தமிழ் சினிமாவை பொறுத்தவரை எப்போதுமே ஒரு சில நடிகர்களை பற்றியும் ஒரு சில இயக்குனர்கள் மற்றும் கதாநாயகிகளை பற்றி ஏதாவது சர்ச்சை ஓடிக்கொண்டே இருக்கும். அந்த வகையில் நடிகர்களில் சிம்பு, இயக்குனர்களில் பாலா இருவருமே எப்போதுமே பரபரப்பான செய்திகளை கொடுப்பதற்கு பஞ்சம் இல்லாதவர்கள். சிம்புவை பொறுத்தவரை அவரை ஒப்பந்தம் செய்து விட்டால் கொடுத்த கால்சீட் படி நடிக்க வரமாட்டார்.. அப்படியே வந்தாலும் காலையில் சூட்டிங் என்றால் மதியம் அல்லது மாலை தான் வருவார்.. திடீரென கிளம்பி சென்று விடுவார் என்று பல குற்றச்சாட்டுகள் வந்தது உண்டு.
குறிப்பாக அவரை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனின் கண்ணீரை மட்டும் சேமித்து வைத்திருந்தால் ஒரு டேங்க் கூட பத்தாது.
அதேபோல இயக்குனர் பாலா இயக்கும் படங்களில் தயாரிப்பாளருடன் அல்லது சம்பந்தப்பட்ட ஹீரோக்களுடன் ஏதாவது முரண்பாடு ஏற்பட்டு அதனால் படப்பிடிப்பு தாமதம் அடைந்து பெரும்பாலும் அவரது படங்கள் சொன்ன நேரத்தில் வெளியாகாமல் ஏதோ ஒரு தேதியில் வெளியான கதை தான் நிறைய முறை நடந்துள்ளது.
அப்படி சமீபத்தில் அவருக்கு நெருங்கிய நட்பு வட்டாரத்தில் உள்ள நடிகரான சூர்யாவை வைத்து அவர் இயக்கி வந்த வணங்கான் படத்திலிருந்து கூட திடீரென்று சூர்யா வெளியேறும் சூழல் உருவானது. தற்போது அந்த படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தை தற்போது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டேக் ஓவர் செய்து தயாரித்து வருகிறார். இவர் தான் இவ்வளவு சிக்கல்களை உண்டு பண்ண கூடிய சிம்புவை வைத்து மாநாடு என்கிற வெற்றி படத்தை தயாரித்தவர்.
எப்படி இவர்கள் இருவருடனும் இணைந்து பணியாற்ற முடிகிறது என்று கேட்டதற்கு, பாலா அண்ணனும் சிம்புவும் குணத்தில் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான். சொல்லப்போனால் குழந்தை மனம் கொண்டவர்கள். அவர்களது பாணி என்னவென்று கண்டுபிடித்து அவர்களை அவர்களது வழியில் சென்று டீல் செய்தால் எந்த பிரச்சனையும் வர வாய்ப்பு இல்லை.
பாலா அண்ணன் படம் தாமதமாகிறது என்பது அவர் வேண்டுமென்றே செய்வதில்லை. படம் நல்ல குவாலிட்டியாக வரவேண்டும் என்பதற்காகத்தான் அவர் நேரம் எடுத்துக் கொள்கிறார். அதேபோல சிம்புவும் அவரது மனநிலை அறிந்து பயணித்தால் எந்தவித தொந்தரவும் இல்லாமல் நடித்துக் கொடுக்கிறார் என்று அவர்களைப் பற்றி பாசிட்டிவாக கூறியுள்ளார்.