அமரர் கல்கி வாழ்க்கை வரலாறு – இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டார்:
பொன்னியின் செல்வன் படைத்த அமரர் கல்கி தமிழின் சிறந்த எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், கலை விமர்சகர், பாடலாசிரியர். இவை அனைத்துக்கும் மேலாக ஆழ்ந்த தேச பக்தர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று மும்முறை சிறை சென்றவர். அவரது எழுத்துக்களைப் போலவே வாழ்க்கையும், மிகவும் சுவாரசியமானது. “கல்கி:பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் பத்திரிகையாளர் எஸ். சந்திர மௌலி எழுதியுள்ள அமரர் கல்கியின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் மணிரத்னம் இன்று (13 பிப்ரவரி 2023) வெளியிட்டார். புத்தகத்தின் முதல் பிரதிகளை அமரர் கல்கியின் பேத்திகளான திருமதி. சீதா ரவி, திருமதி. லட்சுமி நடராஜன் இருவரும் பெற்றுக் கொண்டனர்.
“அமரர் கல்கியின் எழுத்துக்கள் தலைமுறைகள் தாண்டி ரசிக்கப்படுவது அவரது எழுத்தின் ஈர்ப்புக்கு சாட்சி. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் பெரும் வரவேற்பினைப் பெற்று, இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவரது வாழ்க்கை வரலாறு வெளியிடப்படுவது மிகவும் பொருத்தமானது” என்று புத்தகத்தை வெளியிடுகையில் இயக்குனர் மணிரத்னம் குறிப்பிட்டார்.
“பொன்னியின் செல்வனை எழுத்தில் படித்து, திரையில் பார்த்து ரசித்த இன்றைய இன்ஸ்டாகிராம் தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில் அவரது ஆளுமையைப் பற்றி மிகவும் விறுவிறுப்பாக இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார் திருமதி.சீதா ரவி.
220 பக்கங்கள் கொண்ட “கல்கி: பொன்னியின் செல்வர்” புத்தகத்தின் விலை ரூ.225/- வெளியீடு: கலைஞன் பதிப்பகம், 9 சாரங்கபாணி தெரு, தி நகர், சென்னை 600017. தொலைபேசி: 044-28340488