spot_img
HomeNewsமுக்கிய வேடத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் ‘காடன்’

முக்கிய வேடத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் ‘காடன்’

ஈரோஸ் இண்டர்நேஷனல் ஹாட்ரிக்!! ‘காடன்’, ‘அரண்யா’, ‘ஹாத்தி மேரே சாத்தி’ – மூன்று திரைப்படங்களின் டீஸர் வெளியீடு – பிரபு சாலமன் இயக்கத்தில் நாயகனாக ராணா தக்குபதி, முக்கிய வேடத்தில் விஷ்ணு விஷால்.  வெள்ளித்திரையில் உலகமெங்கும் 02 ஏப்ரல் 2020 முதல்!

நம் நாட்டின் பிரசித்திப்பெற்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஈரோஸ் இண்டர்நேஷனல், தனித்துவமான மற்றும் முக்கியமான உள்ளடக்கத்தை ஆதரிப்பதிலும், இந்திய சினிமாவை ஒரு முற்போக்கான எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்வதிலும் முன்னணி வகிக்கிறது.

தற்போது ஈரோஸ் இண்டர்நேஷனல் ஒரே நேரத்தில், தமிழில் ‘காடன்’, தெலுங்கில் ‘அரண்யா’ மற்றும் இந்தியில் ‘ஹாத்தி மேரே சாத்தி’ என மூன்று படங்களின் டீஸரை வெளியிட்டு இருக்கிறது!

இம்மூன்று படங்களுமே ஒரு மனிதனுக்கும், யானைக்குமான ஆழமான உறவை உணர்வுப்பூர்வமாக, நெஞ்சம் நெகிழத்தக்க வகையில் எடுத்துரைக்கிறது.  அதிலும் குறிப்பாக உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு இந்த மும்மொழி திரைப்படம் உருவாகியிருக்கிறது என்பதால் இன்னும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

மிகுந்த எதிர்பார்ப்புகளைப் பெற்றிருக்கும் இந்த மும்மொழி திரைப்படத்தில், கதாநாயகனாக ராணா தக்குபதி நடிக்க, அவருடன் இணைந்து விஷ்ணு விஷால் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்திருக்கிறார்.  இந்தியில் ‘ஹாத்தி மேரே சாத்தி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், புல்கிட் சாம்ராட் அவருடன் இணைந்து நடிக்கிறார். இந்த மூன்று திரைப்படங்களிலும் ஸ்ரியா பில்கோங்கர் மற்றும் சோயா உசேன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

இம்மும்மொழி திரைப்படம் அசாமின் காசிரங்காவில் யானைகளின்  தாழ்வாரங்களை மனிதர்கள் ஆக்கிரமித்த துரதிர்ஷ்டவசமான ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டிருக்கிறது.  இந்த மும்மொழித் திரைப்படம் ஒரு மனிதனின் விவரிப்பாக, காட்டையும் அதன் விலங்குகளையும் பாதுகாக்கும் ஒரே நோக்கத்தோடு தான் வாழ்ந்த அர்ப்பணிப்பு வாழ்வின் அடித்தளத்தை, ஆக்கிரமிப்பு குணங்கொண்ட மனிதர்களின் முயற்சிகள் சீர்குலைக்க முற்படுகையில், காட்டையும், விலங்குகளையும் மீட்டெடுக்க முற்படும் போராட்டத்தின் மையப்புள்ளியாக அவன் எப்படி மாறுகிறான் என்பதே இதன் கதைகளம். இந்த முக்கிய வேடத்தில் ராணா தக்குபதி நடித்திருக்கிறார்.

ஈரோஸ் இண்டர்நேஷனல் துணை தலைவரும், நிர்வாக இயக்குனருமான சுனில் லல்லா பேசும் போது, ‘இந்த மூன்று படங்களின் விவரிப்பும் மிகவும் சிறப்பானது. இந்த உன்னதமான தனித்துவமான கதைகளம், ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும்’ என்றார்.

இப்படத்தை  இயக்குனரும், விலங்கின ஆர்வலருமான பிரபு சாலமன் இயக்குவது மிகவும் பொருத்தமானதாக அமைந்திருக்கிறது.   இப்படத்தின் இயக்குனர் பிரபு சாலமன், ‘இந்த படம் குறித்து நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக படைப்பதற்கு இந்த கதைகளத்தை தேர்ந்தெடுத்ததன் முக்கிய நோக்கம், காடுகளைப் பற்றியும், அதன் நில அமைப்புகள், நீராதாரங்கள், தட்பவெட்பம், பருவகாலங்கள், அதில் வாழ்கின்ற உயிரினங்கள் தாவரயினங்கள் மற்றும் அவற்றின் வாழ்க்கைமுறை என இவையனைத்தையும் உள்ளடக்கிய சுற்றுச்சூழல் குறித்த எந்தவொரு அறிதலும் புரிதலும் இல்லாமலே மனிதன்  அதை கடந்துப் போவதையும், அதனை வளர்ச்சி என்ற பெயரில் ஆக்கிரமிப்பதையும் அழிப்பதையுமே  வழக்கமாக கொண்டிருக்கிறான். இந்த படம் சுற்றுச்சூழல்  மற்றும் விலங்கினங்கள் எவ்வாறு மனித வாழ்விற்கு இன்றியமையாததாக இருக்கிறது என்பதை  தெளிவுபடுத்தும்.
இப்படம் இந்த நாட்டின் பல்வேறு பகுதிகளையும் முறையாக சென்றடைய வேண்டும் என்பதற்காகவே மூன்று மொழிகளில் தயாராகி இருக்கிறது.

மேலும் இந்த விஷயம் மக்கள் மத்தியில் விழிப்புணரச்சியை ஏற்படுத்தும் ஒரு பேசுபொருளாக மாற வேண்டும் என்பதோடு, இதன் மூலம் சமூகத்தில் ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியும் என நான் திடமாக நம்புகிறேன்’, என்றார்.

இம்மும்மொழி திரைப்படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ராணா தக்குபதி பேசும் போது, ‘என்னுடைய திரைப்பயணத்தில் ‘பாகுபலி’ திரைப்படம் எனக்கு ஒரு மிகப் பெரிய சவாலாக அமைந்திருந்தது என நான் பல மேடைகளில் பேசியிருக்கிறேன்.  ஆனால், இந்த படத்திற்காக
அடர்ந்த காடு, அதன் பிரம்மாண்டம்,  விலங்கினங்கள், பறவையினங்கள் என வித்தியாசமான, முற்றிலும் எதிர்பாராத சூழலில்  நடித்தது, அதைவிட மிகப்பெரிய சவாலாக இருந்தது.  அதிலும் குறிப்பாக யானைகள் மிகவும் பிரமிப்பானவை. இந்த அனுபவம் எனக்குள் ஒரு பெரிய மாற்றத்தையே உருவாக்கியது, என்னையும் மாற்றியது  என்றால் அது மிகையில்லை.’ என்றார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் விஷ்ணு விஷால், ‘இயற்கை என்றாலே எப்போதும் எனக்குள் ஒரு பயம் உண்டு. அதன் பிரம்மாண்டம் எனக்கு எப்போதுமே ஒரு மிரட்டலாகவே தோன்றும். ஆனால் இப்படம் எனக்கு ஒரு மிகப்பெரிய வரமாக அமைந்து, இயற்கை – சுற்றுச்சூழல் குறித்த ஒரு புரிதலை எனக்கு உருவாக்கியிருக்கிறது. அந்த அனுபவம் உங்களுக்கும் நிச்சயம் கிடைக்கும். இந்தப் படம் ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் உந்துசக்தியாகவே நான் பார்க்கிறேன்.

இப்படத்தில் இயற்கை எழிலின் மகத்துவத்தையும், போராட்டக் களத்தின் பரபரப்பையும் அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார் அறிமுக  ஒளிப்பதிவாளர் அசோக் குமார். இப்படத்தின் படத்தொகுப்புக்கு  புவன் பொறுப்பேற்றிருக்கிறார். இதன் மூலம் அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரையுலகுக்கு ஒரே நேரத்தில்  அறிமுகமாகிறார். ஸ்டண்ட்ஸ் சிவா, ஸ்டன்னர் சாம் இப்படத்தின் அதிரடி காட்சிகளுக்கு விறுவிறுப்பேற்றியிருக்கிறார்கள்.

இப்படத்திற்கு ஷாந்தனு மோய்த்ரா இசையமைத்திருக்கிறார். ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ திரைப்படத்திற்காக ஆஸ்கார் விருது பெற்ற ஒலி வடிவமைப்பாளர் ரெசுல் பூக்குட்டியுடன் இணைந்து ‘3 இடியட்ஸ்’, ‘பிகே’, ‘பிங்க்’, ‘பரிநீதா’, ‘வாசிர்’ ஆகிய படங்களில் பணியாற்றியப் பெருமைக்குரியவர்.

இப்படத்தின் சிறப்பு விஎப்எக்ஸ் காட்சிகள் ‘லைப் ஆப் பை’, ‘தோர்’ பைமோகேஷ் பக்ஷி’, ‘பிளேன்ஸ்’ ஆகிய படங்களுக்கு பணியாற்றிய பிராணா ஸ்டுடியோஸ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஈரோஸ் இண்டர்நேஷனல்’ தயாரிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில், நாயகனாக ராணா தக்குபதி, முக்கிய வேடத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் ‘காடன்’, ‘அரண்யா’, ‘ஹாத்தி மேரே சாத்தி’  ஆகிய மூன்று திரைப்படங்களும்  வருகின்ற ஏப்ரல் 02ம் தேதி உலகமெங்கும் வெளியிடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img