அஜித் படங்களை இயக்கும் வாய்ப்பு தங்களுக்கு கிடைக்காதா என ஒரு காலகட்டத்தில் இயக்குனர்கள் பலரும் ஏங்கிக் கொண்டிருந்தனர். இன்று அவரது படங்களில் ஒப்பந்தமாகும் இயக்குனர்களுக்கு நடக்கும் குளறுபடிகளை பார்க்கும்போது, அவரது படங்கள் தாமதமாவதை பார்க்கும்போது அஜித் படமா வேண்டாம் என முன்னணி இயக்குனர்களே கும்பிடு போடும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது.
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு அஜித்தை வைத்து ஜி என்கிற படத்தை இயக்கியவர் இயக்குனர் லிங்குசாமி. முதல் படத்தில் மம்முட்டி, இரண்டாவது படத்தில் மாதவன் ஆகியோரை கதாநாயகனாக வைத்து படம் இயக்கியவருக்கு மூன்றாவது இடத்தில் புதியதாக ஒரு இளைஞரை வைத்து இயக்கினால் நன்றாக இருக்கும் என்று தான் நினைத்தார்.
ஆனால் சிலரின் வற்புறுத்தல் காரணமாக தான் அஜித்தை வைத்து ஜி என்கிற படத்தை இயக்கினர் ஆனால் அந்த படம் தோல்வி அடைந்தது. தற்போது அந்த படம் குறித்து கூறியுள்ளார் லிங்குசாமி, அந்த படத்தில் அஜித் நடிப்பதில் எனக்கு விருப்பமே இல்லை.. அவ்வளவு ஏன், அந்த சமயத்தில் அஜித்துக்கே சினிமாவில் நடிக்க இன்ட்ரஸ்ட் இல்லாமல் கார் ரேஸில் தான் தீவிரம் காட்டி வந்தார்.
படப்பிடிப்பும் பல காலகட்டங்களில் தள்ளி தள்ளி நடைபெற்றது. படம் இயக்கும் அந்த ஆர்வமும் என்னிடம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போனது. அதனால் தான் அதில் முழு கவனம் செலுத்த முடியவில்லை. அந்த படம் உருவாகும் போதே தோல்விப்படம் என்பதை என்னால் உணர முடிந்தது என்று கூறியுள்ளார் லிங்குசாமி.