திரையுலகில் உள்ளவர்களை பற்றி, குறிப்பாக நடிகைகளை பற்றி சில நேரங்களில் சினிமாவில் இருந்தோ அல்லது அரசியல்வாதிகளிடம் இருந்தோ அவதூறான கருத்துக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துவது உண்டு. அப்படி சில மாதங்களுக்கு முன்பு நடிகை குஷ்புவை பற்றி திமுக பேச்சாளர் ஒருவர் தரக்குறைவாக விமர்சித்து சிக்கலில் மாட்டினார்.
சமீபமாக லியோ படம் வெளியான பிறகு அதில் நடித்திருந்த மன்சூர் அலிகான் நடிகை திரிஷா பற்றி ஜாலியாக பேசுகிறேன் என கமெண்ட் அடித்தது திரிஷாவை அவமதிப்பு செய்வதாக மாறி அதன் மூலம் நீதிமன்ற வழக்கை சந்தித்து அபராதம் செலுத்தும் அளவிற்கு நிலைமை சீரியஸ் ஆனது.
இந்த நிலையில் மீண்டும் திரிஷா குறித்து அதிமுகவில் இருந்து வெளியேறிய ஒரு அரசியல்வாதி அவதூறான ஆதாரமற்ற செய்தி ஒன்றை மீடியாக்கள் முன் கூறியுள்ளார். அதில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு எடப்பாடி தலைமையில் அதிமுக அரசு அமைவதற்கு முன்பாக கூவத்தூர் ரிசார்ட்டில் அனைத்து எம்எல்ஏக்களும் தங்கியிருந்தபோது ஒரு எம்எல்ஏ, தனக்கு திரிஷா வேண்டுமென கேட்க 25 லட்சம் கொடுத்து அழைத்து வரப்பட்டார் என்று ஒரு தகவலை அந்த அரசியல்வாதி கூறியிருந்தார்.
அவரது பேச்சு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி அவருக்கு பல இடங்களில் இருந்து கண்டனங்கள் குவிந்தன. அன்று மாலையே தான் அப்படி பேசவில்லை என்றும் நான் பேசியதை திரித்து வெளியிட்டுள்ளார்கள் என்றும் அந்த நபர் வேறு வழியின்றி மன்னிப்பு கேட்பதாக கூறினார்.
இப்படி தமிழில் உள்ள ஒரு முன்னணி நடிகை பற்றி அரசியல் கட்சியை சேர்ந்த ஒருவர் கூறியது தங்கள் காதுகளிலேயே விழாதது போல நடிகர் சங்கத்திலிருந்து இதுவரை எந்த ஒரு கண்டனமும் தெரிவிக்கப்படவில்லை. இந்த அரசியல்வாதியின் பேச்சு வெளியான சில மணி நேரங்களிலேயே இயக்குனரும் நடிகருமான சேரன் அவருக்கு தனது கண்டனங்களை தெரிவித்து அவர் பேச்சுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார்.
அதன்பிறகு அவர் நடிகர் சங்கத்தின் பொறுப்பில் இருக்கும் நடிகர்கள் கார்த்தி மற்றும் விஷாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது குறித்து பேச முயற்சித்துள்ளார். ஆனால் இருவருமே அவரது அழைப்பை எடுக்கவில்லை. இத்தனைக்கும் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷாவின் ஜோடியாக நடித்திருந்தவர் தான் கார்த்தி. விஷாலும் ஏற்கனவே திரிஷாவுடன் இரண்டு படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.
இப்படி ஒரு சக நடிகைக்கு ஏற்பட்ட இந்த அவதூறு கருத்துக்கு குறைந்தபட்சம் ஒரு பதிலடியாக கொடுக்க வேண்டும் என இவர்களுக்கு தெரியாமல் போனது ஏனோ ?
அதேசமயம் திரிஷாவை தவறாக பேசியதாக சிக்கலுக்கு ஆளான மன்சூர் அலிகான், தற்போது சேரனுக்கு அடுத்தபடியாக அந்த அரசியல்வாதிக்கு தனது கண்டனத்தை தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.