ஸ்டைலிசான படங்களை இயக்குவதற்கு பெயர் போன கௌதம் மேனன் ஒரு இயக்குனராக இருந்தவரைக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. எப்போது அவர் தயாரிப்பாளராக மாறினாரோ அப்போது இருந்து அவரை ஏழரை நாட்டு சனி பிடித்துக் கொண்டது என்றே சொல்லலாம். அவர் தயாரித்த படங்கள் ஒரு சில தோல்வியை தழுவிய நிலையில் வேறு சில படங்களும் தயாரிப்பில் இருந்ததால் மிகப்பெரிய அளவில் கடன் சுமைக்கு ஆளானார்.
அதற்கு அடுத்ததாக தயாரிப்பை நிறுத்திவிட்டாலும் அவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் ரிலீஸ் ஆகும் சமயத்தில் இந்த கடன் பிரச்சினை பெரிய அளவில் தலைதூக்கி அவரது படங்களுக்கு ரிலீஸ் நேரத்தில் மிகப்பெரிய குடைச்சலை கொடுக்கின்றன. அந்த வகையில் விக்ரமை வைத்து அவர் இயக்கிய துருவ நட்சத்திரம் படமும் இதுபோன்று பொருளாதார சிக்கலில் சிக்கிக் கொண்டு பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.
இந்தப் படம் ரிலீஸாக திரையுலகில் இருந்து யாரும் தனக்கு உதவிக்கு கைகொடுக்கவில்லை என்று கூறியுள்ள கௌதம் மேனன், “இயக்குனர் லிங்குசாமி ஒருவர் மட்டும்தான் அவ்வப்போது தொடர்ந்து இந்த படத்தின் ரிலீஸ் குறித்து தன்னிடம் பேசி வருவதுடன் அந்த பிரச்சனையை தீர்க்க ஏதாவது தன்னால் செய்ய முடியுமா என்று தனது தம்பி சுபாஷ் சந்திர போஸுடன் இணைந்து வேலைகளை செய்து வருகிறார் திரையுலகில் எனது நண்பர் என்றால் அவர் ஒருவர் தான்” என்று கூறியுள்ளார் கௌதம் மேனன்.