாரித்துள்ள படம் நான் அவளைச் சந்தித்த போது. இப்படத்தை எழுதி இயக்கி இருப்பவர் எல்.ஜி ரவிசந்தர். நேற்று இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் தியேட்டரில் நடைபெற்றது.
விழாவில் கலந்துகொண்டு V.T ரித்திஷ்குமார் பேசியதாவது…
“வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இன்று என் வாழ்வில் முக்கியமான நாள். சினிமாவிற்காக நல்லகதை தேடிக்கொண்டு இருந்தேன். எல்.ஜி.ரவிச்சந்தர் இக்கதையைச் சொன்னார். மனதே உடைந்து போனது. இப்படம் ஒரு உண்மைச்சம்பவம். இந்தப்படத்தை எடுப்பதற்காக நிறைய சிரமப்பட்டு இருக்கிறோம். சினிமா என்பதை தாண்டி ஒரு குடும்பமாக இப்படத்தில் வேலை செய்துள்ளோம். இதை வெறும் சினிமாவாக பார்க்காமல் என் வாழ்க்கையாக நினைத்து இப்படத்தை எடுத்துள்ளேன். நிறையபேர் என்னை என்கரேஜ் பண்ணவில்லை. டிஸ்கிரேஜ் தான் செய்தார்கள். இதை எல்லாம் தாண்டி இப்படம் கவிதை போல் இருக்கும். படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள்” என்றார்
தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது,
“இந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்று தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை தராமல் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நான் என் பையனை வைத்து இரண்டு படம் எடுத்தேன். என் மகன் ஒருநாள் இனி என்னை நடிக்க வைக்காதீர்கள் என்றான். நான் சொல்லியும் கேட்கவில்லை. நடிகைகளை கட்டிப்பிடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. உனக்கும் என்றேன். அவன் சம்பதிக்கவே இல்லை. பெரிய நஷ்டங்களைச் சந்தித்து பின் பத்து வருடங்களை கடந்தான். இப்போது எல்.கே.ஜி படத்தை எடுத்து தயாரிப்பாளருக்கு லாபம் கொடுக்கும் இயக்குநராக இருக்கிறான். அதுபோல் என் மகனின் நண்பனான இப்படத்தின் இயக்குநர் ரவிசந்தரும் பெரிதாக ஜெயிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். பொய்சொல்லி படம் எடுக்கக்கூடாது. சூட்டிங் எத்தனை நாள் என்று சொல்கிறோமா அத்தனை நாட்களுக்குள் படத்தை எடுக்க வேண்டும். 200 நாள் படம் எடுப்பவரெல்லாம் இயக்குநர்களே கிடையாது. அதிக நாள் சூட்டிங் எடுக்கும் இயக்குநர்கள் எல்லாம் ஹீரோக்கள் ஹீரோயின்களை ஐஸ் வைப்பதற்காக படம் எடுக்கிறார்கள். ஒரு காட்சிக்கு என்ன தேவையோ அதற்கான செலவை மட்டும் தான் செய்ய வேண்டும். ஆடியன்ஸ் இப்பொழுது மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். நல்ல படத்தை கொண்டாடுகிறார்கள். எத்தனையோ சின்னப்படங்கள் பெரிதாக ஜெயித்திருக்கிறது. இப்படத்தின் இயக்குநருக்கு அடுத்தடுத்து படங்கள் கிடைக்கும். இப்படத்தின் ட்ரைலர் மிகச்சிறப்பாக இருக்கிறது. சின்னப்படங்கள் வரவேற்பைப் பெற்றால் நாட்டுக்கே நல்லது. இப்படத்தின் ஹீரோ மிகவும் நல்லவர் நிச்சயமாக அவன் மிகப்பெரிய வெற்றியை அடைவான். ” என்றார்
நடிகர் சாம்ஸ் பேசியதாவது,
“எனகு தமிழ்சினிமா லாபமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். இப்படத்தின் இயக்குநர் என்மீது நம்பிக்கை வைத்து என்னை நடிக்க வைத்துள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் படத்தில் பன்ச் டயலாக் எல்லாம் பேசி இருக்கிறார்..பாடல்கள் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. இப்படத்தில் உள்ள அள்ளிக்கொள்ளவா பாட்டை கே.ராஜன் சார் அருகில் இருந்து பார்க்கும் போது பயமாக இருந்தது. ஆனால் அவரும் பாட்டை ரசித்தார். பாக்கியராஜ் சார், பேரரசு சார் எல்லாம் கண்டெண்ட் கொடுக்க வேண்டும். இப்படம் பெரிதாக ஜெயிக்க வேண்டும்” என்றார்
நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசியதாவது,
“எப்போதும் பழைய ஆட்களிடம் வேலை செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு பிடித்தது எல்லாமே சினிமா தான். இப்படத்தில் கதை நான் கேட்கவே இல்லை. கதை மீது இயக்குநருக்கு பெரிய நம்பிக்கை உள்ளது. பாக்கியராஜ் சாரின் மகனால் தான் எனக்கு சந்திரமெளலி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. சினிமா பின்னணி இல்லாதவர்களும் நிறையபேர் சாதித்து இருக்கிறார்கள். அது எனக்குப் பெரிய ஊக்கத்தைத் தரும். இங்கு அவ்வளவு சீக்கிரம் யாரையும் நம்பிவிடக்கூடாது என்பதை கற்றுக்கொண்டேன். இந்தப்படத்தோட வாய்ப்பு கொடுத்ததிற்கு தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இருவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் வொர்க் பண்ண அனைவரும் என்னை நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள்” என்றார்
இசை அமைப்பாளர் ஹித்தேஷ் முருகவேள் பேசியதாவது,
“எனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி. இந்தப்படத்தின் இசையை ரொம்ப குவாலிட்டியாகப் பண்ணச்சொன்னார். 70 ஆர்கஸ்ட்ராவை வைத்து ரிக்கார்ட் பண்ணோம். இதை எல்லாம் இசை அமைப்பாளர்களும் ஃபாலோ செய்யவேண்டும்” என்றார்
இயக்குநர் ஏ வெங்கடேஷ் பேசியதாவது “நான் அவளைச் சந்தித்த போது படத்தின் டீம் நான்கு வருடமாக கஷ்டப்பட்டு படம் எடுத்திருக்கிறார்கள். இயக்குநர் அவரது அனுபவம் தான் படத்தை சிறப்பாக வந்திருக்கிறது என நினைக்கிறேன். சின்னப்படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கும் ஒருகாலம் வரும் என்று நம்புகிறேன். விஜய் நடித்த நிலாவே வா படத்தை சொன்ன நேரத்தில் எடுத்து முடித்து கொடுத்தேன். எஸ்.ஏ சி சார் எனக்கு பேசிய சம்பளத்தை விட அதிகமாக கொடுத்தார். குறிப்பாக சின்ன பட்ஜெட் படங்களை சீக்கிரமாக எடுத்து முடித்தால் எல்லாருக்கும் நல்லது. சந்தோஷ் சார் மிகவும் ஸ்ட்ரெக்கிள் பண்ணிக்கிட்டு இருக்கிறார் என்று தெரிகிறது. நிச்சயமாக அவர் ஜெயிப்பார். மொத்தமாக இந்த டீம் வெற்றிபெற வேண்டும்” என்றார்
இயக்குநர் பேரரசு பேசியதாவது,
“எனக்கு கைலாசா அமைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு நான்கு சிஸ்கைகள் தேவை. அதற்கு நடிகர் சாம்ஸ் தான் உதவ வேண்டும். நான் அவளைச் சந்தித்த போது என்ற இந்தப்படத்தின் டைட்டிலைக் கேட்டவுடன் எல்லோருக்கும் பழைய ஞாபகம் வந்துள்ளது. ஆனால் யாருக்கெல்லாம் மனைவி ஞாபகம் வந்துள்ளது என்று தெரியவில்லை. அப்பா பாசம் தந்தை பாசம் உள்ளபடங்கள் பார்க்கும் போது கூட அவர்கள் மீது பாசம் கூடுவதில்லை. ஆனால் காதல் படங்கள் பார்த்தால் காதல் கூடிவிடும். நல்ல லவ் ஸ்டோரிகளைப் பார்க்கும் போது நல்ல காதலைச் செய்யத் தோன்றும். அப்போ வெளிவந்த படங்கள் பெண்களை நல்லவிதமாக பார்க்க வைத்தது. பாக்கியராஜ் சாரின் படங்கள் எல்லாம் பார்க்கும் போது நம் மனது கெட்டுப்போக வில்லை. ஆனால் இன்று இளைஞர்கள் கெட்டுப்போவதற்கு சினிமாவே காரணமாக இருக்கிறது. கல்யாணத்திற்கு முன்னாடியே ஆண் பெண் இணைந்து வாழ்வது இப்போது மிகச் சாதரணமாகி விட்டது. பெண்கள் மூன்று வகையால் மாட்டிக்கொள்கிறார்கள். ஆண்களை நம்பி தன் வாழ்க்கையை ஏமாந்து போகிறார்கள். அவர்களைத் தான் பாக்கியராஜ் சார் எச்சரித்து இருந்தார். மெளன கீதங்கள் என்ற படம் மூலமாக தமிழ்நாட்டின் மொத்தப் பெண்களுக்கும் பிடித்த இயக்குநராக மாறியவர் பாக்கியராஜ் சார். அவர் மீது வழக்குப் பதிவு செய்ததிற்குப் பின்னால் பெரிய சூழ்ச்சி இருக்கிறது. இன்று செல்போனாலே பாதி வாழ்க்கைப் பரிபோகிறது. பெண்கள் அமைப்பிற்கு நான் வேண்டுகோளாக வைக்கிறேன். பாக்கியராஜ் சார் பெண்களுக்கான இயக்குநர். இந்தப்படத்தின் ட்ரைலர் பார்க்கும் போதே நல்லகதை இருக்கும் என்று தெரிகிறது. ஒளிப்பதிவு இசை எல்லாம் சிறப்பாக இருக்கிறது. எல்.ஜி ரவிசந்தர் என் நண்பர். எங்கள் சங்கத்தில் அங்கம் வகிப்பவர். இந்தப்படம் அவர் வாழ்க்கையில் நல்ல வெற்றியைத் தரும்” என்றார்
இயக்குநர் எல்.ஜி ரவிசந்தர் பேசியதாவது,
“நானும் படம் டைரக்ஷன் பண்ணிக்கிட்டே இருக்கிறேன். எல்லாரும் சொல்வார்கள் ஒருபடம் பண்ணா பெரிதா ஆயிடலாம் என்பார்கள். இன்னைக்கும் நான் டூவீலர் தான் போறேன். இன்னைக்கு சினிமா மேல் ரொம்ப பயமா இருக்கு. இந்த லைனை தயாரிப்பாளரிடம் சொன்னேன். வாழ்க்கையில் நடந்த இன்சிடெண்டை தான் சொன்னேன். உடனே அவர் படத்தை எடு என்றார். எனக்கு அதுவே மிகவும் பயமாக இருந்தது. ஆனால் படத்தை தயாரிப்பாளர் பார்த்துவிட்டு நான் எதிர்பார்த்ததை விட நல்லா எடுத்திக்கிறீர்கள் என்றார். இது எனக்கு ஒரு கோடி வாங்கியதற்கு சமம். நான் எல்லா மொழிகளிலும் படம் வொர்க் பண்ணி இருக்கிறேன். ஒரு பெரிய இயக்குநராக வர முடியவில்லை. ஆனால் இந்தப்படம் வெளியான பின் நான் பெரிய இயக்குநரா வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தப்படத்தின் இசை அமைப்பாளர் உள்பட அனைவருமே எனக்காக உழைத்தார்கள். தயாரிப்பாளர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்” என்றார்
இயக்குநரும் நடிகரும் ஆன கே.பாக்கியராஜ் பேசியதாவது,
“இப்படத்தின் இசை அமைப்பாளர் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கிறார். கேமராமேன் செல்வா நல்லா வேலை செய்பவர். ஹீரோ சந்தோஷ் அவரது கஷ்டங்களைச் சொன்னார். அவரும் டெபனட்டா ஒரு ப்ரேக் கிடைக்கும். எல்,ஜி.ரவிச்சந்தர் காமெடி டயலாக் எழுதுகிறவர் என்றார்கள். ஆனால் சீரியஸாக இருந்தார். ஆனால் அவர் பேசியபோது தான் தெரிகிறது அவர் எவ்வளவு காமெடி செய்பவர் என்று. நான் சினிமாவைப் பார்த்து கண்கலங்கி ரொம்பநாள் ஆகிவிட்டது. இந்தப்படத்தைப் பார்த்த சில பெண்கள் அழுதார்கள் என்று கேள்விப்பட்டேன். அப்படி என்றால் நிச்சயம் இந்தப்படம் அனைவருக்கும் பிடிக்கும். எனக்குத் தெரிஞ்சி இரண்டு பெட்ஷீட் வியாபாரிகளை தயாரிப்பாளர்கள் ஆக்க முயற்சி நடந்த கதை உண்டு. இங்கு ஏமாறுவதற்கான சூழல் நிறைய உண்டு. இப்படத்தின் தயாரிப்பாளர் ரொம்ப நம்பிக்கையாக வந்திருக்கிறார். அவருக்கு ஏற்ற டீமும் அமைந்துள்ளது. நான் டிஸ்டிப்யூட்டரிடம் கதை சொல்வது பெரிய கொடுமை. பாரதிராஜா அப்படி நிறையபேரிடம் கதை சொல்லி சிரமப்படுவதைப் பார்த்திக்கிறேன். அதனால் நான் எடுக்கும் படத்தில் யாருக்கும் கதை சொல்லமாட்டேன். முந்தானை முடிச்சு படத்தின் கதையை கேட்டபின் ஏவி.எம்-ல் இப்படத்திற்கு இளையராஜா தான் இசை அமைக்கணும் என்றார்கள். நான் கங்கை அமரனை பிக்ஸ் பண்ணி இருந்தேன். பின் ஏவி.எம் கங்கை அமரனை சந்தித்து அவருக்கு இரு படங்கள் தருவதாகச் சொல்லி இந்தப்படத்தை இளையராஜாவிற்கு கொடுத்தார்கள்.
நான் வளர்ந்தது பெயர் வாங்கியது எல்லாமே பெண்களால் தான். எம்.ஜி.ஆர் ஒரு மீட்டிங்கில் பெண்கள் போனபின் ஆண்களிடம் பேச வேண்டும் என்றார். பின் ஆண்களிடம் அவர் சொன்னார், “ரகசியம் ஒன்றுமில்லை. இவ்வளவு பெரிய கூட்டத்தில் ஒன்றாக கலைந்து போகும்போது பெண்கள் அவதிப்படக்கூடாது என்று நினைத்து தான் அவர்களை முதலாவதாக போகச் சொன்னேன்” என்றார். அப்படி யோசிக்கக் கூடிய எம்.ஜி.ஆர் என் படங்களை பார்த்துவிட்டு என்னை கலைவாரிசு என்று சொல்லி இருக்கிறார் என்றால் நான் பெண்களை எப்படி மதித்திருப்பேன் என்று புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தப்படத்தைப் பார்த்து சில பெண்கள் அழுததாகச் சொன்னதால் எனக்கும் இப்படத்தை உடனே பார்க்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறது” என்றார்
இறுதியில் சிறப்புவிருந்தினர்கள் இசை தட்டை வெளியிட படக்குழுவினர் அனைவரும் பெற்றுக்கொண்டார்கள்.