‘பசங்க’ படத்தில் அழகான, தனது தீங்கற்ற இயல்புடைய கதாபாத்திரத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரே இரவில் உறுப்பினராகி, அதைத் தொடர்ந்து ‘கோலி சோடா’ படத்தில் டீனேஜ் பையனாக அவதாரம் எடுத்தவர் கிஷோர். இந்த படங்களின் மூலம் புகழ்பெற்ற கிஷோர், தற்போது லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு முதிர்ச்சியடைந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஹவுஸ் ஓனர்’ திரைப்படம் வரும் ஜூன் 28ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
ஒரு நடிகராக படங்களை தேர்ந்தெடுப்பதில் ஒருபோதும் அவசரப்படாத கிஷோர், இந்த படம் தனக்கு எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதைப் பற்றி பேசுகிறார். அவர் கூறும்போது, “பசங்க, கோலி சோடா மற்றும் சகா போன்ற திரைப்படங்களின் மூலம் சில அங்கீகாரங்களை பெற்றதால், எனது திரைப்படங்களை நான் கொஞ்சம் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட அறிக்கை போலத் தோன்றலாம், ஆனால் வித்தியாசமான மற்றும் தனித்துவமான ஸ்கிரிப்ட்கள் மட்டுமே, ஒரு நடிகராக என் பயணத்தை மேலும் அடுத்த கட்டத்துக்கு தள்ளும் என்று நான் நம்புகிறேன். இந்த நேரத்தில், “ஹவுஸ் ஓனர்” எனக்கு ஒரு ஆசீர்வாதமாக வந்தது, என்னை தேர்ந்தெடுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மேடத்திற்கு நன்றி. நான் உண்மையில் வியப்பது அவரின் பார்வை. படத்தை தொடங்குவதற்கு முன்பே, ஒவ்வொரு கதாபாத்திரமும் எவ்வாறு இருக்க வேண்டும், எப்படி வரும் என்பது பற்றி அவருக்கு முழுமையாக தெரியும். அவரின் இத்தகைய உறுதி தான், எங்களால் முடிந்ததை சிறப்பாகச் செய்ய வைத்தது. படத்தில் நடிப்பதற்கு சில கடினமான காட்சிகளும் இருந்தன, ஆனால் லக்ஷ்மி மேடம் மிக நுணுக்கமாக நடித்து காட்டி, எங்கள் வேலையை மேலும் எளிதாக்கினார். “ஹவுஸ் ஓனர்” படத்தில் நான் நிறைய கற்றுக் கொண்டேன். எதிர்காலத்தில் அவருடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன், அதன் மூலம் அவரிடமிருந்து அதிக நடிப்பு திறன்களை பெற முடியும்” என்றார்.
தனக்கு ஜோடியாக நடித்த நடிகை லவ்லின் சந்திரசேகரை பற்றி அவர் கூறும்போது, “அவர் சந்தேகத்திற்கு இடமின்றி தமிழ் சினிமாவின் கவர்ச்சிகரமான ஈர்ப்பாக இருக்கப் போகிறார். அவரின் கதாபாத்திரத்தில் அவர் நுழைந்த விதம் நம்பமுடியாதது” என்றார்.
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ள இந்த “ஹவுஸ் ஓனர்” திரைப்படம், சென்னையின் பேரழிவு வெள்ளத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட, சில நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது. இப்படத்திற்கு கிருஷ்ணா சேகர் டி.எஸ் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தபஸ் நாயக் சித்திர உணர்வை மிக துல்லியமான ‘ஒலி’ மூலம் அலங்கரிக்கிறார். கார்க்கி மற்றும் அனுராதா பாடல்களை எழுதியுள்ளனர், சி.எஸ்.பிரேம் குமார் படத்தொகுப்பு செய்துள்ளார். மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் சார்பில் டாக்டர் ராமகிருஷ்ணன் தயாரித்துள்ள இந்த படத்தை, ஏஜிஎஸ் சினிமாஸ் ஜூன் 28 அன்று தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது.