இரண்டு கலைஞர்களை மட்டுமே வைத்து ஹாரர் திரில்லர் படமாக வெறும் 10 நாட்களில் உருவாகியிருக்கும் ‘டோலா’ படத்தின் வெளியீட்டு விழா இன்று (25.12.2019) நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர்கள் மற்றும் சிறப்பு விருந்திருனர்கள் பேசியதாவது
தயாரிப்பாளர் டாக்டர் ஷாம் குமார் பேசும்போது,
நான் இந்த இடத்திற்கு வருவதற்கு காரணம் என் நண்பர்கள் தான். ஊக்குவிக்க முடியவில்லையென்றாலும் கைதட்டி விடாமலாவது இருங்கள். தயாரிப்பாளர்களை வரவேற்க வேண்டும். அப்போது தான் பெரிய படங்கள் உருவாகும். ஒரு ஜிம் பாயாக வந்தவன் இன்று தயாரிப்பாளராக நிற்கிறேன். அதுதான் சினிமா. சினிமாவை நேசியுங்கள், அதேபோல் குடும்பத்திலுள்ளவர்களையும் நேசியுங்கள். நான் இந்த நிலைக்கு வருவதற்கு என் குடும்பமும் ஒரு காரணம். ஒரு நல்ல படம் தயாரிக்க வேண்டும் என்று நினைத்துதான் இப்படத்தை எடுத்தேன். இப்படத்திற்குப் பிறகு ‘ரகுடு’ என்ற கேங்ஸ்டர் படம் அதிகப் பொருட்செலவில் எடுக்கவிருக்கிறோம் என்றார்.
சண்டை பயிற்சியாளர் டேஞ்சர் மணி பேசும்போது,
சண்டைக் காட்சிகள் என்று தனியாக இல்லாமல் பாடலுடன் வருவதுபோல் வித்தியாசமாக செய்திருக்கிறோம். சிறுசிறு விஷயங்களை எடுத்து சண்டைக் காட்சிகளைப் படமாக்கியிருக்கிறோம். கதாநாயகன் அட்டு டூப் போடாமல் நடித்திருக்கிறார் என்றார்.
கதாநாயகன் ரிஷி ரித்விக் பேசும்போது,
இந்த படத்தில் நாயகனாக நடிப்பதற்கு என்னை அழைத்து கதை கூறினார்கள். இரண்டு பேர் தான் என்றாலும் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒளிப்பதிவாளர், இயக்குநர் மற்றும் அனைவரின் கடுமையான உழைப்பால் 10 நாட்களுக்குள் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். சினிமாத் துறையில் வித்தியாசமாகவும், சிறப்பாகவும் செய்தால் தான் நிலைத்து நிற்க முடியும்.
மேலும், சண்டைக் காட்சிகளில் நான் நன்றாக நடித்திருப்பதற்கு பாண்டியன் மாஸ்டர் தான் காரணம். சிலம்பம் முதல் எனக்கு அனைத்தையும் கற்றுக் கொடுத்தார்கள். நாயகி பிரேர்னாவும் சண்டைக்காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார் என்றார்.
இசையமைப்பாளர் அணில் மற்றும் மணி பேசும்போது,
இப்படத்தில் நாங்கள் இருவரும் இணைந்து இசையமைத்திருக்கிறோம். ஹாரர் திரில்லர் படம் என்பதால் எந்த இடத்திற்கு என்ன மாதிரியான இசையைக் கொடுக்க வேண்டுமென்று ஆலோசித்து செய்திருக்கிறோம் என்றார்.
கதாநாயகி பிரேர்னா பேசும்போது,
இயக்குநர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். எனக்கு தமிழ் தெரியாததால் கதாநாயகன் ரிஷி ரித்விக் படப்பிடிப்பில் எனக்கு மிகவும் உதவி புரிந்தார் என்றார்.
தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது,
‘டோலா’ படத்தின் டிரைலரைப் பார்க்கும்போது இயக்குநர் நன்றாக இயக்கியிருக்கிறார் என்பது தெரிகிறது. இசையும் நன்றாக இருக்கிறது.
இக்காலகட்டத்தில் சிறிய படம், பெரிய படம் என்ற வித்தியாசமில்லை. கதை நன்றாக இருந்தால் எந்த பட்ஜெட் படமாக இருந்தாலும் வெற்றியடையும் என்றார்.
‘ஜாகுவார்’ தங்கம் பேசும்போது,
‘டோலா’ படத்தை 10 நாட்களிலேயே படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள். நானும், பாக்யராஜும் நாமும் இதுபோன்று குறைந்த நாட்களில் ஒரு படத்தை எடுக்க வேண்டுமென்று பேசிக்கொண்டிருந்தேன்.
கதாநாயகன் ரிஷியை 4 வருடங்களாக தெரியும். அமைதியான பண்புள்ள மனிதர். அவர் குணத்திற்கு நிச்சயம் வெற்றிபெறுவார். இப்படத்தின் டிரைலரையும், பாடல்களையும் பார்க்கும்போது ஒரு சில காட்சிகளில் பயம் ஏற்படும் அளவிற்கு சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள். இவர்களின் கடின உழைப்பிற்கு இப்படம் நிச்சயம் வெற்றிபெறும்.
நானும், கே.ராஜனும் சிறிய பட்ஜெட் படங்களுக்கு 100 திரையரங்கம் கிடைக்க வேண்டுமென்று போராடிக் கொண்டிருக்கிறோம்,
திரைப்படங்களில் மது அருந்துவது போன்ற காட்சிகளை எடுக்காதீர்கள். குறைந்தபட்சம் கதாநாயகனாகனாவது மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிக்காமல் இருக்க வேண்டும் என்றார்.
இயக்குநர் கஸ்தூரி ராஜா பேசும்போது,
தயாரிப்பாளருக்கு முதல் படம் எடுப்பது சாதாரண விஷயம் கிடையாது. அதிலும், படம் வெளியிடும் அளவிற்கு வருவதே வெற்றி தான். நடிப்பதில் பெரிய கலை இயக்குநரின் கருவை உள்வாங்கி முகபாவனை கொடுப்பதற்கு திறமை வேண்டும். அந்த பணியைச் செவ்வனே செய்திருக்கிறார் கதாநாயகி பிரேர்னா. நாயகன் ரிஷியும் நாயகியுடன் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார். அணில் மற்றும் மணி இருவரும் நன்றாக இசையமைத்திருக்கிறார் என்றார்.
இயக்குநர் ஆதிசந்திரன் பேசும்போது,
இப்படத்தைப் பற்றி பேசுவதற்கு பல விஷயங்கள் இருக்கின்றது. நான் ஏகலைவன் போல் இயக்குநர் பாக்யராஜிடம் இயக்கத்தைக் கற்றுக் கொண்டேன்.
பொதுவாக நான் பாடல்களிலும், இசையிலும் தலையிடுவேன். என் விருப்பத்திற்கேற்றாற்போல் இசையமைத்துக் கொடுத்த அணில் மற்றும் மணி இருவருக்கும் நன்றி. ஒளிப்பதிவாளரைப் பற்றி காட்சிகளே கூறும். தயாரிப்பாளர் ஷாம் நல்ல மனிதர் என்றார்.
நடிகர் சரண்ராஜ் பேசும்போது,
என்னையும் என் மகனையும் வைத்து ‘ரகுடு’ படத்தைத் தயாரிக்கிறார் ஷாம்குமார். அசோக் இப்படத்தை இயக்குகிறார். இந்த வாய்ப்பைக் கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி.
இயக்குநர் பாக்யராஜ் படம் இயக்குவதாக இருந்தால் நான் அப்படத்தை தயாரிப்பேன். கதாநாயகன் யாராக இருந்தாலும் நான் தயாரிப்பேன் என்றார்.
இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது,
‘டோலா’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களைப் பார்க்கும்போது ஒரு சிலரைத் தவிர மற்ற அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் புதுமுகம் தான். காட்சி அமைப்புகளைப் பார்க்கும்போது ஒளிப்பதிவாளருக்கு இது முதல் படம் மாதிரி தெரியவில்லை. கதாநாயகியும் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். எப்போதும் நல்ல கதையம்சம் கொண்ட படம் வெற்றிபெறும். இப்படமும் வெற்றிபெற வாழ்த்துக்கள் என்றார்.
‘டோலா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் நிறைவாக ‘டோலா’ படத்தின் இசைத் தகடு வெளியிடப்பட்டது. அதன்பின்பு ஜோக்கர்ஸ் கிரியேஷன்ஸ்-ன் இரண்டாவது தயாரிப்பான ‘ரகுடு’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது.