HomeNews'பட்டத்து அரசன்' பட அனுபவம் பற்றிக் கூறுகிறார் நடிகர் 'களவாணி' துரை சுதாகர்!

‘பட்டத்து அரசன்’ பட அனுபவம் பற்றிக் கூறுகிறார் நடிகர் ‘களவாணி’ துரை சுதாகர்!

ஒரு படத்தில் ஓராயிரம் அனுபவங்கள் : ‘பட்டத்து அரசன்’ பட அனுபவம் பற்றிக் கூறுகிறார் நடிகர் ‘களவாணி’ துரை சுதாகர்!

தஞ்சாவூரில் உள்ள கபடி வீரர் குடும்பம் பற்றிய படம் .உண்மை சம்பவங்களை தழுவி எடுத்த படம் நட்சத்திரக் கூட்டங்கள் நடுவே நடித்த அனுபவம் : வியந்து கூறுகிறார்
‘களவாணி’ துரை சுதாகர்!

தேசிய விருது இயக்குநர் ஏ.சற்குணம் இயக்கிய ‘களவாணி 2 ‘படத்தின் மூலம் அழுத்தமாகத் திரை ரசிகர்கள் மனதில் பதிந்த நடிகர் துரை சுதாகர்.

அவர் இப்போது லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.சற்குணம் இயக்கத்தில் அதர்வா நாயகனாக நடித்துள்ள ‘பட்டத்து அரசன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில் ,தான் அந்த படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் பகிர்ந்து கொள்கிறார் .

“நான் களவாணி 2 படத்தின் நடித்ததன் மூலம் எனக்குப் அழுத்தமான அறிமுகமும் பெரிய அங்கீகாரமும் கிடைத்தன.என்னை களவாணி துரைசுதாகர் என்றே பலரும் அழைக்கிறார்கள்.

அதற்காக இயக்குநர் அண்ணன் ஏ.சற்குணம் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வெறும் நன்றி என்று கூறுவதில் என்னுடைய மன உணர்வைக் கூறிவிட முடியாது.

இப்போது நான் பட்டத்து அரசன் படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படம் எனக்கு மிகவும் பெருமைக்குரிய வாய்ப்பு.படம் வருகிற 25 ஆம் தேதி வெளியாகிறது.

இன்று மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக விஸ்வரூபம் எடுத்துள்ள லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

பொன்னியின் செல்வன் என்கிற பிரம்மாண்டமான படத்தின் வெற்றி அந்த நிறுவனத்தின் பெயரைச் சொல்லும்.
இப்படிப் பிரமாண்டமான படங்களை எடுத்து தமிழ்த் திரைத் துறையில் தனக்கென தனி இடத்தை பெற்றுள்ள நிறுவனம் தயாரித்துள்ள படத்தில் நான் நடித்தது பெருமைக்குரியது.

மண்ணைப் பற்றியும் மக்களைப் பற்றியும், தான் உணர்ந்த விஷயங்களைப் படமாக்குவது என்பதில் கொள்கையாக வைத்திருக்கும் அண்ணன் சற்குணம் இயக்கி இருக்கிறார் அவர் இயக்கத்தில் நடித்தது ஒரு பெருமை.

இந்தப் படத்தில் அதர்வா,ராஜ்கிரண், ஜெயப்பிரகாஷ் ,ஆர். கே. சுரேஷ், ராதிகா, சிங்கம்புலி, பாலசரவணன் போல எக்கச்சக்கமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்தில்,தேசிய விருது பெற்ற திறமை மிக்க இயக்குநரின் இயக்கத்தில், இவ்வளவு நட்சத்திரங்கள் மத்தியில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

பட்டத்து அரசன் கதை கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஒரு குடும்பக் கதை அமைப்பு கொண்ட படம். காட்சிகளை மிக அழகாக எடுத்துள்ளார் இயக்குநர். நமது மண்ணின் கதையையும் மண்ணின் மைந்தர்கள் கதையையும் வெளிப்படுத்தும் வகையில் பொருத்தமான கதாபாத்திரங்களில் அனைத்து நடிகர்களும் நடித்துள்ளனர்.

நடித்த அனுபவத்தை நினைத்து மகிழும்படியான நல்ல தருணங்கள் இந்த படத்தின் மூலம் எனக்குக் கிடைத்தன. இந்தப் படத்தில் நான் ராஜ்கிரண் அவர்களின் பையனாக நடித்திருப்பேன்.

ராஜ்கிரன் அவர்கள் பிரபலமான தயாரிப்பாளர் மட்டுமல்ல உச்சத்துக்கு சென்ற நடிகர். ஏராளமான திரைப்பட அனுபவங்களைப் பெற்றவர். அவருடன் நடிக்கும் போது எனக்கு முதலில் சற்று தயக்கமாகவும் மிரட்சியாகவும் இருந்தது. ஆனால் இப்படிப்பட்ட மனப் பதற்றத்துடன் நடித்தால் சரியாக நடிப்பு வராது என்பதை அவர் உணர்ந்து கொண்டு முதல் நாளே என்னுடன் இயல்பாக பேசினார். என்னைப் பற்றி விசாரித்து தைரியம் கொடுத்து ஊக்கப்படுத்தினார். முதன் முதலில் நடித்ததை விட அவர் ஊக்கப்படுத்திய பின் நடித்தது எனக்கே நம்பிக்கையாகவும் திருப்தியாகவும் இருந்தது.

அதுமட்டுமல்ல நான் நடித்த போது என்னைப் பாராட்டிய ஊக்கப்படுத்தினார்; தட்டிக் கொடுத்தார். அனுபவம் உள்ள நடிகர் போல் நடிக்கிறீர்கள் என்று கூறினார். நான் முன்பு நடித்த படங்களை அவர் பார்த்திருக்கவில்லை.ஏற்கெனவே நடித்திருக்கிறீர்களா? என்று விசாரித்தார். ஊக்கமாக இருந்தது .அதேபோல் ஜெயப்பிரகாஷ் அவர்களும் “நல்லா பண்றீங்க பயமில்லாமல் செய்யுங்க” என்று ஊக்கப்படுத்தினார் அண்ணன் சிங்கம்புலி இந்தப் படப்பிடிப்பு நடந்த 40 நாட்களையும் கலகலப்பாக ஆக்கினார் .படத்தில் கதைப்படி நாங்கள் மாமன் மச்சான்களாக நடித்திருக்கிறோம்.ஆனால் நேரில் அவர் ஒரு சகோதரர் போல ,நண்பரைப் போலப் பழகினார். அப்படித்தான் அண்ணன் ஆர். கே. சுரேஷும் எளிமையாகப் பழகினர்.

கதாநாயகன் சகோதரர் அதர்வாவும் மிகவும் சகஜமாகப் பழகினார் அவர் ஒரு நட்சத்திரத்தின் பிள்ளை என்கிற எந்த விதமான எண்ணமும் இல்லாமல் அனைவரிடம் பழகியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது; மகிழ்ச்சியாக இருந்தது. அவர் ஒரு பள்ளி மாணவரைப் போலவும் கல்லூரி மாணவரைப் போலவும் தெரிந்தார் .அவர் சகஜமாகப் பேசிப் பழகி அனைவருடனும் இருந்த இடைவெளியைக் குறைத்து இயல்பாக மாற்றினார். அது நடிப்பில் அடுத்த கட்டத்துக்குப் போகும் நம்பிக்கையை எனக்கு அளித்தது.

இப்படித்தான் அந்தப் படத்தில் நடித்தவர்கள் அனைவரும் அன்புடனும் சகஜமாகவும் பழகினார்கள். பலவற்றையும் பகிர்ந்து கொண்டார்கள். இப்படி ஒரே படத்தின் மூலம் பலருடன் பேசிப் பழகும் வாய்ப்பு இந்த படத்தின் மூலம் எனக்குக் கிடைத்தது.

இதற்கு முன்பு களவாணி படத்தில் நடித்த போது நான் வருகிற காட்சியில் மக்கள் கூட்டம் நிறைய இருக்கும். ஆயிரம் பேர் மத்தியில் நடிக்க வேண்டி இருந்தது .அப்போது அது ஒரு சவாலாக இருந்தது. இப்போது பெரிய நட்சத்திரக் கூட்டத்தின் மத்தியில் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது.இப்படி ஒரு மெகா கூட்டணியில் இடம் பெறும் வாய்ப்பு எப்போதும் அமைந்து விடாது .அதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது.

எப்போதுமே இயக்குநர் அண்ணன் சற்குணம் கதைக்கேற்ற முகங்களைத்தான் தேடுவார். அப்படித்தான் இதிலும் அனைவரையும் பாத்திரங்களுக்கு ஏற்ப தேர்வு செய்து நடிக்க வைத்தார்.அனைவரது கதாபாத்திரங்களையும் மிகவும் அழகாகச் சித்தரித்திருப்பார்.
எனவே நான் பெரிதாக நடித்தேன் என்று சொல்வதை விட அவர் அப்படி வடிவமைத்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

அவர் எப்போதும் தான் மட்டும் வளர வேண்டும், தான் மட்டும் ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவர் அல்ல. தன் படத்தில் உள்ளவர்களும் தான் அறிமுகப்படுத்தியவர்களும் வளர வேண்டும் என்று நினைப்பவர் . தன் ஒவ்வொரு படத்திலும் யாரையாவது அறிமுகம் செய்து கொண்டே இருப்பார். அப்படி இந்தப் படத்தில் கலை இயக்குநரையும் கதாநாயகியையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

எனவே, என்னைப் போலவே அவரும் மேலும் மேலும் வளர வேண்டும் பெரிய வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று நான் விரும்பி வாழ்த்துகிறேன். அவருக்கு இந்த நேரத்தில் மனம் நெகிழ்ந்து நன்றி கூறிக் கொள்கிறேன். நன்றி” இவ்வாறு கூறினார். துரை சுதாகர்.

Must Read

spot_img