spot_img
HomeNewsஇறுதி கட்ட படப்பிடிப்பில் நயன்தாராவின் “மூக்குத்தி அம்மன்” ! 

இறுதி கட்ட படப்பிடிப்பில் நயன்தாராவின் “மூக்குத்தி அம்மன்” ! 

ஒரு படத்தின் பெயர் அறிவிப்பிலிருந்தே பெரும் ஆச்சர்யத்தை, எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உண்டாக்குவது இன்றைய காலகட்டதில் கடினமான ஒன்று. “மூக்குத்தி அம்மன்”  படத்தில் அம்மனாக நயன்தாரா, RJ பாலாஜியுடன் இணைந்து நடிக்கிறார். RJ பாலாஜி இயக்குநர் NJ சரவணன் உடன் இணைந்து இயக்குகிறார் என்ற போது கோடம்பாக்கமே வியந்து பார்த்தது. தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர் என ஒரு திரைப்படத்தில் பங்குபெறும் அனைவருக்கும் ஒரு படைப்பு படமாக்கப்படும்போதே அதிக மகிழ்ச்சி தரும் ஒன்றாக இருப்பது அதிசயமே. இவையனைத்தும் Dr.ஐசரி K கணேஷ் வேல்ஸ், ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிக்கும் “மூக்குத்தி அம்மன்” படத்தில் அரங்கேறியுள்ளது. பெயர் அறிவிக்கப்பட்ட குறுகிய காலத்தில் 44 நாட்களில்  90 சதவீத படப்பிடிப்பை அதிரடியாக முடித்திருக்கிறது படக்குழு.

நடிகர், இயக்குநர் RJ பாலாஜி படம் குறித்து கூறியதாவது…

Dr.ஐசரி K கணேஷ் போன்ற ஒரு தயாரிப்பாளர் நம் பக்கம் இருந்தால் எதுவும் சாத்தியமே. அவர் போன்ற ஒரு தயாரிப்பாளர் இருக்கும் போது நாம் படப்பிடிப்பில் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. நாம் கவலைகொள்ள வேண்டிய ஒரே விஷயம் நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அளவில்லா சுதந்திரத்தை எப்படி வீணாக்காமல் பயன்படுத்துவது என்பது தான். அதைப் படக்குழு தெளிவாக உணர்ந்து வேலை செய்திருக்கிறோம். படத்தை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உருவாக்குவது ஒன்று தான் எங்கள் குறிக்கோள். அவர்களின் எதிர்பார்ப்பை கண்டிப்பாக பூர்த்தி செய்வோம். மொத்த படக்குழுவும் படத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறது. நவம்பர் 29, 2019 அன்று படப்பிடிப்பை துவக்கி 44 நாட்களில் 90 சதவீத படப்பிடிப்பை முடித்திருக்கிறோம். இன்னும் ஒரே ஒரு வார சென்னை படப்பிடிப்புடன் மொத்த படப்பிடிப்பையும் முடிக்கவுள்ளோம் என்றார்.


மேலும் படக்குழு பற்றி அவர் கூறியதாவது…
இயக்குநர்  NJ சரவணன் இல்லையென்றால் இத்தனை சீக்கிரம் படப்பிடிப்பை முடித்திருக்க முடியாது. அவரது உழைப்பு அபாரமானது. நயன்தாரா இப்படத்திற்காக தந்திருக்கும் அர்ப்பணிப்பு வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. இந்த கதாப்பாத்திரத்திற்காக அவர் விரதம் இருந்திருக்கிறார். தன் முழு ஆத்மாவையும் ஒருங்கினைத்து பணிபுரிந்திருக்கிறார். இப்படம் அவர் சினிமா வாழ்வில் வெகு முக்கியமான படமாக என்றென்றும் நிலைத்திருக்கும்.  மேலும் அவரது கதாப்பாத்திரம் படத்திற்கு பெரும் பலமாகவும் இருக்கும் என்றார்.

தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் கூறியதாவது…
ஒரு மிகப்பெரிய நட்சத்திரத்தை வைத்துகொண்டு இப்படக்குழு இவ்வளவு சீக்கிரமாக முக்கால்வாசி படத்தை முடித்திருப்பது எனக்கு பெரும் ஆச்சர்யமே.  RJ பாலாஜியும் அவரது குழுவும் ஒரு மிகப்பெரும் பணியை வெகு சுலபமாக முடித்திருக்கிறார்கள். அவர்கள் சினிமா மீது வைத்திருக்கும் காதலும், அவர்களது திறமையும் தான் இதற்கு காரணம். தயாரிப்பாளர் விரும்பும் இயக்குநராக பலகாலம் அவர் தமிழ் சினிமாவில் நிலைத்திருப்பார். கதையை சொல்லும் விதத்தில் மட்டுமல்லாது அதனை உருவாக்கும் நேர்த்தியிலும் தயாரிப்பாளருக்கு பிடித்தவராக இருக்கிறார்  RJ பாலாஜி. நயன்தாரா இப்படத்திற்கு கொடுத்திருக்கும் உழைப்பு அற்புதமானது. அவர் விரதம் இருந்து வெகு பக்தியுடன் இந்தக்காதப்பாத்திரத்தை செய்திருக்கிறார். அவர் ஏன் தன் தொழிலில் தலை சிறந்தவர் என்பதற்கு இதுவே சான்று. இப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும் படைப்பாக இருக்கும் என்றார்.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் Dr.ஐசரி K கணேஷ் தயாரிக்கும் “மூக்குத்தி அம்மன்” திரைப்படத்தை RJ பாலாஜி NJ சரவணன் உடன் இணைந்து இயக்குகிறார். படத்தின் முதன்மை கதாபத்திரத்தில் அம்மனாக நயன் தாரா நடிக்கிறார். அவருடன் இணைந்து RJ பாலாஜி நடிக்கிறார். இவர்களுடன் மௌலி, ஊர்வசி மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். “அவள்” படத்தின் இசையமைப்பாளர்  கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். “தானா சேர்ந்த கூட்டம்” பட ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img