ரஜினிகாந்த் நடித்த பாபா திரைப்படம் வெளியான சமயத்தில் அவர் எந்த அரசியல் கட்சிக்கு எதிராகவும் அந்த படத்தில் பேசவில்லை. ஆனாலும் பாட்டாளி மக்கள் கட்சியினர் அந்த படத்தை வெளியிட விடாமல் தடுக்கும் விதமாக தியேட்டர்களிலிருந்து முதல் நாளே படப்பெட்டியை தூக்கிச் சென்ற நிகழ்வு எல்லாம் நடந்தது.
அதற்கு காரணம் படம் வெளியாவதற்கு கொஞ்ச நாளைக்கு முன்பு தான் ரஜினிகாந்த் புகைப்பிடிக்கிறார், இளைஞர்களை தவறான வழிக்கு திசை திருப்புகிறார் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் குற்றம் சாட்டி இருந்தார்கள். அதற்கு பாபா படத்தில் ரஜினிகாந்த் சிகரெட் பிடிக்கும் விதமாக வெளியான போஸ்டர் ஒரு காரணம்.
ஆனால் உண்மையில் பாமகவில் இருக்கும் இளைஞர்களில் அதிகம் பேர் ரஜினியின் ரசிகர்களாக இருப்பதால் அவர்கள் ரஜினி சொல்பவர்களுக்கு தான் ஓட்டு போடுகிறார்கள். அதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதாலயே ரஜினியின் பக்கம் தங்களது பார்வையை திருப்பினார்கள். அப்படி அந்த கலாட்டா நடந்த சமயத்தில் அதிரடியாக செயல்பட்டவர் தற்போது தமிழக வாழ்வுரிமை கட்சி என்கிற பெயரில் கட்சி நடத்தி வரும் டோல்கேட் புகழ் வேல்முருகன் முக்கிய பங்கு வகித்தார்.
தற்போது சமீபத்திய ஒரு நிகழ்வில் அவர் பேசும்போது, “அப்போது ரஜினிக்கே நாங்கள் மிகப்பெரிய அளவில் தண்ணி காட்டினோம். அந்த படத்தின் படப்பெட்டி எங்களது முந்திரிக் காட்டில் கிடந்தது.. இப்போது விஜய் கட்சி ஆரம்பித்து விட்டார். அவர் உறுப்பினராக சேர அழைப்பு விடுத்ததுமே 20 லட்சம் 50 லட்சம் சேர்ந்து விட்டார்கள் என எல்லோரும் கூறுகிறார்கள். 40 வருடங்களாக இந்த அரசியல் களத்தில் நாங்கள் இருக்கிறோம். நாங்கள் என்ன இளிச்சவாயர்களா.. ரஜினியையே பார்த்து விட்டோம். விஜய்யையும் ஒரு கை பார்க்க மாட்டோமா ?” என்று தனது வெறுப்பை உமிழ்ந்துள்ளார்.