இசைஞானி இளையராஜா கோபக்காரர் என்று ஒரு சிலரும் அவரைப்போல அமைதியானவர், நன்கு பழகக் கூடியவரை பார்க்க முடியாது என்றும் இருவேறு விதமாக சினிமாவில் கூறுகிறார்கள். ஆனால் அது அவர்களுடன் பழகியவர்கள் எப்படி பழகினார்கள் என்பதை பொறுத்து தான். இந்த நிலையில் சமீபத்தில் இசைஞானி இசையில் ராமராஜன் நடிப்பில் உருவாகியுள்ள சாமானியன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கே.எஸ் ரவிக்குமார் இளையராஜாவுக்கும் தனக்குமான ஒரு சுவாரசியமான அனுபவம் குறித்து கூறினார்.
பெரும்பாலும் தனது படங்களுக்கு இசையமைக்க. இளையராஜா வீட்டு வாசலில் போய் நிற்காமல் சிற்பி, சௌந்தர்யன் என அடிமட்ட இசையமைப்பாளர்களே பயன்படுத்திக் கொள்வார் கே.எஸ் ரவிக்குமார். ஒருமுறை ஏவிஎம்முக்காக அவர் சக்திவேல் என்கிற படத்தை இயக்கினார். அந்த படத்திற்கு இளையராஜா தான் இசையமைப்பாளர்.
அவரிடம் பாடல்களை வாங்குவதற்காக கே.எஸ் ரவிக்குமார் சென்றார். அப்போது இளையராஜா பேச்சுவாக்கில், உங்களுக்கு எந்த மாதிரி பாடல் வேண்டும் என கேட்க, கே எஸ் ரவிக்குமார் அதற்கு முன் தான் இயக்கிய புருஷ லட்சணம் படத்தில் இடம்பெற்ற கோலவிழியம்மா ராஜகாளியம்மா என்கிற பாடலை போல ஒரு சாமி பாடல் வேண்டும் என கேட்டுள்ளார். இளையராஜாவும் அவரை பார்த்துவிட்டு ஒன்றும் பேசாமல் ஒரு பாடல் போட்டு தந்துள்ளார்.
ஆனால் கே எஸ் ரவிக்குமார் சொன்ன பாடல் தேவா இசையமைத்தது. அந்த பாடல் முடிந்து வெளியே வந்த போது கே.எஸ் ரவிக்குமாரை அழைத்த ஏவிஎம் சரவணன் இப்படி தேவாவை பற்றி இளையராஜாவிடம் புகழும் விதமாக பேசலாமா என்று கடிந்து கொண்டாராம்.
அதன் பிறகு மதியம் அடுத்த பாடலுக்காக இருவரும் அமர்ந்த போது இப்போது என்ன பாடல் வேண்டும், இதற்கு என்ன சாம்பிள் வைத்திருக்கிறாய் என்று இளையராஜா கேட்டுள்ளார். இப்போது சுதாரித்துக் கொண்ட கே.எஸ் ரவிக்குமார், கரகாட்டக்காரன் படத்தில் நீங்கள் போட்ட மாங்குயிலே பூங்குயிலே பாடல் மாதிரி வேண்டும் என்று கேட்டுள்ளார்.
உடனே இளையராஜாவும் சிரித்துக் கொண்டே மல்லிகை மொட்டு மனச தொட்டு என்கிற ஹிட் பாடலை போட்டு கொடுத்துள்ளார். ஏவிஎம் சரவணனுக்கும் கே எஸ் ரவிக்குமார் இப்படி இளையராஜாவை சமாளித்ததில் சந்தோசம். இந்த தகவலை கூறிய அனைவரையும் சிரிக்க வைத்தார் கே.எஸ் ரவிக்குமார்.