விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் ‘வெங்கி 75’
விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியீடு
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான விக்டரி வெங்கடேஷ் நடிப்பில் தயாராகவிருக்கும் ‘வெங்கி 75’ எனும் திரைப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, ஜனவரி மாதம் 25ஆம் தேதி வெளியாகும் என பிரத்யேக புகைப்படத்துடன் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
‘ஹிட்’ எனும் பெயரில் வெளியான முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை இயக்கி வெற்றிப் பெற்ற இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் தயாராகும் ‘வெங்கி 75’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தில் கதையின் நாயகனாக நடிகர் விக்டரி வெங்கடேஷ் நடிக்கிறார். ‘எஃப் 3’ எனும் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு நடிகர் விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் இந்த திரைப்படத்தை நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் வெங்கட் போயனப்பள்ளி பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கிறார்.
‘ஷியாம் சிங்காராய்’ எனும் திரைப்படத்தை தயாரித்த நிஹாரிகா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக உருவாகும் ‘வெங்கி 75’ பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஜனவரி 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இது தொடர்பாக பிரத்யேக புகைப்படம் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.
நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட்- இயக்குநர் சைலேஷ் கொலனு- நடிகர் விக்டரி வெங்கடேஷ் என திறமையான படைப்பாளிகள் கூட்டணி அமைத்திருப்பதால், இப்படைப்பை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இதனை பூர்த்தி செய்யும் வகையில் ஃப்ரி லுக் எனப்படும் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் புகைப்படத்தில், நடிகர் விக்டரி வெங்கடேஷின் சில் அவுட் தோற்றம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது. மேலும் அவரது கையில் துப்பாக்கி போன்ற கடுமையான ஆயுதம் இல்லாமல், வேறு ஏதேனும் ஒன்றை வைத்திருப்பது…இப்படத்தை பற்றி ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை எழுப்பி இருக்கிறது.
இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் தயாராகும் இந்த படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.