கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடிப்பில் வெளியான படம் பையா. பருத்திவீரன் படம் மூலம் முரட்டுத்தனமான கிராமத்து இளைஞனாகவே ரசிகர்கள் பார்த்து வந்த கார்த்தியை இந்த படத்தின் மூலம் ஒரு அல்ட்ரா மாடர்ன் நகரத்து இளைஞனாக, சாக்லேட் பாயாக ,பெண்களின் கனவு கண்ணனாக மாற்றினார் இயக்குனர் லிங்குசாமி.
அதை தொடர்ந்து தான் கிராமம், நகரம் என இரண்டு கதைகளுக்கும் கார்த்தி பொருத்தமாக இருப்பார் என மற்ற இயக்குனர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை வந்தது. இந்த நிலையில் 14 வருடங்கள் கழித்து தற்போது பையா திரைப்படம் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரீலீஸ் செய்யப்படுகிறது. இதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இயக்குனர் லிங்குசாமி கமர்சியல் ஆக்சன் படங்களை கொடுப்பதில் வல்லவர் தான். ஆனால் எல்லா இயக்குனர்களுக்கும் அதீத தன்னம்பிக்கை காரணமாக சறுக்கல்கள் ஏற்படும். அப்படித்தான் லிங்குசாமி இயக்கிய படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவின.
இருந்தாலும் லிங்குசாமி மூலம் உச்சம் பெற்ற ஹீரோக்களான மாதவன் வேட்டை படம் மூலமும் விஷால் சண்டக்கோழி 2 படம் மூலமும் மீண்டும் லிங்குசாமி மேலே எழுந்து வர ஒரு வாய்ப்பு கொடுத்து அவரது டைரக்சனில் நடித்தார்கள். அந்த இரண்டு வாய்ப்பையும் லிங்குசாமி சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
அந்த வகையில் பையா மூலம் மிகப்பெரிய உயரத்திற்கு சென்ற கார்த்தி, லிங்குசாமிக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் என பையா படத்திற்கு என இருக்கும் ரசிகர்களும் திரையுலகை சேர்ந்தவர்களும் நினைக்கிறார்கள்.
அடுத்தடுத்து சில புதிய இயக்குனர்கள் மற்றும் ஏற்கனவே பணியாற்றிய இயக்குனர்களுடன் மீண்டும் பணியாற்றி சில தோல்வி படங்களை கொடுக்கும் கார்த்தி, ஒரு நம்பிக்கையுடன் இயக்குனர் லிங்குசாமிக்கு மீண்டும் ஒரு படம் கொடுக்கலாமே ?