சமீபகாலமாக இசைஞானி இளையராஜாவின் பாடல்களை பல பிரபல இளம் இயக்குனர்கள் தங்களது படங்களில் பயன்படுத்துவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. அப்படி சின்ன பட்ஜெட் படங்களில் இளையராஜா பாடல்கள் பயன்படுத்தப்படும் போது அதை அவர் கண்டுகொள்ளாமல் சென்று விடுகிறார். அதே சமயம் பெரிய இசையமைப்பாளர்கள், பெரிய ஹீரோக்கள், பெரிய இயக்குனர்களின் படங்களில் தனது இசை பயன்படுத்தப்பட்டிருந்தால் பாடலுக்கான காப்புரிமை கேட்டு வழக்கு தொடர்ந்து வருகிறார்.
கடந்த சில வருடங்களாகவே இளையராஜா இப்படி காப்பிரைட் குறித்து கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால் அதையெல்லாம் சட்டை செய்யாமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கும் கூலி படத்துக்காக வெளியிட்ட ஒரு டீசரில் இளையராஜாவின் வா வா பக்கம் வா என்கிற பாடல் வரிக்கான இசையை பயன்படுத்தி இருந்தார்.
இதனை தொடர்ந்து இசைஞானி இளையராஜா இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் மீது காபி ரைட் வழக்கு தொடர்ந்து உள்ளார். சின்ன விஷயம் தானே விட்டுவிட்டு போகலாமே என்று சிலர் பேசினாலும், ஏன் சன் பிக்சர்ஸ் முறைப்படி காப்பிரைட் உரிமை பெற்று இதை பயன்படுத்தக் கூடாதா என்றும் பலர் கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம் இந்த பிரச்சினை குறித்து கேட்கப்பட்டபோது, இது இசையமைப்பாளருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே இருக்கும் பிரச்சனை.. அவர்கள் அதை பேசி சரி செய்து கொள்வார்கள் என்று கூலாக பதில் கூறி கும்பிடு போட்டு விட்டு சென்றார். அவரிடம் இருந்து ஏதாவது விமர்சன ரீதியாக பதில் வரும் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.