சினிமாவில் பல நல்ல உயரங்களை தொடக்கூடிய திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் வாய்க்கொழுப்பு காரணமாக அப்படி நிறைய வாய்ப்புகளை கோட்டை விட்டு காணாமல் போனவர்கள் பலர் உண்டு. அந்த பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்து இருப்பவர் கதாசிரியரும் இயக்குனருமான ரத்தினகுமார்.
இவரை தனியாக யாருக்கும் தெரியாது. லோகேஷ் கனகராஜ் படங்களில் அவருடன் இணைந்து கதை விவாதத்தில், வசனத்தில் பங்கேற்பவர். அது சம்பந்தமான பட விழாக்களில் கலந்து கொள்ளும் போது தான் ரத்தினகுமார் என்கிற இவரை பற்றிய அடையாளமே ரசிகர்களுக்கு தெரியவந்தது. அது மட்டும் அல்ல இவர் தீவிர விஜய் ரசிகனாக தன்னை காட்டிக் கொள்பவர். அதன் மூலம் விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பை எப்படியாவது பெற்றுவிடலாம் என மனப்பால் குடித்தவர்.
அதனால் தான் ஜெயிலர் பட விழாவில் ரஜினிகாந்த் காக்கா கழுகு என்று ஒரு கதை கூறியபோது அதில் காக்காவாக விஜய்யை பலரும் நினைத்தது போல இவரும் அப்படியே நினைத்துக் கொண்டார். அதற்கு லியோ படத்தின் வெற்றி விழாவில் ரஜினிக்கு பதில் கொடுப்பதாக நினைத்து கழுகு மேலே பறந்தாலும் சாப்பிடுவதற்கு கீழே வந்துதானே ஆக வேண்டும் என பெரிய அறிவாளி போல பதில் கொடுத்தார். அது அப்போதே சலசலப்பை ஏற்படுத்தியது.
அது எந்த விதமான ரியாக்ஷனை இப்போது காட்டியுள்ளது என்றால் லோகேஷ் ரஜினிகாந்த் படத்தை இயக்க ஒப்புக்கொண்ட பின் தனது குழுவில் இருந்து முதலில் ரத்தினகுமாரை கழட்டி விட்டு விட்டார். அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படத்தை வெங்கட் மோகன் என்பவர் இயக்குகிறார்.
ஆனால் இந்த படத்தை முதலில் ரத்தினகுமார் தான் இயக்குவதாக இருந்தது. இந்த படத்தில் இருந்தும் லோகேஷ் அவரை கழட்டிவிட்டார். வெளியில் லோகேஷ் கனகராஜ் கமல் ரசிகன் என்பது போன்று சொல்லப்பட்டாலும் அவர் உண்மையிலேயே தீவிரமான ரஜினி ரசிகன் என்பதை ரத்தினகுமார் உணர தவறிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.