திரையலகில் இருக்கும் 24 விதமான சங்கங்களில் பிரச்சனைகள் என வரும் எதிர்பார்த்தால் அது நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என்று தான் சொல்வார்கள். ஆனால் இவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக தமிழ் திரை உலக டப்பிங் சங்கத்தில் நடக்கும் பிரச்சனைகள் தினசரி புதிது புதிதாக ஒவ்வொன்றாக வெளி வருகிறது.
கிட்டத்தட்ட 40 வருடமாக டப்பிங் யூனியன் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார் ராதாரவி. அங்கே அவர் வைத்தது தான் சட்டம் என்கிறார்கள். அவரை எதிர்த்து கேள்வி கேட்டால் என்ன ஏது என்று கேட்காமல் ஏதேதோ காரணங்களை சொல்லி அவர்களை சங்கத்தில் இருந்து நீக்கி விடுகிறார் என்கிறார்கள். சின்மயி இதுகுறித்து பரபரப்பாக கூறிய குற்றசாட்டில் இருந்து இதை புரிந்து கொள்ளலாம்.
இந்த நிலையில் தான் நேற்று டப்பிங் யூனியனுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த முறை ராதாரவியை எதிர்த்து அவர் கூடவே இருந்தவர்கள் எதிரணியில் இருந்தனர். அது மட்டுமல்ல ராதாரவிக்கு, அவரது அணி இருப்பவர்களுக்கு எதிராக அவர்கள் செய்த விஷயங்களை எல்லாம் சேனல்கள் மூலமாக பேசி பேசி விஷயத்தை வெளிச்சம் போட்டு காட்டினார்கள்.
இதனால் இந்த தடவை ராதாரவிக்கு போட்டி கடுமையாக இருக்கும், ஒருவேளை அவர் தோல்வியை தழுவினாலும் தழுவுவார் என்பது போன்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் ஆச்சரியமாக, இல்லை என்றால் இதில் என்ன ஆச்சரியம் என்று சொல்லும் விதமாக ராதாரவியே மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து எதிரணியில் இருப்பவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், இந்த தேர்தல் அல்ல.. எத்தனை தேர்தல் வந்தாலும் அவர் தான் ஜெயிப்பார்.. காரணம் அவர் தனக்கு வேண்டியவர்களான ஆட்டோக்காரர்கள், வாட்டர் கேன் போடுபவர்கள், டிரைவர்கள், கூலி வேலை செய்பவர்கள் என எல்லோருக்கும் சந்தா கட்டி அவர்களை எல்லாம் டப்பிங் யூனியன் மெம்பர் போல மாற்றி வைத்திருக்கிறார்,
அவர்கள் எல்லாம் வேலை செய்யவே வரமாட்டார்கள். ஆனால் இந்த ஓட்டு போடும் சமயத்தில் வந்து ஓட்டு போடுவார்கள். இப்படி கிட்டத்தட்ட அவர் கைவசம் 200 பேருக்கு மேல் இருக்கிறார்கள். அதனால் என்ன தான் பாதி பேருக்கு மேல் எதிர்த்தாலும் இந்த 200 பேரால் ராதாரவி தொடர்ந்து வெற்றி பெறத்தான் செய்வார் என்கிறார்கள். இதை நீக்காத வரை அவரை ஒன்றும் செய்ய முடியாது என்றும் குமுறுகிறார்கள்