நடிகர் விஜய் தனது அரசியல் வருகை குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியிட்டார். இன்னும் இரண்டு படங்களில் மட்டுமே நடிக்கப் போவதாகவும் அதன் பிறகு முழுநேர அரசியலில் ஈடுபட்டு 2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து களம் இறங்கப் போவதாகவும் அவர் கூறியிருந்தார்.
அது மட்டுமல்ல இந்த பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் தனது ஆதரவு இல்லை என்றும் தனது மன்றத்தை சேர்ந்தவர்கள் யாரும் இந்த தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் உத்தரவு போட்டுவிட்டார் விஜய். இந்த நிலையில் தான் நடித்து வரும் கோட் படத்தின் படப்பிடிப்பிற்காக சமீபத்தில் துபாய் சென்றிருந்தார் விஜய்.
போன இடத்தில் துபாயில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார். அதுகுறித்த புகைப்படங்களை அவரது ரசிகர் மன்ற தலைவராக புஸ்ஸி ஆனந்த் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே அந்த புகைப்படங்களை நீக்கி விட்டார்கள்.
காரணம் அந்த கோவிலில் காவி உடை அணிந்த மத குருமார்களுடன் விஜய் இருப்பதை பார்க்கும் அவரது ரசிகர்கள் ஒருவேளை பாஜகவுக்கு தான் விஜய் தற்போது தனது ஆதரவை அளிக்கிறாரோ என தவறாக புரிந்து கொண்டு விடுவார்கள் என்று நினைத்து இந்த புகைப்படங்களை நீக்கியதாக தெரிகிறது.
கோவிலுக்குப் போக தைரியம் இருந்த விஜய்க்கு அந்த புகைப்படங்களை பொதுவெளியில் விடுவதற்கு இவ்வளவு பயமா என எதிர் தரப்பு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்