spot_img
HomeNewsமகாமுனி படத்தின் மெகா வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் மஹிமா நம்பியார்

மகாமுனி படத்தின் மெகா வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் மஹிமா நம்பியார்

மகாமுனி படத்தின் மெகா வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் மஹிமா நம்பியார். தென்னிந்திய சினிமாவில் இனி ஒரு நல்ல நடிகை என்ற அடையாளத்தோடு உலா வரும் அளவிற்கு மகாமுனி படத்தில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. அந்த சந்தோஷத்தோடு நமது கேள்விகளுக்கு மிக இயல்பாக பதில் அளித்தார்,

“மஹிமாவிற்கு சினிமா ஆர்வம் எப்படி வந்தது?”

“அதுதான் எனக்கே தெரியவில்லை. எங்கள் வீட்டில் யாருக்கும் சினிமா தொடர்பு என்பது துளியும் கிடையாது. எந்த சினிமா பின்புலமும் இல்லாத குடும்பத்தில் பிறந்த எனக்கு ஏனோ சிறுவயது முதலே நடிப்பின் மீது அளப்பரிய ஆசை மற்றும் ஆர்வம். நாம் உண்மையாக ஒன்றை நேசித்தால் அது நம்மை நோக்கி வருமல்லவா? அதுதான் என்னை நடிகையாக்கி இருக்கிறதென்று நினைக்கிறேன்”

“முதல்பட அனுபவம் பற்றி சொல்லுங்கள்?”

“எப்படியாவது நடிகையாக வேண்டும் என்ற ஆர்வத்தில் தினமும் வீட்டில் கண்ணாடி முன்பு நின்று நடித்துப் பார்ப்பேன். திரைப்பட வசனங்களை மனப்பாடம் செய்து பேசுவேன். ஆனால் சினிமாவில் நடிகையாக எப்படி முயற்சி செய்ய வேண்டும் என்று தெரியாது. ஒருமுறை கேரளாவிற்கு லொக்கேசன் பார்க்க வந்த இயக்குநர் சாமி சார் கண்ணில் நான் படவும், சிந்துசமவெளி படத்தில் ஒரு சிஸ்டர் கேரக்டருக்கு என்னை நடிக்க அழைத்தார். என் பள்ளிப்படிப்பு காரணமாக அப்படத்தில் நடிக்க இயலவில்லை. ஆனால் அப்போது அவர்கள் மூலமாக என் போட்டோ சாட்டைப் பட இயக்குநர் கண்களில் பட அதன்பிறகு வந்த வாய்ப்பு தான் சாட்டை படம். சாட்டைப் படத்தில் நடிக்கும் போது எனக்கு சூட்டிங் பற்றி எதுவுமே தெரியாது. இயக்குநர் அன்பழகன் சார் தான் நிறைய விசயங்களை கற்றுக்கொடுத்தார். குறிப்பாக தமிழ் தெரியாததால் மிகவும் சிரமப்பட்டேன். எல்லோரும் என்னை தமிழ் தெரியவில்லை என்பதற்காக கிண்டல் செய்தார்கள். நான் அப்போது எப்படியாவது இந்தப்படம் முடிவதற்குள் தமிழ் எழுதப்படிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த ஆசை உடன் நடிக்கும் மாணவிகள் துணையோடு சிறப்பாக நிறைவேறியது. தமிழில் முதல் பட அனுபவமே எனக்கு தமிழை நன்றாக கற்றுக் கொடுத்து விட்டது.   தமிழை கற்கும் போது இருந்த காதலை தமிழை கற்றபிறகு அம்மொழி மீது அதிக காதல் வந்துவிட்டது”

“மகாமுனி அனுபவம் பற்றி?”

“என் வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்து விட்டது மகாமுனி. எனக்குப் படத்தின் கதையே தெரியாது. மெளனகுரு பட இயக்குநர் சாந்தகுமார் என்றதும் வேறு கேள்வியே கேட்கத் தோன்றாதல்லவா? அப்படித்தான் நான் எதுவுகே கேட்கவில்லை.  என்னை ஸ்கீரினில் பார்க்கும் போது எனக்கே வியப்பாக இருந்தது. அது இயக்குநர் சாந்தகுமார் சார் செய்த மேஜிக்”

“படத்தில் உங்கள் கதாப்பாத்திரம் பேசிய வசனங்கள் எல்லாம் மிகவும் காத்திரமான வசனங்கள். நீங்களே சொந்தமாக டப்பிங் பேசும்போது எப்படி இருந்தது?”

“எனக்கு டப்பிங் பேசும்போது ரொம்பப் பயமாக இருந்தது. நான் சாந்தகுமார் சாரிடம் என் வாய்ஸ் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் அவர் மிகவும் கான்பிடன்டாக பேசச்சொன்னார். அவரின் நம்பிக்கை நன்றாக வொர்க்கவுட் ஆகியுள்ளது. இதைப்போல நடிக்கும் போதும் சாந்தகுமார் நம்மை உளவியல் ரீதியாக தயார்படுத்துவார். ஸ்பாட்டில் அவர் நடித்தெல்லாம் காட்டமாட்டார். அந்தக் கேரக்டரின் மனநிலையை நம் கண்முன் கொண்டு வருவது போல விவரிப்பார். அவர் சொல்லச் சொல்ல அந்தக் கதாபாத்திரத்திற்குள் நாம் ட்ராவல் ஆகிடுவோம்.”

“நடிகர் ஆர்யாவுடன் முதல்படம் இது. ஆர்யா உங்களுக்கு உதவியாக இருந்தாரா?”

“ஆர்யா போல ஒரு அபூர்வ நடிகரை பார்க்கவே முடியாது. அவர் மிகமிக பிரண்ட்லியான மனிதர். படப்பிடிப்பில் அவர் என்னிடம் “அப்படி நடிங்க இப்படி நடிங்க” என்று எதுவும் சொல்ல மாட்டார். ஆனால் எனது நடிப்பும் நல்லா வரணும் என்று மெனக்கெடுவார். உதாரணத்திற்கு அவர் எதிரில் நிற்கையில் எனக்கு மட்டும்  கேமரா வைத்து சஜேஷன் ஷாட் எடுக்கும்போது அவர் சும்மா நின்றால் போதும். ஆனாலும் அவர் நமது ரியாக்‌ஷன் பெஸ்ட்டாக வர வேண்டும் என்பதற்காக அவரும் நடித்துக் கொண்டிருப்பார். இப்படி சக ஆர்ட்டிஸ்ட் நடிப்பும் நல்லா வரவேண்டும் என்பதற்காக மெனக்கெடும் நடிகர்களை நான் பார்த்ததில்லை”

“மகாமுனி படத்திற்காக உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு எது?”

“எங்கள் இயக்குநர் சாந்தகுமார் சார் எடிட்டிங்கில் இருக்கும் போது என்னிடம், “நீ நடித்த கேரக்டர்ல வேற யாரையும் நினைச்சுப் பார்க்க முடியல” என்று சொன்னார். எனக்கு லைப்லாங் மறக்க முடியாத பாராட்டு அது.”

“உங்களின் அடுத்தடுத்த படங்கள்”?

” ஐங்கரன் படம் ரிலீஸாக இருக்கிறது. எல்லாருக்கும் பிடிக்கும் அளவில் ஜனரஞ்சகமான படமாக அது உருவாகி இருக்கிறது. விக்ரம்பிரவுடன் அசுரகுரு படத்திலும் நடித்திருக்கிறேன். மேலும் இரண்டு புதியபடங்கள் உள்பட ஒரு மலையாள படத்திலும் கமிட்டாகியுள்ளேன்”

“சினிமாவில் உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்?”

“எல்லா நடிகர்களும் பிடித்த நடிகர்கள் தான். ரஜினிகாந்த் சாரை கூடுதலாக பிடிக்கும். நடிகைகளில் நயன்தாரா ரொம்பப்பிடிக்கும்”

“இந்தமாதிரி படங்கள் அல்லது இந்தமாதிரி கேரக்டர்கள் தான் நடிக்கணும் என்ற வரையறை எதுவும் வைத்துள்ளீர்களா?”

“அப்படி எந்த வரையறையும் வைத்துக்கொள்ளவில்லை. நான் நடிக்கணும் என்று மிகவும் ஆசைப்பட்டு சினிமாவிற்கு வந்தேன். நடிக்கணும் என்ற ஆசையோடு வந்தேனே ஒழிய இந்தமாதிரி தான் நடிக்கணும் என்று வரவில்லை. அதனால் எனக்கு நடித்தால் மட்டும் போதும். ஐ லவ் ஆக்டிங்” என்றார் உற்சாகமாக

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img