ராங்கி- பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு
லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் எம். சரவணன் இயக்கத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் ‘ராங்கி’. இந்தத் திரைப்படம் டிசம்பர் 30,2022 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று (27.12.2022) சென்னையில் நடைபெற்றது.
படத்தொகுப்பாளர் சுபாராக் பேசியதாவது, “சரவணன் சாருடன் தொடர்ந்து மூன்று படங்கள் நான் வேலை பார்த்து இருக்கிறேன். இதை நான் ஸ்பெஷலாக பார்க்கிறேன். இயக்குநர் சரவணனுடன் இது ஹாட்ரிக் தருணம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தப் படத்தின் பல வெர்ஷன்கள் நாங்கள் வேலை பார்த்துக் கொண்டே இருந்ததால் இந்தப் படம் எங்களுக்கு ஸ்பெஷல் என்றுதான் சொல்ல வேண்டும். தொழில்நுட்ப ரீதியாக நிறைய கற்றுக் கொள்வதற்கான இடத்தையும் இந்த படம் எங்களுக்கு கொடுத்தது. அதை பெரிய திரையில் பார்க்கும்போது கூடுதல் சந்தோஷமாக இருந்தது. இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சரவணனுக்கு நன்றி”.
சண்டைப் பயிற்சியாளர் ராஜசேகர் பேசியதாவது, ”இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு நன்றி. சரவணனுடன் இரண்டாவது படம் எனக்கு. த்ரிஷா மேமுக்கான சண்டைகள் படத்தில் எப்படி வந்திருக்கிறது என்பதை நீங்கள் பார்த்து சொல்லுங்கள். சண்டை போட வேண்டும் என்பதைத் தாண்டி சொல்வதை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் த்ரிஷா இருந்தார். இப்போது படத்தின் அவுட்புட் பார்த்த பிறகுதான் எப்படி செய்ய வேண்டும் என்ற ஐடியா அவருக்கு கிடைத்திருக்கும். இனிமேல் அதிக சண்டை போடும்படியான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பார் என நம்புகிறேன்”.
ஒளிப்பதிவாளர் சக்தி பேசும்போது, “இயக்குநர் சரவணனுடன் மூன்று படங்கள் வேலை பார்த்து இருக்கிறேன். இது எனக்கு கனவு படம் என்றுதான் சொல்வேன். உலக திரைப்படங்கள் பார்ப்பது போன்ற ஒரு உணர்வை சரவணன் இந்த கதை சொல்லும்போதே இருந்தது. உஸ்பெகிஸ்தானில் நாங்கள் அனைவரும் சென்று கடுமையாக உழைத்திருக்கிறோம். ஏனெனில், படத்தின் பல காட்சிகள் மலை மீதுதான் இருக்கும். பொருட்களை மேலே எடுத்து கொண்டு போவது படப்பிடிப்பு என அதிக நேரம் எடுக்கும். படத்தின் இசை அற்புதமாக இருக்கும் குறிப்பாக இரண்டாம் பாதியில் சத்யா மிரட்டி இருக்கிறார். படத்தில் பனித்துளி பாடலை விஷூவலாக சுபாராக் அழகாக கொடுத்திருக்கிறார். கதைக்கு உஸ்பெகிஸ்தான் களமாக தேவைப்பட்டபோது தயாரிப்பு நிறுவனமான லைகா எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் அனுப்பி வைத்தார்கள். மற்ற தயாரிப்பு நிறுவனமாக இருந்தால் அது கஷ்டம். திரையில் நிச்சயம் ஒரு மேஜிக் இருக்கும்”.
படத்தின் இசையமைப்பாளர் சி. சத்யா பேசியதாவது, “முதலில் சரவணன் சாருக்கு நன்றி. அவருடன் எனக்கு இது நான்காவது படம். முதல் படத்தில் இருந்தே எங்களுக்குள் அந்த பிணைப்பு இருக்கிறது. ’எங்கேயும் எப்போதும்’ படத்தில் மாசமா, ஆறு மாசமா பாடலுக்கு முதலில் ட்யூன் கேட்டார் சரவணன். ஆனால், நான் பாடல் வரிகளுக்கு ஏற்ப இசையமைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி இருந்தேன். அது நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் நன்றாகவே வந்தது. பாடல் வரிகளுக்காக நா. முத்துக்குமாரிடம் போனபோது, இதுவே நன்றாக இருக்கிறதே எதற்காக புது வரிகள் என்று சொன்னபோதுதான் தன் வரிகள் மீதே சரவணனுக்கு நம்பிக்கை வந்தது. அதனால், எப்போது நான் பாடலுக்கு இசையமைத்தாலும் இயக்குநரை டம்மியாக வரிகள் எழுத வைப்பேன். அப்படிதான் ‘பனித்துளி’ பாடலையும் எழுத வைத்து பின்பு கபிலன் சார் எழுதினார்.
இந்தப் படம் பொருத்தவரைக்கும் எனக்கு நிஜமாகவே சவாலான ஒன்று. இசையில் படத்திற்காக வழக்கமாக ஒன்று செய்வது என்பதைத் தாண்டி, படத்தின் திரைக்கதைதான் இன்னும் சிறப்பான இசையை கொண்டு வரும். அந்த வகையில், இந்த கதையில் பல புது முயற்சிகள் நான் செய்து பார்க்க முடிந்தது. அரேபியாவில் இருந்து இரண்டு இசைக்கலைஞர்கள் வந்து வாசித்து இருக்கிறார்கள். அந்த அரபி பாடல் படத்தின் க்ளைமாக்ஸில் வரும். த்ரிஷா மேமின் மிகப்பெரிய ரசிகன் நான். ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகம் எதிர்ப்பார்த்து இருக்கிறேன். கேமரா, எடிட்டிங் என அனைத்தும் இந்தப் படத்தில் சிறப்பாக வந்திருக்கிறது. திரையரங்குகளில் பார்த்து ஆதரவு கொடுங்கள்”.
படத்தின் இயக்குநர் சரவணன் பேசும்போது, ” அனைவருக்கும் வணக்கம். முதலில் நான் மூன்று பேருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். லைகா புரொடக்ஷன் சுபாஷ்கரன் சார், தமிழ்க்குமரன் சார், இந்த கதையை கொடுத்த ஏ. ஆர். முருகதாஸ் சார். அவர்தான் இந்த கதையை லைகாவில் ஓகே செய்தார். அதற்கு பின்பு தான் நான் திரைக்கதை எழுதி, இயக்கினேன். என் படக்குழுவுக்கும் நன்றி. என் படக்குழுவில் யாரும் அதிகம் பேச மாட்டார்கள் ஆனால் வேலையை மிகச் சரியாக முடிப்பார்கள்.
ராஜசேகர் மாஸ்டர் பற்றி நான் சொல்லியாக வேண்டும். க்ளைமாக்ஸ் காட்சி எடுப்பதற்காக நாங்கள் உஸ்பெகிஸ்தான் சென்றுவிட்டோம். எங்கள் டீம் வருவதற்கு ஒரு வாரம் தாமதமானது. அதுவரை மாஸ்டர் மலையாள படம் ஒன்றை தள்ளி வைத்துவிட்டு வேலை எதுவும் செய்யாமல் எங்களுடனேயே அவரும் ட்ராவல் செய்தார். அது மிகப்பெரிய விஷயம். ஏனென்றால் வேறு ஒருவராக இருந்தால் என்னுடைய தேதிகள் வீணாகிறது என்று சொல்லி உடனே கிளம்பி போயிருப்பார். அதற்கு மாஸ்டருக்கு நன்றி. சக்தி இந்த படத்தின் காட்சிகளை அவ்வளவு அழகாக திரையில் கொண்டு வந்துள்ளார். இந்த கதையை முதலில் நான் லீனியராக தான் எழுதி படமாக்கி மிக்ஸ் செய்து எடிட் செய்தோம். அதன் பிறகு எங்களுக்கு நேரம் கிடைத்து படம் பார்த்தபோது இதை வேறுவிதமாக எடிட் செய்யலாமே என்று பேசினோம். அதன் பிறகு படத்தை மீண்டும் முதலில் இருந்து எடிட் செய்து நான்- லீனியராக எடுத்து வந்தோம். அதுதான் இப்பொழுது நீங்கள் பார்க்கும் வெர்ஷன். கிட்டத்தட்ட ஒரு மூன்று படத்திற்கான வேலையை எடிட்டர் செய்திருக்கிறார். அவருக்கு நன்றி. இசையமைத்துக் கொடுத்த சத்யா சாருக்கும் நன்றி.
அடுத்து படத்தின் கதாநாயகி த்ரிஷா. முதலில் எனக்கு இவரிடம் எப்படி கதை சொல்ல வேண்டும், எப்படி வேலை வாங்க வேண்டும், எந்த அளவுக்கு சொல்ல வேண்டும் என்ற குழப்பம் இருந்தது. ஆனால் அவர் வந்த முதல் நாளில் இருந்தே எங்களுக்கு மிகவும் ஒத்துழைப்பு கொடுத்தார். அதனால் தான் இந்த படத்தை இந்த அளவுக்கு சிறப்பாக எடுக்க முடிந்தது. என்னுடைய அசிஸ்ட்டெண்ட் டீமுக்கும் மிகப்பெரிய நன்றி. இந்த ஷார்ட் டைமில் படத்திற்கு இந்த அளவிற்கு புரோமோஷன் செய்து படத்தை எடுத்துச் சென்ற லைகா புரொடக்ஷனுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி”.
இதில் கலந்து கொண்ட நடிகை த்ரிஷா பேசியதாவது, ” எல்லோருக்கும் வணக்கம். முதலில் என் தயாரிப்பாளர்கள் சுபாஷ்கரன் சார் மற்றும் தமிழ்க்குமரன் சார் இவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் ஹீரோயின் செண்ட்ரிக் படம் என்ற எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் மிகப் பிரம்மாண்டமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடத்த எல்லாவிதமான ஆதரவும் கொடுத்தார்கள். தயாரிப்பு வேலைகள் எந்த அளவுக்கு சிறப்பாக இருக்கும் என்பதை படம் பார்க்கும் போது நீங்களே புரிந்து கொள்வீர்கள். வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடக்கிறது என்றால் பொதுவாக படக் குழு ஒருமுறை போய் வருவார்கள். ஆனால் இதில் நாங்கள் இரண்டு முறை போய் வந்தோம். பேலன்ஸ் ஷூட் இருக்கிறது, மீண்டும் உஸ்பெகிஸ்தான் போக வேண்டும் என்று இயக்குநர் சரவணன் சார் சொன்னபோது தயாரிப்பு தரப்பில் உடனே சம்மதம் தெரிவித்தார்கள். இதற்கு லைகா புரொடக்ஷனுக்கு நன்றி. இரண்டு வருடங்கள் கொரோனா கழித்து இந்த படம் வெளியாவது மிகப்பெரிய ஆறுதலாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.
ஒரு படத்தில் நடிகையாக என்னுடைய வேலையை நான் செய்து முடித்து விடுவேன். ஆனால் அந்த படத்தின் இசை, படத்தொகுப்பு இதெல்லாம் தான் எந்த ஒரு படத்தையும் இன்னும் மேம்படுத்த உதவும். அந்த வகையில் நான் போன வாரம் தான் முழு படத்தையும் பார்த்தேன். இசை, படத்தொகுப்பு என அனைத்து பணிகளும் சிறப்பாக வந்து ஒரு நம்பிக்கை கொடுத்தது. இதற்கு மேல் இந்த படத்தை பார்வையாளர்கள் தான் பார்த்து எப்படி இருக்கிறது என்று முடிவு செய்ய வேண்டும். ஷூட்டிங் போன பின்பு ஷூட்டிங் போனது போலவே தெரியாத அளவுக்கு ஜாலியாக வேலை பார்த்தேன். மாஸ்டர் நான் இருக்கிறேன் பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னார். அதற்கு நன்றி. இந்தப் படத்தில் சண்டை காட்சிகளை பொறுத்தவரை சூப்பர் வுமன் படம் அளவிற்கு இல்லை. மிக இயல்பாக அந்த சூழ்நிலைக்கு என்ன தேவையோ அது மட்டும் தான் கொடுத்திருப்பேன். உஸ்பெகிஸ்தானில் முதல் முறையாக ஒரு படத்தின் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். மிகவும் சவாலான விஷயம் அது. இதுவே யூரோப், அமெரிக்கா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்துவது என்பது மிகவும் எளிது. ஏனென்றால் அங்கு இதற்கு முன்பே நிறைய படங்களின் படப்பிடிப்பு நடந்ததும் ஒரு காரணம். ஆனால், உஸ்பெகிஸ்தானில் எங்கள் மொழி அவர்களுக்கு புரியவில்லை அவர்களது மொழி எங்களுக்கு புரியவில்லை. மேலும் அங்கு நாளே கொஞ்சம் மெதுவாக தான் தொடங்கும். மிலிட்டரியை அடிப்படையாகக் கொண்ட படம் என்பதால் அது சார்ந்த எக்யூப்மென்ட்ஸ் எல்லாம் உண்மையாக வேண்டும் என்று சரவணன் எதிர்பார்த்தார். அதையெல்லாம் உஸ்பெகிஸ்தானில் இருந்த மிலிட்டரி தான் எங்களுக்கு கொண்டுவந்து கொடுத்தது. நானும் உஸ்பெகிஸ்தானுக்கு செல்வது இதுதான் முதல்முறை. அந்த ஊரின் அழகை எந்த ஒரு சமரசமும் இல்லாமல் சக்தி சார் படத்தில் அழகாக கொடுத்துள்ளார். மொத்த படக் குழுவுக்கும் நன்றி. என்னதான் கதாநாயகியை மையப்படுத்திய படம் என்று சொன்னாலும் அந்த படக்குழு சரியாக இல்லை என்றால் படம் ஓகேவா தான் வரும். ஆனால் இந்த படம் பொருத்தவரைக்கும் எல்லாமே மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. வருகிற டிசம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாக இருக்கிறது. ஆடியன்ஸ் நீங்கள் பார்த்துவிட்டு படம் எப்படி இருக்கிறது என்பதை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். இந்த வருடம் எனக்கு மிகவும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. குறிப்பாக கடந்த சில மாதங்கள் மகிழ்ச்சியாகவே இருந்தேன். உங்களுக்கும் இனிவரும் நாட்கள் அப்படியாக இருக்க என்னுடைய வாழ்த்துக்கள்” என்று பேசினார்.