HomeNewsஆர்.கே.சுரேஷ் இன்னொரு ரஜினியாக வருவார் 'ஆர்.வி.உதயகுமார்

ஆர்.கே.சுரேஷ் இன்னொரு ரஜினியாக வருவார் ‘ஆர்.வி.உதயகுமார்

ஆர்.கே.சுரேஷ் இன்னொரு ரஜினியாக வருவார்.’பைரவி’ ரீமேக்கில் ஆர்.கே.சுரேஷை இயக்கத் தயார்: ‘வேட்டை நாய்’ பட விழாவில் ஆர்.வி.உதயகுமார் பேச்சு*
*முத்தக் காட்சியில் நடிக்க மனைவியிடம் அனுமதி வாங்கினேன்: ‘வேட்டை நாய்’ பட  விழாவில் ஆர்.கே.சுரேஷ் ஒபன் டாக்*
*நூறு படங்களில் நடித்தும் ஒரு லிப்லாக் முத்தம் கூட கொடுக்கவில்லை: ‘வேட்டை நாய் விழாவில் ஏக்கத்தை வெளிப்படுத்திய ராம்கி*
சுரபி பிக்சர்ஸ் ஜோதி முருகன் மற்றும் தாய் மூவிஸ் விஜய்கார்த்திக் இணைத் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேட்டை நாய்’
ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ராம்கி நடித்துள்ளார். கதாநாயகியாக சுபிக்சா நடித்துள்ளார்.
கணேஷ் சந்திர சேகரன் இசையமைக்க, முனீஸ் ஈஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை விஜய் கிருஷ்ணன் கவனிக்க, சண்டைக் காட்சிகளை சூப்பர் சுப்பராயனும், நடனத்தை காதல் கந்தாஸ் மாஸ்டரும் வடிவமைத்துள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை வடபழனியிலுள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, துணைத் தலைவர் கதிரேசன், தயாரிப்பாளர்கள் சந்திரபபிரகாஷ் ஜெயின், அழகன் தமிழ்மணி, விடியல் ராஜு இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார் பவித்ரன் நடிகர்கள் ஏ.எல்.உதயா, போஸ் வெங்கட் ,சின்னத்திரை நடிகர் சங்கத்தலைவர் ரவிவர்மா, தயாரிப்பாளர் சங்க (கில்டு) செயலாளர் ஜாகுவார் தங்கம், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது,
 “ஆர்.கே.சுரேஷைப் பார்க்கும்போது அவர் இன்னொரு ரஜினிகாந்த் போல வரப்போகிறார். சூப்பர்ஸ்டார் ரஜினியை ஹீரோவாக்கிய தயாரிப்பாளர் கலைஞானத்திடம், பைரவி படத்தின் ரீமேக் ரைட்ஸ் வாங்கி வந்தால் நான் அவரை வைத்து படம் இயக்கத் தயாராக் இருக்கிறேன். நிச்சயம்  ரஜினி போல பெரிய ஹீரோவாகி விடுவார் என்பது நிச்சயம். படத்தின் கதாநாயகி சுபிக்சா அழகாக இருக்கிறார் சென்னையிலேயே இப்படி ஒரு அன்னக்கிளியை  வைத்துக்கொண்டு வெளியூர்களில் ஏன் அலைய வேண்டும்?” என்றார்.
இயக்குநர் பவித்ரன் பேசும்போது, “இந்தப் படத்தின் டைட்டில் மிக வித்தியாசமாக இருக்கிறது. ஆர்.கே.சுரேஷ் மற்றும் ராம்கி இருவரையும் இந்தப்படத்தில் பார்க்கும்போது, அருண்பாண்டியன், ராம்கி இருவரும் நடித்த, ‘இணைந்த கைகள்’ பட காம்பினேஷனைப் பார்த்தது போல இருக்கிறது.. விஜயகாந்த் ஆரம்பக் காலகட்டப் படங்களில் இருந்ததைப் போல ஆர்கே சுரேஷ் அவரை ஞாபகப்படுத்துகிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப்படத்தின் மூலம் ராம்கி ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். இது தொடர வேண்டும்.. இன்று தயாரிப்பாளர்கள் பலரும் ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தான் படம் எடுக்கிறார்கள். இதனால் இங்கே பல தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போகிறது. நம் தயாரிப்பாளர்கள் தமிழ்நாட்டில் படம் எடுக்க வேண்டும். அரசாங்கத்தின் உதவியுடன் மிகப்பெரிய இடத்தை வாங்கி, ராமோஜிராவ் பிலிம் சிட்டி போல இங்கேயும் மிகப்பெரிய ஸ்டுடியோவை உருவாக்க வேண்டும்” என்று கூறினார்.
கதாநாயகி சுபிக்சா பேசும்போது, ‘இந்த கதாபாத்திரத்திற்காக பல நடிகைகளை ஆடிஷன் வைத்து பார்த்துவிட்டு இறுதியாகத்தான் என்னிடம் வந்தார்கள். கோலிசோடா 2 படத்திற்கு பிறகு இந்தப படம் எனக்கு நம்பிக்கை தரும் படமாக அமைந்திருக்கிறது. இந்தப் படம் பல கட்ட போராட்டங்களை தாண்டி இந்த இடத்திற்கு வந்து இருக்கிறது” என்றார் .
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி பேசும்போது,
 “ரஜினி சாருக்கு அடுத்தபடியாக ராம்கிக்குத்தான் வெள்ளை தாடி அழகாகப் பொருந்தி இருக்கிறது அதேபோல ‘கலையுலக மார்கண்டேயன்’ என சிவகுமாரை சொல்வார்கள். அவருக்கு அடுத்ததாக அது என்றும் இளமையாகவே இருக்கும் ராம்கிக்குத்தான் பொருந்தும்.” என்றார்.
இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன் பேசும்போது,
 “எப்படி தனுசுக்கு ஒரு அனிருத்தோ, அதுபோல ஆர்கே சுரேஷுக்கு நான் இருப்பேன்” என்றார்.
நடன இயக்குநர் காதல் கந்தாஸ் பேசும்போது, “இந்தப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டுமே நான் நடனம் அமைத்தேன். மற்ற இரண்டு பாடல்களையும் இயக்குநர் ஜெய்சங்கரே எடுத்து விட்டார். நாயகன் ஆர்.கே.சுரேஷ் என்னிடம், நடிகர் அல்லு அர்ஜுன் போடும் ஸ்டெப்ஸ் போல எனக்கும் வேண்டும் என்று கேட்டு வாங்கி அதேபோல ஆடியும் அசத்தியுள்ளார்” என்றார்.
நடிகர் ராம்கி பேசும்போது,
 “இந்தப்படத்தின் இயக்குநர் ஜெய்சங்கர்  கிட்டத்தட்ட இன்னொரு பாரதிராஜா போல.. நான் நூறு படங்களில் நடித்துள்ளேன் எனச் சொன்னால் கூட, பரவாயில்லை சார் இன்னொரு டேக் போகலாம் என்பார். அவர் மனதில் வைத்திருந்த கதாபாத்திரத்தில் தனக்கு வேண்டிய மாதிரி என்னை மாற்றிக்கொண்டார். டப்பிங் பேசும்போதுதான் அந்த ஆச்சர்யத்தை நான் உணர்ந்தேன். கேமராமேன் முனீஸ் ஈஸ்வரன் என்னுடன் இணைந்து கிட்டத்தட்ட 2௦ டாக்குமென்ட்ரி படங்களுக்கு இணைந்து பணியாற்றியுள்ளார். ஆர்.கே.சுரேஷ் எந்த வேலையைக் கொடுத்தாலும் பொறுப்பாக செய்வார். ஒரு நடிகருக்கு இந்த பொறுப்பு ரொம்பவே முக்கியம். இதுவரை 100 படங்களில் நடித்துள்ளேன் ஆனால் ஒரு படத்தில் கூட, லிப்லாக் கிஸ் கொடுத்ததே இல்லை. இந்தப்படத்தில் ஹீரோவுக்கு மட்டும் வைத்துவிட்டு, எனக்கு இயக்குநர் ஓரவஞ்சனை செய்து விட்டார்” என்றார் ஏக்கமாக.
தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி பேசும்போது,
 “ஜல்லிக்கட்டு காளையையும் வேட்டை நாயையும் வளர்ப்பது நம் தமிழர்களின் பாரம்பரியம்.. இந்தப்படத்தில் ராம்கி ஜல்லிக்கட்டு காளையையும் ஆர்.கே.சுரேஷ் வேட்டை நாயையும் பிரதிபலிக்கிறார்கள்” என்றார்.
நாயகன் ஆர்கே சுரேஷ் பேசும்போது,
 “இந்தப்படத்தின் இயக்குநர் ஜெய்சங்கர் படாத கஷ்டமே கிடையாது. இயக்குநர் பாலாவுக்கு அடுத்து என்னை செதுக்கியதில் இயக்குநர் ஜெய்சங்கருக்குத்தான் பங்கு உண்டு. இந்தப்படத்திற்கு வேட்டை நாய் என பைரவரின் பெயரை டைட்டிலாக வைக்கும்போதே ஒரு அதிர்வு ஏற்பட்டது.’ புதியபாதை’  படத்தில் வருவது போலத்தான் இந்த படத்தில் என் கதாபாத்திரமும். ராம்கி தற்போது திரையுலகில் பட்டும் படாமல் நடித்துவருகிறார். இந்தப்படத்திற்குப் பிறகு அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்பது உறுதி.
படங்களில் முத்தக் காட்சியில் நடிக்கவேண்டுமென்றால் முன்கூட்டியே என் மனைவியின் அனுமதியைப் பெற்றுவிடுவேன். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள லிப்லாக் முத்தக் காட்சியைப் பார்க்கும்போது எதுவும் வித்தியாசமாக, விரசமாகத்  தெரியாது. படம் பார்க்கும் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து தங்களை அதற்குள் பொருத்திக்கொள்வார்கள். தியேட்டர்களோ, ஓடிடி தளங்களோ எதுவானாலும் பெரிய படங்களுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை சிறிய படங்களுக்கும் கொடுக்க வேண்டும்.. சின்ன பட்ஜெட் படங்களால் தான் திரையுலகம் வாழ்கிறது” என்றார்

Must Read

spot_img