சினிமாவில் இயக்குனர்களாக ஆசைப்பட்டு சென்னைக்கு வரும் பலரும் ஒவ்வொரு இயக்குனரிடமும் போராடி வாய்ப்பு பெறுவது என்பது குதிரை கொம்பு போன்றது. நடிகராக வாய்ப்பு கேட்க செல்லும்போது ஏற்படும் அவமானங்களை விட உதவி இயக்குனராக வாய்ப்பு கேட்டு செல்லும்போது ஏற்படும் அவமானம் ஒன்றும் குறைந்தது இல்லை.
அப்படி மதுரையிலிருந்து இயக்குனர் பாலா சினிமாவுக்கு வந்த போது பாலு மகேந்திராவிடம் எப்படியோ உதவி இயக்குனராக சேர்ந்து விட்டார். அவரது நண்பரான அமீர் கூடவே வந்ததால் அடுத்து பாலாவின் படத்தில் நண்பர் என்கிற அடிப்படையில் உதவி இயக்குனராக பணியாற்றினார். அப்படித்தான் சசிகுமார் போன்றவர்கள் அந்த கேங்கில்இணைந்து கொண்டனர்
புளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்டி இந்தியன் என்கிற படத்தை தயாரித்தவர் ஆதம்பாவா. இவர் தற்போது அமீரை கதாநாயகனாக வைத்து உயிர் தமிழுக்கு என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஆதம்பாவா, “அமீரும் நானும் 40 வருட நண்பர்கள் தான்.. எங்கள் இருவரின் வீடுகளும் மதுரையில் ஒரே தெருவில் தான் இருந்தது. நான் மதுரையில் இருந்த காலத்தில் என்னிடம் பல பேர் வேலை செய்தார்கள். நான் வசதியாக இருந்தேன். ஆனாலும் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்கிற ஆசையில் கிளம்பி வந்தேன்.
பாலாவையும் எனக்கு தெரியும் என்பதால் ஒரு நண்பர் மூலமாக சிபாரிசு பெற்று முதலில் பாலாவை சந்திக்க சென்றேன் ஆனால் ஒரு நாள் முழுவதும் காக்க வைத்து என்னை சந்திக்கவில்லை. அங்கிருந்து கோபத்தில் கிளம்பிவிட்டேன். அடுத்ததாக அமீரை சந்திப்பதற்காக சிபாரிசு பெற்று அங்கே சென்றேன். அமீர் என்னை ஓடோடி வந்து வரவேற்பார், அப்போது உருவாகி கொண்டிருந்த பருத்திவீரன் ஸ்கிரிப்ட்டை என்னிடம் கொடுத்து படிக்க சொல்லி விவாதம் செய்வார் என நினைத்து சென்றேன்.
ஆனால் அவரும் காலையிலிருந்து மாலை வரை என்னை கூப்பிடவே இல்லை. இவர்கள் இருவரின் அலுவலகத்தில் காத்திருந்த சமயத்தில் சாப்பிட கூட சொல்லவில்லை. அதனால் கோபத்தில் அங்கிருந்தும் வந்து விட்டேன். ஆனால் என்னை இவர்கள் இருவரிடமும் சிபாரிசு செய்தவர் இரண்டு பேரும் உன்னை டெஸ்ட் பண்ணுகிறார்கள் என்று கூறினார் .ஆனாலும் எனக்கு என்னவோ அது சரியாக படவில்லை.
ஆனால் இவர்கள் இருக்கும் அலுவலக செட்டப் எல்லாவற்றையும் பார்த்தபோது நம்மிடம் தான் பணம் இருக்கிறதே.. நாமே ஒரு அலுவலகத்தை திறந்து அதன்பிறகு வாய்ப்பு தேடுவோம் என புதிய அலுவலகத்தை திறந்துவிட்டேன் என்று கூறினார்.
உதவி இயக்குனராக வேலை தேடி வந்த பணக்கார நண்பருக்கே இந்த கதி என்றால் மற்றவர்களின் நிலை என்ன என யோசித்துக் கொள்ளுங்கள்.