தமிழ் சினிமாவை பொருத்தவரை சீனியர் நடிகர்களில் சிக்கலானவர் கமல். ஜூனியர் நடிகர்களில் சிக்கலுக்கு என்றே பெயர் போனவர் நடிகர் சிம்பு. இந்த இரண்டு பேரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள். இவர்கள் இருவரையும் வைத்துக்கொண்டு இயக்குனர் மணிரத்னம் தான் இயக்கி வரும் தக் லைப் படத்திற்காக படாதபாடு பட்டு வருகிறார்.
ஒரு பக்கம் கமல் விக்ரம் படத்தின் மூலம் கிடைத்த வெற்றியால் வதவெதவென படங்களை ஒப்புக்கொண்டு வருகிறார். அதே சமயம் சமீபத்தில் நடந்த தேர்தல் காரணமாக பிரச்சாரம் செய்கிறேன் என பல நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் டிமிக்கி கொடுத்தார்.
இந்த நிலையில் ஏற்கனவே லிங்குசாமி தயாரிப்பில் உத்தம வில்லன் படத்தில் அவர் நடித்ததால் ஏற்பட்ட நட்டம் காரணமாக இன்னும் லிங்குசாமியால் எழுந்திருக்கவே முடியவில்லை. அவருக்கு ஒரு படம் எடுத்து தருவதாக வாக்குறுதி கொடுத்தவர் அதை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்த நிலையில் லிங்குசாமி தனக்கு ஒரு படம் கமல் நடித்து தர வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க சிம்பு, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் நடிப்பதற்காக ஒரு படத்திற்கு அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு அந்த படத்தில் நடிக்காமல் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார். அது மட்டுமல்ல ஏற்கனவே தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கும் பணம் திருப்பி கொடுப்பதில் சிம்புவுக்கு பிரச்சனை நீடித்து வருகிறது.
தற்போது இந்த இரண்டு பிரச்சனையும் சேர்ந்து சிம்புவை தக் லைப் படத்தில் நடிக்க கூடாது என்று தயாரிப்பாளர் சங்கத்திற்கு புகார் அளிக்கும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது. இதனால் தான் நடிகர்கள் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் இந்த படத்தை விட்டு வெளியேறி விட்டனர் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரால் ஏற்படும் குடைச்சலை தாங்க முடியாமல் மணிரத்னம் டென்ஷனில் இருப்பதாக சொல்லப்படுகிறது.