மலையாள திரையுலகில் இருந்து தமிழுக்கு அவ்வப்போது சில நடிகர்கள் வந்து இங்கேயும் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொள்வார்கள். பிரித்திவிராஜ், துல்கர் சல்மான் ஆகியோரை தொடர்ந்து மிகவும் தாமதமாக நடிகர் பஹத் பாசிலும் தமிழில் வேலைக்காரன் படம் மூலமாக வந்தார். ஆனால் அந்த படம் கை கொடுக்காததால் தமிழில் ஒரு பெரிய இடைவெளி விட்டு விட்டார்.
அதன் பிறகு கமலுடன் இணைந்து நடித்த விக்ரம் படம் மூலமாக மீண்டும் தமிழுக்கு வந்தவர், அடுத்ததாக மாமன்னன் படம் மூலமாக தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் வட்டாரத்தை உருவாக்கி விட்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் அவர் நடித்துள்ள ஆவேசம் என்கிற திரைப்படம் வெளியாகி உள்ளது. இதில் மிகப்பெரிய தாதாவாக நடித்திருக்கும் பஹத் பாசில் படம் முழுவதும் காமெடி கலந்த நடிப்பால் அதிர வைத்திருக்கிறார். காட்சிக்கு காட்சி சிரிக்க வைக்கிறார்.
இதனால் படம் ரசிகர்களின் வரவேற்புடன் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன், “ஐயா நிச்சயமாக நீங்கள் வேற்றுக் கிரகத்திலிருந்து வந்த மனிதர்தான்.. என்னமா நடிப்பில் பின்னுகிறீர்கள்.. சான்சே இல்லை” என்று அவரை பாராட்டி உள்ளார்.