spot_img
HomeNewsகுறும்படப் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு உடனே கிடைத்த சினிமா வாய்ப்பு!

குறும்படப் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு உடனே கிடைத்த சினிமா வாய்ப்பு!

குறும்படங்கள் மூலம் இயக்கு நராகும் இளைஞர்கள்!
*** குறும்படப் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு உடனே கிடைத்த சினிமா வாய்ப்பு!
சினிமாவை நம்பியவர்களை அது கைவிடாது. சினிமாவை நம்பினார் கைவிடப் படார் என்று சீகர்  குழுமத்தின் தேசிய குறும்பட விழாவில் இயக்குநர் நடிகர்பாண்டியராஜன் பேசினார்.
இது பற்றிய விவரம் வருமாறு:
குறும்பட முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையிலும் புதிய படைப்பாளிகளை வரவேற்கும் விதத்திலும்  ‘சீகர் தேசிய குறும்பட விழா 2020 ‘ ஏற்பாடு செய்யப்பட்டு இந்த விழா அண்மையில் நடைபெற்றது .தேசிய அளவில் நடந்த இந்தப் போட்டியில் இந்தியாவின் பல்வேறு மொழிகளிலிருந்து தமிழ் , மலையாளம் ,தெலுங்கு,இந்தி, பெங்காலி போன்ற மொழிகளிலிருந்து ஏராளமான குறும்படங்கள் போட்டியில் கலந்து கொண்டன.
‘ நண்டூறுது ‘ என்கிற தமிழ்க் குறும் படம்  முதல் பரிசு பெற்றது.
‘டிக்கெட்’ என்கிற இந்திக் குறும்படம் இரண்டாம் பரிசைப் பெற்றது .
 ‘டெத் ஆஃபர்ஸ் லைஃப்’ என்கிற மலையாளக்  குறும்படம் மூன்றாம் பரிசைப் பெற்றது.
 ‘காமப்பாழி ‘ என்கிற தமிழ்க் குறும்படம் ஜூரியின் சிறப்பு விருது பெற்றது.
விழாவில் சீகர் நிறுவனத்தின் தலைவர் ராஜ்குமார் பேசும்போது,
“சீகர் (SIEGER )என்றால் ஜெர்மனி மொழியில் வின்னர் என்று அர்த்தம்.நாங்கள் முதன் முதலில் இதை ஒரு பயிற்சி நிறுவன மாகத்தான் தொடங்கினோம். குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்களில் பயிற்சி கொடுத்தோம். இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகளிலும் நேர்காணலிலும் நம்பிக்கையாக எப்படி எதிர் கொள்வது என்பது பற்றிய பயிற்சிகள் கொடுத்தோம். மாணவர்கள் மற்றும் வேலை பார்ப்பவர்களுக்கு விளையாட்டு அடிப்படையிலான திறனை வளர்த்துக் கொள்வது எப்படி என்று பயிற்சிகள் கொடுத்தோம் .அது பெரிய அளவில் வெற்றி பெற்றது .நிறைய கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதரவு தந்து ஊக்கப்படுத்தினார்கள்.
அடுத்த கட்டமாக ஈவன்ட் மேனேஜ்மென்ட் நடத்தி பல நிகழ்ச்சிகளை நடத்தினோம். இதுவும்  கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக நடத்தப்பட்டது .நமது பாதையில் அடுத்தகட்டமாக திறமை உள்ள இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் புதிய படைப்பாளிகளை வரவேற்க வேண்டும் என்றும் திரைப்பட விழாவுக்கான குறும்படப் போட்டிகள் நடத்தினோம் .  இப்போது அதை தேசிய அளவில் நடத்தி இருக்கிறோம். வரவுகள்  ஆரம்பத்தில் மந்தமாக இருந்து அப்புறம் போகப் போக ஏராளமாக வர ஆரம்பித்தன. இங்கே 15 வகைப்பாடுகளில் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்குகிறோம்.முதல் மூன்று குறும்படங்களுக்கு ரொக்கப் பரிசுகளும் கேடயமும் சான்றிதழ்களையும் வழங்குகிறோம்.
ஆர்வத்தோடு ஏராளமானவர்கள் இதில் கலந்து கொண்டது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்து சீகர் அகாடமி தொடங்கினோம்.அடுத்து சீகர் பிக்சர்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பில் இறங்குகிறோம். இங்கே நடைபெற்ற குறும்பட போட்டியில் முதல் பரிசு பெற்ற மலை மன்னன் இயக்கத்தில் ஒரு படம் தயாரிக்க இருக்கிறோம்.
அதுமட்டுமல்ல வருங்காலத்தில் இந்த குறும்பட விழாவில் சர்வதேச அளவில் விஸ்தரிக்கத் தயாராக இருக்கிறோம். இவ்வளவு இருக்கும் போது இந்த மாதிரி பயிற்சிகள், இது மாதிரி விழா போட்டிகள் என்று பணிகள் செய்வதற்குக் காரணம் அதில் வெற்றி பெற்றவர்கள் தரும் பின்னூட்டம் தான். நீங்கள் கொடுத்த பயிற்சியால்தான் நேர்காணலில் வெற்றி பெற்றோம், நீங்கள் கொடுத்த பயிற்சியால்தான் போட்டியில் வெற்றி பெற்றோம், நீங்கள் கொடுத்த வாய்ப்பினால் குறும்பட விழாவில் பங்கேற்றோம் என்று கூறுகிற போது அவர்கள் முகத்தில் மின்னலாய் ஒளி வீசும்  புன்னகை ஒன்றே எங்களுக்குப் பெரிய ஊக்கமாக, உந்துசக்தியாக இருக்கிறது .அதனால் இந்த ஊக்குவிப்பு செயல்களை இன்னும் விரிவுபடுத்தி தொடர வேண்டும் என்று விரும்புகிறோம்.
‘எங்கப்பா நம்பர் ‘ என்கிற குறும்படத்தில்  நான் நடித்தேன் அதை இதை ‘பிழை’ திரைப்படத்தின் இயக்குநர் ராஜவேல் இயக்கியிருந்தார். பிஹைன் வுட்ஸ்  சேனலில் லட்சக்கணக்கானவர்கள் அதைப் பார்த்து ரசித்தார்கள்.அதன் மூலம் ஏற்பட்ட ஆர்வத்தில்தான் சினிமாவிலும் இறங்குகிறோம். ஆம் சினிமா தயாரிப்பில் இறங்க இருக்கிறோம். இந்தக் குறும்படப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மலைமன்னன் முதல் படத்தை இயக்குகிறார்.’ காமப்பாழி ‘கூட அவர் இயக்கிய படம்தான்.  அது சிறப்பு ஜூரி விருது பெற்றது. விரைவில் புதிய படத்திற்கான முறையான அறிவிப்புகள் வெளியாகும். “என்று கூறினார்.
 விழாவில் கேடயங்கள், ரொக்கப் பரிசுகளை வழங்கி திரைப்பட இயக்குநர் நடிகர் பாண்டியராஜன் பேசினார்.
அவர் பேசும்போது, “என்னை சிலர் சாதாரண நடிகன் காமெடியன் என்று நினைக்கிறார்கள்.நான் சீரியசான டாக்குமென்ட்ரிகளைக் கூட எடுத்திருக்கிறேன்.ஒரு நாள் அப்படி ஒரு டாக்குமெண்ட்ரி எடுப்பதாக திட்டமிடப்பட்டு புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன் ஒரு புரொடக்ஷன் மேனேஜர் வந்து ஒரு பட வாய்ப்பு தருவதாகக் கூறினார். நான் டாக்குமென்ட்ரி எடுக்கும் திட்டத்தை பெற்றோரிடம் கூறி அந்தப் படத்தில் நடிக்க முடியாது என்று மறுத்து விட்டேன்.டாக்குமென்டரி படத்தை எடுத்து விட்டு வந்து வேண்டுமானால் நடிக்கிறேன் என்று சொன்னேன் .கையில் பணம் கொண்டு வந்திருக்கிறேன்.முதலில் பணத்தை வாங்கிக்கொண்டு நடிப்பதை விட்டு விட்டு  ஏன் உங்களுக்கு இந்த வீண் முயற்சி? என்று கேலியாகப் பேசினார். நான் பிடிவாதமாக முடியாது என்று சொல்லி விட்டேன் .அந்த டாக்குமெண்டரி படத்தை எடுத்தேன். அந்தப் படத்துக்கு அமெரிக்காவில் இரண்டாவது பரிசு கிடைத்தது. சர்வதேச படவிழாவில் எனக்கு அப்படி இரண்டாவது பரிசு கிடைத்தது.
அதைக் கேள்விப்பட்டு எல்லா டிவி சேனல்களும் என் வீட்டுக்கு வந்து என்னை பேட்டி எடுத்தார்கள்.மீண்டும் அப்போது அந்த தயாரிப்பு நிர்வாகி வந்தார் . என்ன வீட்டில் கூட்டம் என்று என் உதவியாளரிடம் கேட்டபோது அவர் விஷயத்தை கூறியிக்கிறார்.
“அண்ணன்  விடா முயற்சி செய்பவர் .அதற்கான பலன் தான் இது “என்று கூறினார். நாம் வெற்றி பெற்று விட்டால்  வீண் முயற்சி என்று கூறியவர்கள் விடாமுயற்சி என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு நாம் வெற்றி பெற வேண்டும்.
நான் பெரிதாகப் படிக்கவில்லை. சினிமாவுக்கு வந்தபோது எஸ்.எஸ்.எல்.சி வரை மட்டும் தான் படித்திருந்தேன் .ஆனாலும் இயக்குநர் ஆகி விட்டேன் .ஆனால் எனக்கு படிப்பில் ஆர்வம் இருந்தது. அப்பா மேலே படிக்க வைக்க முடியாத அளவுக்கு குடும்ப சூழல் இருந்தது. மேலே என்னை படிக்க வைக்க முடியாத அளவுக்கு குடும்பம்  நிலைமை இருந்தது. எஸ்.எஸ்.எல்.சி முடித்தவுடன் ஏதாவது வேலை பாருப்பா என்றார் அப்பா.என்றாலும் நான்  படிக்க ஆசைப்பட்ட போது இதுக்கு மேலே என்ன படிக்கப் போற என்றார்.இருந்தாலும் நான் விடவில்லை .2004-ல் அஞ்சல் வழியில் நான் எம்.ஏ. முடித்தேன். 2007.ல்  எம்.பில் முடித்தேன். அதற்குப் பிறகு பி.எச்.டி முடித்து விட்டேன் . ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தலைப்பு என்ன தெரியுமா? சினிமாதான். ‘தமிழ் திரைப்பட கலைஞர்களின் சமுதாயப் பங்களிப்பு ‘ இதுதான் நான் எடுத்துக் கொண்ட தலைப்பு. இப்போது நான் மூன்று பல்கலைக்கழகங்களுக்கு விசிட்டிங்
ப்ரொஃபஸராகப்  போய்க்கொண்டிருக்கிறேன்.
 சினிமா ஒரு நல்ல தொழில். சினிமா ஒரு அற்புதமான தொழில்.  சினிமாவை நம்பியவர்களை அது கைவிடாது. சினிமாவை நம்பினார் கைவிடப்படார் .
இப்போது இந்த குறும் படங்கள் எல்லாம் சினிமாவில் நுழைவதற்கு ஒரு நல்ல வழியாக இருக்கிறது. நீங்கள் யோசித்த கதையில் இரண்டு காட்சிகளை படமாக எடுத்துக் காட்டுங்கள்.படம் எடுப்பவர்களுக்கு நம்பிக்கை வரும் .ஏன் என்றால் முன்பு லட்சங்களில் புழங்கிய சினிமா இப்போது கோடிகளில் புழங்க ஆரம்பித்துவிட்டது. கட்டடம் கட்டித் தர வேண்டும் என்றால் ஒரு கட்டடத்துக்கு ப்ளூ பிரிண்ட் எப்படியோ அப்படித்தான் இந்த குறும் படங்கள். உங்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும். நேர்மையாக உழைத்தால் வெற்றி நிச்சயம் .
என் உயரத்துக்கு நான் ஹீரோவாக நடிப்பேன் என்றெல்லாம் ஆசைப்படக்கூடாது. ஆனாலும் நான் நடித்தேன். நான் குஷ்பு கூட எல்லாம் நடனமாடி வ இருக்கிறேன் .நான் ஒரே படம் ‘ஆண் பாவம்’ என்று எடுத்தேன்.வீடு வாங்கினேன். கார் வாங்கினேன். திருமணமானது. எனவே உழைத்தால் வெற்றி நிச்சயம்.கஷ்டப்பட்டவர்களெல்லாம் வெற்றி பெறுவதில்லை. ஆனால் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் கஷ்டப்பட்டவர்கள்தான். இதை நினைவில் கொள்ளுங்கள்.இந்த முயற்சியில் ஈடுபட்ட உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்” என்று கூறி வாழ்த்தினார்.
விழாவில் சீகர் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் திருமதிகமல குமாரி ராஜ்குமார் ,திரைப்பட இயக்குநர் செல்வா,தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம் பேராசிரியர் கார்த்திகேயன், ‘ராட்சசன்’திரைப்படத் தயாரிப்பாளர்  டில்லி பாபு போன்ற பலரும் கலந்து கொண்டனர்.

Must Read

spot_img