இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானது விஷ்ணு விஷால் மட்டுமல்ல, அந்த படத்தில் அவரது நண்பனாக நடித்த பரோட்டா புகழ் சூரியும் இணைந்தே தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்கள்.
அதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் நண்பர்களாக காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்கள். குறிப்பாக வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தை சொல்லலாம். ஆனால் இடையில் விஷ்ணு விஷாலின் தந்தையின் மூலமாக இடம் வாங்கிய வகையில் தன்னை அவர் பல கோடிகள் ஏமாற்றி விட்டார் என ஒரு புகாரை கூறிய சூரி அவர் மீது வழக்கு பதிவு செய்தார்.
தன் தந்தையின் மீது சூரி இப்படி வழக்கு தொடர்ந்ததால் கோபமான விஷ்ணு விஷால் இனிமேல் சூரியுடன் இணைந்து நடிக்கமாட்டேன், எனக்கும் அவருக்கும் நட்பு இனி அவ்வளவுதான் என்று அப்போதே கூறினார்.
இந்த நிலையில் தற்போது விஷ்ணு விஷால் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியின் போது சூரியுடன் நீங்கள் இணைந்து நடிப்பீர்களா அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு சூரியும் நானும் இப்போது பேசிக்கொண்டு இருக்கிறோம். எங்களுக்குள் நிபந்தனையில் ஒத்துப் போனால் நடிக்க வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி என் தந்தை குறித்த பிரச்சினையில் என்ன நடந்தது என்கிற உண்மை விரைவில் வெளிவரும் என்று கூறியுள்ளார் விஷ்ணு விஷால்.